பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.
இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”
இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.