“சிங்களவனை காட்டி தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” – சிவனேசதுரை சந்திரகாந்தன் 

“பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(31) மாலை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்திலும், உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய திட்டங்களிலும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே நாம் அடைய நினைக்கும் இலக்காகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிக்கலான சூழ்நிலை இருந்தபோது எமது கட்சியை மட்டக்களப்பு மக்கள் மீட்டெடுத்தார்கள். அதன் பெறுமதியை நாம் அரசாங்கத்துடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் மக்களுக்கு நாம் முன்வைத்த கோரிக்கைகயை நிறைவேற்றுவதில் பல தடைகள் உள்ளன. ஆனாலும் சற்றுக்காலம் தாழ்த்தியாவது அவற்றை நிறைவேற்றிக் கொடுப்போம் என நாம் நம்புகின்றோம். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பட்டிருப்பு பாலத்தை நாம் பார்வையிட்டோம். அப்பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட பாலமாகும். அதனை செப்பனிடுவதற்கு 1300 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது.

 

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள். பின்னர் பட்டிருப்புத் தொகுதியிலே சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் நாடாளுமன்றத்திலே இருந்தார். தமிழரசுக் கட்சியின் நூற்றாண்டு வரலாறு தோற்றுப்போன வரலாறாகும். இரண்டு தலைமுறைகள் அழித்துவிட்ட வரலாறாகும். அழிந்துள்ள இந்த வரலாற்றிலேயேதான் நாம் நிற்கப்போகின்றோமா என சிந்திக்க வேண்டும்.

இராசமாணிக்கம் ஐயா பிறந்த இடம் மண்டூர் அவர் மண்டூருக்கு கட்டிக் கொடுத்த பாலம் எங்கே? அவரது காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் எங்கே? அவர் மக்களுக்காக செய்த பணி ஒன்றுமே இல்லை. மாறாக பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என சாதாரண மக்களை உசுப்பேற்றி விட்டார்கள்.

தற்போது 2 தலைமுறைகள் கடந்து தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொலிஸில்  சேரமுடியாது, சிங்களவர்களுடன் சேர்ந்து நிர்வாகம் செய்ய முடியாது, ஏனைய பணிகளைச் செய்யமுடியாது, போன்ற நிலமைகளை களுவாஞ்சிகுடி மக்கள் இன்னமும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை.

இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துப்பாக்கிகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல் என“ அவர் இதன்போது தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *