இனியும் இனமத ரீதியாக பிரிந்து நிற்காமல் அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் குளோபல் பெயார் கண்காட்சியை யாழில் இன்று(15) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தேசிய மொழியாக தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இன மத ரீதியான பேதங்களை ஏற்படுத்தி முன்னைய அரசியல்வாதிகள் எங்களை பிளவுபட வைத்தனர். அதனாலேயே இனமத ரீதியாக நாங்கள் பிளவுபட்டிருந்தோம்.
முன்னைய அரசியல்வாதிகளே இனமத ரீதியாக எங்களை பிரித்து பிளவுபட வைத்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனைவரையும் இனமத ரீதியாக ஒன்றிணைத்து நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.
நாங்கள் இனமத ரீதியாக பிரிந்திருந்தது போதும். இனிமேல் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை நாம் நோக்கினால் இனமத பேதம் இல்லாததால் தான் அந்தநாடுகள் இப்படி வளர்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
எனவே நாமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும். நான் சிங்களவர்களின் தேசிய உடையை அணிவதில்லை. ஆங்கிலேயர் உடை தான் அணிவதுண்டு. ஆனால் இங்கு தமிழர்களின் உடை அணிந்து வந்துள்ளேன். இங்கு நான் அணிந்து வந்துள்ள ஆடை புகைபடத்தை எனது மனைவிக்கு அனுப்பிய போது இனிய தமிழ் என்றார்.
அதேபோன்று இங்கு என்னுடன் இருக்கும் பணியாளர் கூட இந்த உடை மிக அழகு என்று என்னிடம் கூறியிருந்தார். நாம் எந்த ஆடை அணிந்தாலும் அழகு என்றால் அதற்கு காரணம் எங்களது மனம் அழகாக இருப்பது தான்” – என்றார்.