யாழில் இலவச வகுப்புக்களை நடத்தி வந்த, நபரொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்றைய தினம் (புதன்கிழமை) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியுள்ளனர்.
இதன்போது 13 வயதான மாணவிகள் இருவர், தமக்கு இலவசமாகக் கல்வி கற்பிக்கும் ஒருவர், தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தனியார் வகுப்புக்களில் பாடசாலை மாணவிகள் மீது துஷ்பிரயோகம் நடைபெறுவது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் இதுபோல முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள பிரதானமான பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண் மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தி அதன் மூலமாக பாடசாலையின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோக்களாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் – இதனைக் கண்டு கொள்ளாது இருக்கும் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் கல்வி கற்ற சமூகம் எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
இதனைக் கண்டுகொள்ளாது கடந்து செல்வோமாயின் பாடசாலை கல்வியை தொடரும் முன் வரும் பல மாணவிகளின் எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகும் துப்பாக்கிய நிலை ஏற்படலாம் என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.