யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை விரைவில் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,

 

இந்நாட்டின் 80 சதவீத நிலம் அரசுக்குரியது. 20 சதவீத நிலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சனத்தொகை அதிகரிப்பால் மக்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசன செயற்பாடுகளின்போது யானைகளின் வாழ்விடங்கள், அவை பயணிக்கும் பாதைகள் பாதிக்கப்படுகின்றன. இதுவே யானை – மனித மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

 

அமைச்சு என்ற ரீதியில் இந்த யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யானை-மனித மோதலுக்கான குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை காண அமைச்சு பல செயலமர்வுகளை நடத்தியுள்ளது.

 

அதன்படி, கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரு கொள்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்தக் கொள்கையை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் மூலம் யானை மனித மோதலைத் தீர்க்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

எதிர்கால சந்ததியினருக்காக வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதுடன், வன வளங்களை செயற்றிறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்த சுற்றுலாத்துறையின் மூலம் அந்தப் பகுதி மக்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும், பாரிய அளவிலான நிர்மானங்கள் இல்லாமல் சூழல்நேய சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான அந்நியச் செலாவணியைப் பெற வன வளங்களைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *