நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் ஒன்பது நாள் ஆண் குழந்தையொன்றை கடத்திச் செல்ல முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதான பெண்ணை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிவான் லலித் ஏக்கநாயக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
நாவலப்பிட்டி வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணொருவர் அங்கு பிரசவ வார்ட்டில் தங்கியிருந்த பெண்ணுடன் சிநேகிதம் வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் அப்பெண்ணின் 9 நாள் ஆண் குழந்தையை இவர் கடந்த 9 ஆம் திகதி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். குழந்தையின் தாயிடம் டாக்டர் அவரை அழைப்பதாகக் கூறி வெளியே அனுப்பிவிட்டே இவர் குழந்தையை கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அங்குவந்த குழந்தையின் தாய் எழுப்பிய கூக்குரலையடுத்து உஷாரடைந்த வைத்தியசாலையின் பணியாளர்கள் குழந்தையைத் தூக்கிச் செல்ல முயன்ற பெண்ணைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டிப் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.