திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கி வந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (18) குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கொழும்பு ஏ6 பிரதான வீதியூடாக திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியானது சர்தாபுர பகுதியில் வைத்து தாக்கப்பட்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் பயணித்த குறித்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களுக்கு ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.