“சனல் 4 வெளியிட்ட ஆவணத்தை பயன்படுத்தி ராஜபக்சக்களையும், நாட்டின் இராணுவத்தையும் பழிவாங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சி.”- ஜயந்த சமரவீர குற்றச்சாட்டு !

“இலங்கை விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே  தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பிரதான இலக்காகும். இதனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஊடாக அடைந்துக் கொள்ள  கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.” என தேசிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள சுதந்திர தேசிய முன்னணியின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடக செயலாளராக பணி புரிந்த அன்ஷிப் அசாத் மௌலானா முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் புகழிட கோரிக்கைக்காக நாட்டை சர்வதேச மட்டத்தில் நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை கொண்டு ஒரு தரப்பினர் ராஜபக்ஷர்களை பழிவாங்க முயற்சிக்கிறார்கள்.

ராஜபக்ஷர்களின் பலவீனமான அரச நிர்வாகம்,ஊழல் மோசடி என்பனவற்றால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எமக்கும் ராஜபக்ஷர்கள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் காணப்படுகிறது.

ராஜபக்ஷர்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வழங்கிய நிதிக்கு அமைவாகவே சனல் 4 ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கைக்கு எதிராக செயற்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் காணொளி வெளியாகியுள்ளது.

சனல் 4 காணொளி வெளியிட்டவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இதனையே வலியுறுத்தியுள்ளார்.

ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பங்களிப்பு விசாரணை அவசியம்’ என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை விவகாரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பிரதான இலக்காகும்.

அதை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஊடாக அடைந்துக் கொள்ள  கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *