ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பதாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கலில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும்? கறுப்பு ஜூலை போன்றதொரு நிலைமை மீண்டும் வந்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தலைவர்களிடம் எந்த அதிகாரங்களும் இல்லை.
தற்போதைய தலைவர்கள் மக்களை காப்பாற்ற முடியாத நிலையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் போடும் பிச்சைகளைப் பெற்று அபிவிருத்தி செய்வதாக சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவமானது அரசியல் இலாபம் ஈட்டும் வகையில் திட்டுமிட்டு செய்யப்பட்ட விடயமாக தற்போது வரையில் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கறுப்பு ஜூலை போன்றதொரு நிலைமை மீண்டும் வந்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தலைவர்களிடம் எந்த அதிகாரங்களும் இல்லை.
அதனடிப்படையிலேயே நாங்கள் ஜனாதிபதியுடனான அனைத்துச் சந்திப்புக்களிலும் தமிழர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். நாங்கள் ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக்கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும்.
வெறுமனே அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளைப் போடுவதும் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதும் எமது இனத்திற்கான நிரந்தரத் தீர்வுகள் அல்ல. எனவேதான் நாம் அதிகார பலத்தினைக் கோரி நிற்கின்றோம். குருந்தூர் மலை விவகாரத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். பொலிஸ் அதிகாரிகளின் தயவில் அந்தப் பொங்கல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டன.
பானையைக் காலால் எட்டி உதைத்தார்கள். இந்த விடயத்தினையே ஜனாதிபதியிடம் நாம் கூறியிருந்தோம். அவர் இதற்கு அது பொலிஸ் சம்பந்தப்பட்ட விடயம் எனக் கூறியிருந்தார். இந்த அதிகாரம் எங்களிடம் இருந்தால் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. எனவே இதற்குத் தான் நாம் எமக்கான பொலிஸ் அதிகாரமும் தேவை என்பதனை வலியுறுத்துகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டாhர்.