துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிசாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்தச் சவாலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“பொலிசாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்யும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது பொலிசாரை தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்பிற்கு நிறுத்தியுள்ளார். இது அவருக்கு வெட்கக்கேடான விடயம்.
வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியிலும் இனவாத கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார். கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முன்கூட்டியே பெருமளவு காவல்துறையினரை தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.
கஜேந்திரகுமாருக்கு துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிசாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும்” என சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடத்தை நேற்று முற்றுகையிட்ட தமது நகர்வு இலங்கையில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையின் ஆரம்பம் என பௌத்த பிக்கு தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழு சூளுரைத்துள்ளது.
கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடங்களை முற்றுகையிடுமாறு கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்த நகர்வை அடுத்து நேற்று இந்த முற்றுகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்தை அடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடப்பகுதியில் அதிகளான காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.