“பலஸ்தீனம் சுயாதீன நாடாக இருப்பதற்கான சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.” – இலங்கை நாடாளுமன்றில் மகிந்த ராஜபக்ச !

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி  வேளையில் கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பலஸ்தீனத்தில் ஏழு தசாப்தங்களாக நிலவும் பிரச்சினையால் ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த நாடு இழந்துள்ளதுடன் மேலும் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் முதல் அனைவரும் இந்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவான மக்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்கின்றனர்.அந்த அகதி முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.

இதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது தொடர்பில் இங்கே கலந்துரையாட வேண்டியது எமது கடமையாகும்.

பலஸ்தீனத்தை ஒரு நாடாக இலங்கை 1988 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. அப்போதிலிருந்து இலங்கை அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா மாநாட்டில் அரச தலைவராக உரையாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அந்த மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளதுடன் அவர்களுக்கு உதவிகளையும் வழங்கியுள்ளோம்.

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் உள்ளோம்.அந்த மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *