உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கை – இலங்கைக்கு பின்னடைவு !

கனடாவின் ஃப்ரேசர் நிறுவனத்துடன் இணைந்து அட்வகேடா நிறுவனம் வெளியிட்ட உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கையில் உள்ளடங்கிய 165 நாடுகளில் இலங்கை 116 வது இடத்தினைப் பிடித்துள்ளது.

 

165 நாடுகளின் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தனிநபர்களின் பொருளாதார சுதந்திரத்தை அதாவது தங்கள் சொந்த பொருளாதார முடிவுகளை எடுக்கும் திறனை வெளியிடும் அறிக்கையே இந்த பொருளாதார சுதந்திர அறிக்கையாகும்.

 

இதில் நாட்டின் ஒழுங்குமுறை, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம், அரசாங்கத்தின் அளவு, சட்ட அமைப்பு, சொத்து உரிமைகள் மற்றும் நல்ல பணக் கொள்கை என்பன அடங்குகின்றது.

மேலும் இந்த தரவரிசையில் இப்போது முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது, அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஹாங்காங், 3 ஆம் இடத்தில் சுவிட்சர்லாந்து, 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து, 5 ஆம் இடத்தில் அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முறையே 6 தொடக்கம் 10 ஆம் இடம் வரை தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

மேலும் ஜப்பான் (20வது), ஜெர்மனி (23வது), பிரான்ஸ் (47வது) மற்றும் ரஷ்யா (104வது) ஆகிய இடங்களை முறையே பெற்றுள்ளன. வெனிசுலா மீண்டும் கடைசி இடத்தினைப் பெற்றுள்ளது.

வட கொரியா மற்றும் கியூபா போன்ற சில நாடுகளின் தரவுகள் இல்லாததால் அவற்றை தரவரிசைப்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் தரவரிசையில் 104 வது இடத்தில் இருந்த இலங்கை 116 ஆவது இடத்தினை அடைந்திருப்பது பொருளாதார சுதந்திரத்தில் சரிவடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதார சுதந்திரத்தின் 5 துணைக் கூறுகளில் 4 அந்தந்த தனிப்பட்ட மதிப்பெண்களில் சரிவை பதிவு செய்வதால், இலங்கையின் மதிப்பெண்ணில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அளவு, பணத்திற்கான அணுகல், சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் கடன், உழைப்பு மற்றும் வணிகத்தின் கட்டுப்பாடு ஆகிய கூறுகளில் சரிவை சந்தித்துள்ளது.

சட்ட அமைப்பு மற்றும் சொத்து உரிமைகள் மதிப்பெண்ணில் முன்னேற்றத்தை காட்டிய கூறாகும்.

இந்த பின்னடைவிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளாக நிலையான பணம் மற்றும் நிதி சூழலில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யவும், வேலை செய்யவும், பரிவர்த்தனை செய்யவும் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கபட்டால் இலங்கை இந்த சரிவிலிருந்து மீண்டுவர முடியும் என அட்வகேடா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *