புதிய கல்வி முறைகளை உருவாக்கும் போது மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களை பெற தீர்மானம் !

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 140 மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இந்தச் சந்திபப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இந்நாட்டு அரச நிர்வாக செயற்பாடுகளில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் இடம் என்ற வகையில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தேவையான பாடங்களை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் அந்த பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுமெனவும், புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுதல் உட்பட கல்வித்துறையின் பல்வேறு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் மாணவர்களிடத்தில் கருத்துகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களைத் தெரிவுசெய்த பின்னர், அதன் முதல் கூட்டத்தை இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றம் கூடிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிநிதிகளான மாணவர் குழுவொன்றும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதோடு, தமக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை, தமது சகோதர மாணவர் குழுவுக்குப் பெற்றுத் தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் வதுகாரதவத்த, ஆசிரியர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *