திலீபனை நினைவு கூற தடைவிதித்த கொழும்பு நீதிமன்றம் !

கொழும்பு மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (19) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும் மருதானை பிரதேசத்தில்  நினைவேந்தல்களை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை மற்றும் மருதானை  பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்த தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்’ என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று செவ்வாய்கிழமை பி.ப 3.00 மணிக்கு மருதானையில் அமைந்துள்ள சமய, சமூக நடுநிலையத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நோக்கிப் பயணித்த திலீபனின் நினைவு ஊர்தி மீதும், அந்த ஊர்தியில் பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில் ‘முதுகெலும்பு இருப்பவர்கள் ஆயத்தமாகுங்கள். கொழும்புக்கு வருகைதரும் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதிவுகள் நேற்று முன்தினமும், நேற்று காலையிலும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளப்பக்கங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

அதனையடுத்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாகவும், வன்முறைத்தாக்குதல்கள் மற்றும் அநாவசியமான குழப்பங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் இன்று மாலை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வை இரத்துச்செய்வதாக கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் காலை அறிவித்தது.

இதுஇவ்வாறிருக்க பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை நேற்றையதினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நடைபயண ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *