போதைப்பொருள் கடத்தியதற்காக குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு !

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக குவைத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையரின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹல்மில்லேவ, அதிராணிகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வயது 43 நபருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் தனது பெற்றோருடன் 14 வருடங்களுக்கு முன்னர் பிரியங்கரகம என்ற கிராமத்தில் குடியேறி தனது முதல் மனைவியைப் பிரிந்து மறுமணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், அவர் களுத்துறைக்கு இடம்பெயர்ந்ததாகவும் ஆனால் அவரது முகவரி அவரது உறவினர்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது .

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, குற்றவாளியின் தாயாரின் கோரிக்கைக்கு அமைய சடலம் கையளிக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அனுராதபுரத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் உயிரிழந்தவரின் உறவினர்களை சந்தித்த பின்னர் அவர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என குவைத்தில் உள்ள இலங்கை தூதுவருக்கு அறிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *