வீதியில் இரத்த ஆறு போல் ஓடிய 20 லட்சம் லீட்டர் கருந்திராட்சை மதுபானம் !

தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு போர்த்துக்கல். இதன் தலைநகரம் லிஸ்பன். தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனாடியா பகுதி.  இங்குள்ளது சவோ லவுரென்கோ டோ பைர்ரோ பகுதி. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த ஊரில் டெஸ்டிலேரியா லெவிரா எனும் மது உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ரெட் வைன் எனப்படும் கருந்திராட்சைகளில் இருந்து காய்ச்சி வடிகட்டி, பதப்படுத்தப்படும் மது தயாரிக்கப்படுகிறது. இங்கு இவர்கள் தயாரிக்கும் மது, மிக பெரிய அளவிலான பீப்பாய்களில் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட இரு பீப்பாய்கள் உடைந்ததால், அதிலிருந்த மது சாலைகளெங்கும் ஓடியது. ரத்த ஆறு போல சிவப்பு நிறத்தில் ஓடிய இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஓடிய மதுவின் அளவு சுமார் 20 லட்சம் லிட்டர் (2.2 மில்லியன் லிட்டர்) இருக்கலாம் என்றும் சுமார் 20 லட்சம் மது பாட்டில்களுக்கான கொள்ளளவு இருக்கும் என்றும் அந்நாட்டு பத்திரிக்கைகள் கணிக்கின்றன. இந்த மது ஆறு ஒரு வீட்டின் கீழ் தளத்தின் உள்ளே புகுந்தது. அதிர்ஷ்டவசமாக, தற்போது வரை இதனால் யாருக்கும் எந்தவித ஆரோக்கிய கேடும் ஏற்படவில்லை.  அந்த ஊரில் உள்ள செர்டிமா ஆற்றில் இது கலந்து விடக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மது ஆற்றின் ஓட்டத்தை தடுத்து, அதனை அங்குள்ள ஒரு வயல்வெளியில் செல்லுமாறு பாதை அமைத்தனர். இதனால், செர்டிமா நதியில் இது கலப்பது தடுக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், ஊரை சுத்தம் செய்யும் செலவையும் முழுவதும் ஏற்பதாகவும் டெஸ்டிலேரியா லெவிரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கண்ட மதுப்பிரியர்கள், வீணாக சாலையில் உயர் ரக மது ஓடுவது குறித்து வேடிக்கையான கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *