குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டுமொரு முறை யுத்தத்தை தூண்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை என கிளிநொச்சி மாவட்டத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட போது திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
“குருந்தூர் மலை தொடர்பில் தற்போது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. எந்தவொரு மதமும் தமது உரிமைகளுக்காக வன்முறைகளில் ஈடுபடுமாறு கூறவில்லை. இது தொடர்பில் நாம் கவலையடைய வேண்டும்.
அனைத்து மதங்களும் அனைத்து மதத்தையும் மதிக்குமாறு போதித்துள்ளது.
குருந்தூர் மலை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதை அனைவரும் அறிந்த விடயம். தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக அமைந்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் மூலம் குறித்த பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறாக இதனை வைத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டக் கூடாது.
குருந்தூர் மலையின் தொல்பொருள் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.