இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான சுரேன் சுரேந்திரன் (பிரித்தானியா), கலாநிதி சோமா இளங்கோவன்(அமெரிக்கா), கலாநிதி எலியஸ் ஜெயராஜ்(அமெரிக்கா), கலாநிதி வாணி செல்வராஜ்(கனடா), கலாநிதி காருண்யன் அருளானந்தம்(அமெரிக்கா) உள்ளிட்டவர்கள் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம்பெத் வான், தேசிய பாதுகாப்பு சபையின் இலங்கை,  நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பணிப்பாளர், செனட் அலுவலகத்தின் வெளி விவகார குழுவின் சிரேஷ்ட பணிப்பாளர், உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன.

இந்த சந்திப்பின்போதே அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் மேற்கண்டவாறு உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விடயம் சம்பந்தமாக அமெரிக்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் உள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஊக்குவிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கால எல்லை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்கான சர்வதேசத்தின் கரிசனை தொடர்ச்சியாக இருக்குமா என்பது தொடர்பில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவை பொறுத்தவரையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்கான அர்ப்பணிப்பான பங்களிப்பை அளிக்கின்றது.

அதன் பிரகாரம், இலங்கையின் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கை செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியும்.

அத்துடன், இலங்கையில் தற்போது அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது. இந்த குழப்பான சூழலை ஒரு எதிர்மறையான விடயமாக கருதாமல் அமெரிக்கா அனைத்து இன மக்கள் மத்தியிலும் மேற்கொண்டுள்ள உரையாடல்களின் அடிப்படையில் தற்போதைய சூழலை, நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு எவ்வாறு சாதகமாக பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்த விடயத்தில் வெவ்வேறு இனங்களைக் கொண்ட இலங்கையின் பிரஜைகள் முற்போக்காக சிந்திக்க ஆரம்பித்துள்ளமையை அடையாளம் காண்பதற்கு முடிந்துள்ளது.

இதேநேரம், தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்துக்கு பிரதான இடத்தினை கொண்டுள்ளார்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தேசிய இனப் பிரச்சினையின் மைய விடயமான அதிகாரப்பகிர்வு விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இருப்பினும், இந்தியா தொடர்ச்சியாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பிரதான விடயங்களில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளை பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இம்முறை வழமைக்கு மாறாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் அழைப்பின் பேரில் நாம் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்றிருந்தோம்.

அச்சந்திப்புக்களின்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியான மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவாக வெளிப்படுத்தினோம்.

உள்நாட்டு யுத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பாதித்தது.

இருதரப்பு மற்றும் சர்வதேச அரங்குகளில் இந்தியா தொடர்ச்சியாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

2006ஆம் ஆண்டு துணைச் செயலாளராக இருந்த ரிச்சட் பௌச்சரும், 2015இல் இராஜாங்க செயலாளராக இருந்த ஜோன் ஹரியும் மட்டுமே அதிகாரப்பகிர்வு விடயத்தினை பற்றி அழுத்தங்களை பிரயோகித்தனர்.

இந்நிலையில், இந்தியாவைப் போன்று அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

புலம்பெயர் மக்கள், ஏனைய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பொருளாதார ஆதரவைப் பெறுவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வினை காண்பது முக்கியமானதாகும்.

அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னரும் இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் நிலைநிறுத்துதல், சர்வதேச சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *