மனித ஈடுபாடு இல்லாமல் Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளுக்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் காப்புரிமை பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் உருவாக்கும் கலைப் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்க முடியும் என மாகாண நீதிபதி பெரில் ஹோவெல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டாபுஸ் (DABUS) என பெயரிடப்பட்ட Ai அமைப்பின் சார்பாக விஞ்ஞானி ஸ்டீபன் தாலர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான அமெரிக்க காப்புரிமை அலுவலக தரப்பு எடுத்த முடிவை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஸ்டீபன் தாலரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் வரவேற்றுள்ளது.
முன்னதாக, மிட்ஜெர்னி Ai துணையுடன் உருவாக்கப்பட்ட படைப்புக்கு படைப்பாளி ஒருவர் அமெரிக்காவில் காப்புரிமை கோரி விண்ணப்பித்தார். அது நிராகரிக்கப்பட்டது. தான் அந்தப் படைப்பை உருவாக்க Ai தொழில்நுட்பம் ஒருங்கிணைத்ததாக அவர் வாதம் செய்தார். இருந்தும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இலக்கியம், இசை, படம் மற்றும் பிற கலை வடிவங்களை உருவாக்க Ai அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மனிதர்கள் உருவாக்கும் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.