எதிரணி அரசியல் கட்சிகளுக்கெதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதகாரிகள் உடனடியாக மேற்கொள்ளாதுவிட்டால் எதிர்வரும் நாட்களில் இன்னும் மோசமான வன்முறைகள் இடம்பெறும் சூழ்நிலை ஏற்படுமென தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் எச்சரித்துள்ளது.
அத்துடன் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியன இல்லாத நிலையில் மேல்மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை நீதியானதும் நேர்மையானதாகவும் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு கலாசார, சமய உறவுகளுக்கான நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த பவ்ரல் அமைப்பின் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் கூறியதாவது;
எமது அமைப்பு வேட்பு மனு கையளிப்பு ஆரம்பித்த நாள் முதலே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்கின்றது. நாம் முதல் கட்டமாக தேர்தல் செயற்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் முக்கிய பொறிமுறையான நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளோம்.
இரண்டாம் கட்டமாக அக்குழுவில் தேர்தல் ஒருங்கிணைப்புக்கான பிரதான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதுடன், அவரையும் உள்ளடக்கும் தேர்தல் குழுவொன்றை பவ்ரல் தலைமை அலுவலகத்துடன் இணைந்து ஏற்படுத்துவதாகும். தேர்தல் பிரசாரத்தின் போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நாளாந்தம் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளையும் தகவல்களையும் ஆராய்வதற்கான அலுவலகத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
எமது நடவடிக்கைக் குழு தேர்தல் தினத்தன்று தேர்தல்கள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும். கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை இணைத்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன. இந்நிலையில், இவற்றுக்கென மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒருங்கிணைப்பாளருக்கு உதவும் பொருட்டு தொகுதிவாரியாக பிரதேச ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதேவேளை, இம்மாகாணத்திலுள்ள 2,299 வாக்குச் சாவடிகளுக்கு தலா ஒருவர் வீதம் எமது கண்காணிப்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்களுக்கான செயலமர்வுகளையும் மாவட்டம் தோறும் நடத்தவுள்ளோம்.
இதற்கு மேலதிகமாக தேர்தல் தினத்தன்று 40 நடமாடும் வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தி 200 நடமாடும் கண்காணிப்பாளர்கள் மூலம் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களைக் கண்காணிப்பதற்காக சேவையில் ஈடுபடுத்துவதும் எமது திட்டங்களாகும்.
மேலும், எமது ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெறும் சர்வகட்சி நடவடிக்கை கூடம் தேர்தல் செயலகத்தில் இயங்கும். அதேவேளை, பிரதேச ரீதியாக நிறுவப்படும் பிரதேச சர்வகட்சி நடவடிக்கை கூடத்திலும் எமது பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.
தபால் மூலமான வாக்களிப்பு, பிரசார நடவடிக்கைகள் சார்ந்த சில சம்பவங்கள் தவிர்ந்த ஏனைய பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறாது அமைதியான முறையில் இடம்பெற்றது. நாம் அவதானித்ததன் பிரகாரம் 70% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இது அதிகரிக்கலாம்.
இதேவேளை, தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக சட்ட முறையற்றவிதத்திலான சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுத்ததுடன், வாக்களிப்பின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை, பாஸ்போட், சாரதி அனுமதிப்பத்திரம், ரயில்வே பருவகாலச் சீட்டு, தற்காலிக அடையாள அட்டை, தபால் அடையாள அட்டை என்பவற்றுக்கு அனுமதியளித்துள்ளார்.
இத்தேர்தலில் பணம் மற்றும் அரசியல் பலம் கொண்டவர்கள் அநேகர் மத்தியில் இவை இரண்டுமற்ற வேட்பாளர்கள் கவனிக்கப்படாமல் போவது ஜனநாயக பண்பல்ல. இந்த பண அரசியல் பலம் உள்ளவர்களால் 500 மில்லியன் ரூபா சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு உள்ள நிலையில், இதனை அகற்றுவதற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இட்ட முறையற்ற பிரசாரத்தை அகற்றும் போது மீண்டும் அவை ஒட்டப்படுகின்றன. இதனை நிறுத்த கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஒத்துழைப்பு அவசியம்
அத்துடன் பிரச்சினை ஏற்படும்போது சர்வகட்சி மூலம் உடனடியாக தீர்வு காண்பது போல் இதற்கும் தீர்வைக் காணவேண்டும். குறிப்பாக எவ்வித அரசியல் அடிப்படையும் அற்ற கட்சிகளும் குழுக்களும் பெயரளவில் மாத்திரம் தேர்தலில் களமிறங்குவதை மட்டுப்படுத்தாத யாதேனும் செயற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீண்டதோர் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடைய ஆவணத்தை இல்லாமல் செய்யமுடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.2,378 வேட்பாளர்களில் 19 பேரே பெண்களாவர், இது கவலைக்குரியது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் குறைந்தது 30 பெண்களை தெரிவு செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். பெண்கள் நிலைமை தொடர்பில் இந்த குறைவான எண்ணிக்கையான வேட்பாளர்கள் மூலம் பாரதூரமான பலவீனமுள்ளதை நாம் காண்கின்றோம். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
எமது கண்காணிப்பின்போது கொலைச்சம்பவம் ஒன்றுடன் 13 தாக்குதல் சம்பவங்களை பதிவுசெய்துள்ளோம். மொத்தமாக 38 முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். ஜே.வி.பி. ஆதரவாளர் கொல்லப்பட்டமை, அவர்களது அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளமையை நாம் பதிவுசெய்துள்ள நிலையில், எதிரணி அரசியல் கட்சிகளுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு குறித்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் வருடப்பிறப்புக்கு பின்னர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதுவிடின் நிலைமை இன்னும் மோசமாகும்.
17 ஆவது அரசியலமைப்பு இல்லாத நிலையில் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இல்லாது முன்னர் போன்று தேர்தல் இடம்பெறுவதால் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்.