கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு !

நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நுவரெலியா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில், 11 பேர் குணமடைந்த அதேநேரம் இரண்டு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

 

எனினும் தற்போது அந்த நிறுவனத்தின் மருந்துகள் முற்றாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த மருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

இந்த நிறுவனம் இலங்கைக்கு கடந்த 7 ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்து வருகின்றது. இலங்கைக்கு மாத்திரமின்றி 53 நாடுகளுக்கு குறித்த நிறுவனம் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.

 

எனினும், துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நட்ட ஈடு வழங்கப்படும்.

மேலும் நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் உள்நாட்டில் கனிசமான அளவு வைத்தியர்களின் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவே வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60இலிருந்து 63ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு முதுகலை பட்டதாரிகளை வைத்தியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *