மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 81 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரையான காலப்பகுதியிலேயே இவ் எண்ணிக்கையான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 28 பாரியளவிலான வன்முறைச் சம்பவங்களும் 53 சிறுவன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கடுவெல தேர்தல் தொகுதியிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதுவரை நடைபெற்ற வன்முறைகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதுடன் ஒருகொலை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவட்ட அடிப்படையில் கொழும்பில் 33 வன்முறைச் சம்பவங்களும் கம்பஹாவில் 25 வன்முறைச்சம்பவங்களும் களுத்துறையில் 23 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், கட்சி அடிப்படையில் ஐ.ம.சு. முன்னணிக்கு எதிராக 21 சம்பவங்களும், ஐ.தே.க.வுக்கு எதிராக 07 சம்பவங்களும் ஜே.வி.பி.க்கு எதிராக 01 சம்பவமும் ஏனைய கட்சிகளுக்கு எதிராக 52 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.