காய்ச்சலுடன் சென்ற எட்டுவயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – கவலை தெரிவிக்கிறோம் என அறிவித்துள்ள யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி !

யாழில். மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை, மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 08 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

26ஆம் திகதி, சிறுமியின் கையில் “கனுலா” (குளுக்கோஸ் , மருந்துகள் ஏற்றுவதற்காக மணிக்கட்டின் கீழ் பொருத்தப்படும் ஊசி) பொருத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு மருந்து (அன்டி பயோடிக்) ஏற்றப்பட்டுள்ளது.

“கனுலா” உரிய வகையில் சிறுமியின் கையில் பொருத்தாததால், சிறுமிக்கு வலி ஏற்பட்டுள்ளது. அது குறித்து சிறுமி கூறிய போதிலும் தாதியர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் சிறுமியின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மணி கட்டின் கீழ் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக சிறுமியின் கையை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தொலைபேசி ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸின் உத்தரவின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் அசமந்த போக்கு தொடர் கதையாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரச்சினைகளும் ஏற்படும் போதும்  விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும் இதுவரை எம்மாதிரியான நடவடிக்கைகள் தீர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியே என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *