“எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சார விநியோக கட்டமைப்பில் தற்காலிக தீர்வு தான் எட்டப்பட்டுள்ளது.” – சம்பிக்க ரணவக்க

வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு தீர்மானமிக்கது என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.வங்குரோத்து நிலையடைந்துள்ளதால் இந்த பாதையில் செல்லுங்கள் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழி காண்பித்துள்ளது.அரசாங்கமும் அந்த பாதையில் செல்கிறது.

ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை முழுமையாக அமுல்படுத்தினால் தான் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட நிதியுதவி கிடைக்கப்பெறும்.முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை முழுமையாக செயற்படுத்தவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். ஆகவே இரண்டாம் தவணை நிதியுதவி கிடைப்பனவு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டி செலுத்தல் 2022.04.12 ஆம் திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.கடன் செலுத்த முடியாத காரணத்தால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இலங்கை எப்போது பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்தும் என பிரதான நிலை கடன் வழங்குநர்கள் காத்துக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மை.

வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்தும் வழிமுறையை இலங்கை இதுவரை அறிவிக்கவில்லை அது பாரிய பிரச்சினைக்குரியது என நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச வருமானத்தை அதிகரிக்குமாறு நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாணய நிதியம் குறிப்பிடாது.அரசாங்கமே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறுகிய காலத்துக்குள் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளாவிட்டால் அரச சேவையாளர்களுக்கான சம்பளம் வழங்கல்,இலவச கல்வி, இலவச மருத்துவம், நலன்புரி சேவைகள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படும்.சர்வதேச நாணய நிதியத்தி;ன் முதல் தவணை நிதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட 15 சதவீத அரச வருமான இலக்கை அரசாங்கம் அடையவில்லை.

எரிபொருள், எரிவாயு உட்பட மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைக்கப்பெறுகிறது,நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இவை தற்காலிக தீர்வே தவிர நிலையானதல்ல, நாடு வெகுவிரைவில் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும் என்று நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தேசிய மட்டத்தில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *