முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

 

இன்று(31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும் அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன், புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பாக கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்

 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருப்பதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குளாய் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *