திருவள்ளூர் (தனி), பெரம்பலூர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புகார்கள் வந்ததால் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, தேர்தல் பணிகளை அதிமுக வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் மூலம் விசாரிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் (தனி) மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நேற்று மாற்றினார். அதனால், 2 வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.