கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்களின் தாமதத்தாலும் அசமந்த போக்காலும் குழந்தை இறந்து பிறந்துள்ளதோடு தாயின் கற்ப பையை எடுக்க நேர்ந்துள்ளதாக கணவனால் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தந்தையான இராசதுரை சுரேஷ் என்பவரால் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய பின்னர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இராசதுரை சுரேஷ்,
“கிளிநொச்சி வைத்தியசாலையில் பரிசோதனையின் போது 09ம் திகதி இறுதி திகதி கொடுக்கப்பட்டு வைத்தியர் ஒருவரால் பரிசோதிக்கப்படட போது உடல் நிறை குறைவாக இருப்பதால் குழந்தை வளர்ச்சி குறைவாக இருக்கிறது.
அதனால் 12ம் திகதி சத்திரசிகிச்சை மூலமாக குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குறித்த திகதியில் வைத்தியசாலைக்கு சென்ற போது வேறொரு வைத்தியர் இருந்தார். அவர் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை முதலில் குறித்து கொடுக்கப்பட்ட திகதி 24 ஆக இருந்த போதிலும் 26ம் திகதி வருமாறு கூறினார்.
24ம் திகதி மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் 27 ம் திகதி காலையில் மருந்தேற்றப்பட்டது. மீண்டும் 12.00 மணியளவில் மருந்தேற்றப்பட்டது. 12.30 மணியளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. 05.30 மணியளவில் குழந்தையின் துடிப்பு குறைவடைகிறது வைத்தியரை கூப்பிடுங்கள் என்று கத்தி கூச்சலிடட போதும் யாரும் வரவில்லை.
07.30 மணியளவிலேயே வைத்தியரை தொலைபேசியூடாக அழைத்து மகப்பேற்று அறைக்கு மாற்றி ஆயுதம் போட்டு பார்த்து சரிவரவில்லை என்று சத்திரசிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் 12.30 மணியளவில் குழந்தை இறந்ததாகவும் கர்ப்பப்பை அகற்றப்பட்டதாகவும் செய்தி தரப்பட்டது.
இவ் விடயம் எனது பார்வையில் இன்னொரு குழந்தை கொலை செய்யப்பட்டதாகவே கருதுகிறேன்.” என கூறியுள்ளார்.