இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று அதிகாலையிலிருந்து தூரச்சேவைகள் உட்பட நாடு முழுவதும் எதுவித தங்குதடையுமின்றி பஸ் சேவைகள் இடம்பெறுவதாக சபையின் பிரதான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான அத்தியட்சகர் என். கே. ஏ. டபிள்யூ. குணவர்தன தெரிவித்தார்.
நேற்று முற்பகல் வரை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு 101 பஸ் வண்டிகள் வந்து சேர்ந்ததாகவும், தூர இடங்களுக்குத் தடங்கலின்றி பஸ் சேவைகள் நடைபெறுவதாகக் கூறிய அத்தியட்சகர், “பஸ் இல்லை” என்ற நிலையை இல்லாமற் செய்யும் அளவுக்கு பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். இ. போ. ச. சாலை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் சாதகமான முடிவைப் பெற்றுத் தந்து சுற்று நிருபத்தை வெளியிட போக்குவரத்து அமைச்சருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் நாடு முழுவதும் இ. போ. ச. பஸ் சேவை வழமைக்குத் திரும்பியது.
புத்தாண்டு முற்பணம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நண்பகலில் இருந்து திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதனால், பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். சிலர் பஸ் இல்லாத காரணத்தினால் தனியார் வேன்களுக்கு ஹட்டன் நோக்கிச் செல்ல ஆள் ஒருவருக்கு 500 ரூபா முதல் 1000 ரூபா வரை செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுட்டது. அவ்வாறும் வரமுடியாதவர்கள் பலர் விடுதிகளில் தங்கினர்.
நேற்று (11) அதிகாலை முதல் இரத்தினபுரி பஸ் டிப் போவுக்கு சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட பஸ் வண்டி கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிப்போ அதிகாரியொருவர் தெரிவித்தார். சன நெரிசல் மிக்க இச்சந்தர்ப்பத்தில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என பயணிகள் தெரிவித்தனர்.