“இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக” எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்த்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுத்த இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதானமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் என்பதனை வலியுறுத்தியிருந்தனர்.
அதேவேளை இலங்கை அரசே உன்கையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்காணிப்பு வேண்டும், உள்ளிட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்கைளை எழுப்பியும் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.