நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி மக்கள் அச்சமும் பீதியுமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்துவதில் ஊடகங்களும் பக்க பலமாய் இருத்தல் அவசியமாகுமென்று மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குறிப்பிட்டார். கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று கம்பளை நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை, நாட்டின் நிர்வாகத்துறைசார் நிறை குறைகளை சுட்டிக் காட்டும் ஊடகவியலாளர்களின் பணி தேசியப் பணியாகும். ஊடகங்களுடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் எனது பணிகளை இலகுவில் முன்னெடுக்க வழிவகுக்கின்றது.
பொலிஸ் பணி கௌரவமானது. மக்களின் அங்கீகாரம் பெற்ற பணியாகும். இதனால், தான் பொது மக்கள் பொலிஸாரின் சிறு தவறைக் கூட ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை.
பொலிஸ் பணியை வேதனத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. நாம் புரியும் பணி பணத்தால் அளவிடக் கூடியதல்ல. மக்கள் சேவையால் திருப்தி காண வேண்டும். பொலிஸ் சேவையின் மீது மக்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். எனவே, சில சேவைகளை பொலிஸாரால் மாத்திரமே மேற்கொள்ள முடியம். இதனை வேறு எவராலும் மேற்கொள்ள முடியாது என்றார். இதில் கம்பளை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரி ரட்ன மற்றும் கம்பளை, நாவலப்பிட்டி, புசல்லாவ, கலஹா, குருந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.