யாழ் மாவட்டத்தில் 70,408 பேர் வறட்சியால் பாதிப்பு !

யாழ் மாவட்டத்தில் 22,044 குடும்பங்களைச்  சேர்ந்த 70,408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.மாவட்டச்  செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிநீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமென குறித்த பிரதேச செயலக,  பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது நெடுந்தீவு உட்பட தங்களால் நீர்வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கக் கூடிய வகையில் நீர்வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான
சேவைகள் 18 குடிநீர் மூலங்கள் மூலமாக செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை
பொறியியலாளர் தெரிவித்தார்.

அதே வேளை எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு
நீர்ப் பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *