வடக்கில் தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகள் – கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார். சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற மாணவனே உயிரிழந்தார். கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார்.எனினும், இந்த வருடத்தில் தன்னால் கல்வியை தொடர சிரமமாக இருப்பதாக குறிப்பிட்டு, அடுத்த வருடத்திலிருந்து பல்கலைகழக கல்வியை தொடர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.மனஅழுத்தத்திற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுள்ளார்.இந்த நிலையில் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் குறித்த தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பல்கலைக்கழக – பாடசாலை நண்பன் ஒருவரிடம் தேசம் இணையதளம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது ” தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறவில்லை எனவும் பல்கலைக்கழக பரீட்சை கூட தொடங்காததால் அது தொடர்பில் உளநெருக்கடிக்கு ஆளாவதற்கான வாய்ப்பும் இல்லை. எனவும் தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மூன்று மாத காலங்களிலேயே குறித்த மாணவன் இடைநிறுத்தி விட்டு வெளியேறியதாகவும் அதற்கு அவருக்கு தொடர்ச்சியாக இருந்துவந்த தலையிடி சார்ந்த பிரச்சனைகளே காரணம் எனவும் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் நண்பர் தெரிவித்தார்.

குறித்த தலையிடி நோய் அவருக்கு உயர்தர பரீட்சை முடிந்த காலத்தில் இருந்தே இருந்து வந்ததனால் அது அவருக்கு பாரிய உளநெருக்கடியை உருவாக்கியிருந்ததமையே பிரதான காரணமாகும் என அறியமுடிகிறது.

இது ஒருபுறம் இருக்க பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலைகள் மலிந்து போய் காணப்படுவது கல்விகற்ற இளைஞர் தலைமுறை ஒன்றை நாம் இழந்துகொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த ஜுலை 30 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார். அது போல ஜுன் மாதம் தென் இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்ற இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இப்படியாக பல்கலைக்கழக மாணவர்கள் இடையே தற்கொலை சம்பவங்கள் மலிந்து போய் காணப்படுகின்றது. கற்றல் அழுத்தம், வீட்டில் இருந்து அதிக தூரத்தில் கற்க வேண்டிய தேவை உள்ளமை, நிதி நெருக்கடி, காதல் தோல்வி என பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் பின்னணி என கூறப்பட்டாலும் கூட; இலங்கையின் கல்வி முறை அடிப்படையில் இருந்தே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க தவறியமையே பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகளுக்கான பிரதான காரணமாகும்.

போட்டிப்பரீட்சைகளிலும் – பாடசாலை தரப்படுத்தல்களிலும் மட்டுமே கவனம் செலுத்தும் இலங்கையின் கல்வித்துறை அமைச்சும் – ஆசிரியர்களும் மாணவர்களை உடல் – உள ரீதியில் திடப்படுத்துவதற்கான கல்வித்திட்டம் ஒன்றை முன்னெடுக்காத வரை இங்கு தற்கொலைகள் மலியப்போவது இல்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *