சிறுவர் கைகளில் புத்தக பைகளையே கொடுப்பேன்; துப்பாக்கிகளை அல்ல ‘சிறுவர் வலியை உணர்ந்தவன் நான்’ – கிழக்கு முதல்வர்

hotal-cm.jpgஒரு சிறுவர் போராளியாக நான் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்ததனால் சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுவதால் அவர்கள் எதிர்கொள்கின்ற வலிகளை நேரடியாக உணர்ந்தவன் என்ற வகையில் இனி வருகின்ற காலங்களில் எந்தவொரு சிறுவர்களையும் எந்தவொரு அமைப்பிலும் இருப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

திருமலையிலுள்ள வெல்கம் ஹோட்டலில் இடம்பெற்ற கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தலைமையுரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிட்ட முதலமைச்சர்

நான் தற்போது கிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருக்கின்ற இத்தருணத்தில் சிறுவர்கள் நலன் தொடர்பாக அதிக அக்கறை கொள்வதற்குரிய அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன். தமிழ் மக்கள் அரசியல் கட்சியினைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் பாதுகாப்புக் காரணம் கருதி சில சிறுவர்கள் இணைந்திருந்தார்களே தவிர, நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் வலுக்காரமாக சிறுவர்களை எமது அமைப்பில் சேர்க்கவில்லை.

எம்முடன் இணைந்திருந்தவர்களில் அனைவருமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஏனைய சில ஆயுதக் குழுக்களில் தற்போதும் சிறுவர் போராளிகள் இருப்பதாக அறிய முடிகின்றது. எனவே அந்தச் சிறுவர்களின் மறுவாழ்வு தொடர்பாக யுனிசெப்புக்கும் பொலிஸாருக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.

எதிர்காலத்தில் சிறுவர்களின் கைகளிலே புத்தகப் பைகளை மாத்திரம் கொடுபேனே தவிர, மாறாக துப்பாக்கிகளை ஏந்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

இக் கருத்தரங்கிற்கு நீதி அமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத், கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சங்கர், திருமலை மாவட்ட பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, யுனிசெப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். இதே கருத்தரங்கு மட்டக்களப்பு கச்சேரியிலும் இடம்பெற்றது. இதிலும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பகீ
    பகீ

    ஆறு வயதுச் சிறுமியின் வலி தெரியுமா?

    Reply
  • Thirumalai vasan
    Thirumalai vasan

    எதிர்காலத்தில் சிறுவர்களின் கைகளிலே புத்தகப் பைகளை மாத்திரம் கொடுபேனே தவிர மாறாக துப்பாக்கிகளை ஏந்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.- அப்ப அந்த ஆறு வயதுச்சிறுமியிடமிருந்து புத்தகப் பையைப் பிடுங்கிய உங்கள் சிஷ்யர்களுக்கு நீங்கள் தான் மரண வழியைக் காட்டினீர்களா? இப்பொது காரணம் புரிகின்றது தலைவா..

    திருமலைவாசன்

    Reply
  • nadesh
    nadesh

    யாருடைய வலியும் அவருக்கு தெரியவராது. புரியவராது. காரணம் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பயிற்சியில் வளர்க்கப்பட்டவர். சித்திரவதைகள் எப்படிக் கொடுக்க வேணும் என்று புலிகளால் பயிற்றுவிக்கப் பட்டவர்கள். தற்சமயம் பிரபாவை விட்டுப் பிரிந்த புலி என்பதே வித்தியாசம்.

    Reply