“முஸ்லிம் சமூகத்தைக் கருவறுக்வே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.” – நாடாளுமன்றத்தில் ரிஷாட் !

ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில்தான் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, செனல்-4 தொலைக்காட்சி சாட்சியங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

செனல்-4 அதிர்வலைகள் குறித்து பாராளுமன்றத்தில் (05) உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

 

“மதங்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி ஆட்சியைப் பிடிக்கவும் மற்றும் அதிகாரத்தில் நிலைக்கவும் முயன்ற தீயசக்திகளை மக்கள் புறந்தள்ளியுள்ளனர். இவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அடையாளங்காட்டுவது அவசியம். புலனாய்வுப் பிரிவினரால் இக்குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். எனவே, சர்வதேச விசாரணைகளூடாகவே ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

 

முஸ்லிம் சமூகத்தைக் கருவறுத்து, அப்பாவிகளைச் சிறையிலடைத்து மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படவும் இந்தத் தாக்குதலையே இனவாதிகள் பயன்படுத்தினர். ஈஸ்டர் தாக்குதலை இயக்கிய சக்திகள் முஸ்லிம்களின் தலையில் பாரத்தையும் குற்றத்தையும் சுமத்தித் தப்பிக்கப் பார்த்தனர். ஆனால், சனல்-4 சகல விடயங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

 

இந்தத் தாக்குதலால் முஸ்லிம் சமூகமே ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கப்பட்டது. என்னைச் சிறையிலடைத்தனர், எனது சகோதரரை சிறையிலடைத்து வழக்குத் தொடுத்தனர். ரியாஜ் பதியுதீன் மீது எவ்வித குற்றமும் இல்லையென நிரூபிக்கப்பட்டும் அவருக்கு எதிரான வழக்கு இன்னும் வாபஸ் பெறப்படவில்லை.

 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரியாஜ் பதியுதீன் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் உள்ளிட்ட முஸ்லிம்களின் முன்னோடிகளையும், பிரபலங்களையும் சிறையிலடைத்து சீரழித்தனர். ஜாமிய்யா நளீமிய்யா மாணவன் அஹ்னாப் என்பவர் கவிதை எழுதியமைக்காக மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இறுதியில், சர்வதேச பயங்கரவாதியென்ற முத்திரையும் அம்மாணவனுக்குச் சுமத்தப்பட்டது. குருநாகல் முதல் மினுவாங்கொடை வரையிலான முஸ்லிம்களின் சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் சூறைாயடப்பட்டன. பௌசுல் அமீர் என்ற வர்த்தகர் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் முன்னால் அசிற் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் செய்து, இனவாதத்தை கொளுந்துவிட்டெரியச் செய்தது யார்? ஆட்சி, அதிகாரத்தைப் பிடிப்பதற்காக ஈஸ்டர் தாக்குதலைச் செய்வித்த சக்திகளே!

 

எனவே, இன்றும் மறைமுகமாக அதிகாரத்திலுள்ள இவர்களை புலனாய்வுத்துறையினரால் விசாரணை செய்ய முடியாது. சர்வதேச விசாரணைகளூடாகவே இவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *