ஒரு வருட காலத்தில் ஓமானில் பணிபுரிந்த 400 புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் இலங்கைக்கு !

ஓமானில் பணிபுரிந்துவந்த 32 இலங்கையர்கள் ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்தின் ஊடாகக் கடந்த வாரம் வெற்றிகரமாக நாட்டுக்குத் திருப்பியழைத்துவரப்பட்டிருக்கின்றார்கள்.

 

ஓமான் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஓமான் குடியகல்வுத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

 

இவ்வாறு அழைத்துவரப்பட்ட இலங்கைப்பணியாளர்கள் வேலைவாய்ப்புக்காக நுழைவு வீசா அல்லது சுற்றுலா வீசாவின் மூலம் ஓமானுக்குச் சென்றவர்களாவர். இருப்பினும் அவர்களது வீசா உரியகாலத்தில் புதுப்பிக்கப்படவில்லை.

 

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போதுவரை சுமார் 400 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் ஊடாக நாட்டுக்குத் திருப்பியழைத்துவரப்பட்டிருக்கின்றார்கள்.

 

அதன்படி, சட்டவிரோதமாக ஓமானில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் அந்நாட்டிலுள்ள இலங்கைத்தூதரகத்தினால் அடையாளங்காணப்பட்டதுடன் அவர்களது பின்னணி மற்றும் அவர்கள் முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலை என்பன தெளிவாக ஆராயப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஓமான் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

அதுமாத்திரமன்றி அவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பியழைத்துவரப்படும் வரையான காலப்பகுதியில் அவர்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகள், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்குமான ஏற்பாடுகள் ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *