பெருந்தோட்ட உத்தியோகத்தர்களுக்கு 2750 ரூபா சம்பள உயர்வு. புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

மலையகப் பெருந்தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் தோட்டங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் புத்தாண்டு மாதத்திலிருந்து 2750 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் செய்துகொண்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி இந்தச் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்தச் சம்பள உயர்வு அமுல்படுத்தப்படுவதுடன், நிலுவைத் தொகையை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் வழங்குவதெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள இறப்பர், தேயிலை, தென்னந் தோட்டங்களில் கடமையாற்றும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் நன்மையடைவார்கள் என்று இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம் தெரிவித்தார். புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி, தோட்ட உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 2750 ரூபாவாக அதிகரித்தல், வீட்டு வாடகைப் பணத்தை 20 சதவீதத்தால் அதிகரித்தல், வருடாந்த சம்பள உயர்வு இரண்டரை மடங்காக அதிகரித்தல், மரண சகாய நிதி 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 25000 ரூபா அதிகரித்தல், பெருந்தோட்ட உதவி வைத்தியர்களின் இரவு சேவைக்கான விசேட கொடுப்பனவை 25 சத வீதத்தால் அதிகரித்தல், ஒரு தோட்டத்தில் தொழில் புரியும் சேவையாளர் இடமாற்றம் பெற்றாலோ அல்லது சுகயீனமுற்றாலோ அவருக்குப் பதிலாக சேவையாற்றும் சேவையாளருககு தற்பொழுது வழங்கும் 1000/- ரூபாவை 1500/- ரூபாவினால் அதிகரித்தல்.

கடந்த (2008) வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இவ்வருடம் மார்ச் வரையிலான அதிகரிக்கப்பட்ட 2750/- ரூபா சம்பள உயர்வு நிலுவை பணத்தை எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் வழங்குதல் போன்றவற்றுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இக் கூட்டு ஒப்பந்தம் முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் ரவீ பீரிஸ் தலைமையில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் தலைவர் லலித் ஒபேசேக்கரவும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம், பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இது சம்பந்தமாக தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம் கருத்து தெரிவிக்கையில், ‘இச் சங்கம் 89 ஆம் ஆண்டுகள் சேவையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இறுதியாக 2004 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தம் தொடர்பான கடந்த ஆறு மாதங்களாக பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோட்ட சேவையாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்தது. இதனையடுத்து இம் மாதம் 2 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *