ரணில் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானால் அவருடன் விவாதத்திற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் -ஐ.தே.க.

போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சவாலை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தான் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் ஜனாதிபதி தயக்கம் காட்டாமல் மேல்மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்திற்குரிய திகதியை நிர்ணயித்து அறிவிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவரின் சவாலை ஜனாதிபதி தைரியமிருந்தால் ஏற்று விவாதத்துக்கு முன்வரவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முதலில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க கூறியதாவது;

கடந்த வியாழக்கிழமை மத்திய கொழும்பில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்; தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வாய்ப்பை ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் அவர் போதிய ஆதாரங்களுடன் தன்னுடன் பகிரங்கமான விவாதத்துக்கு வரவேண்டுமென்று சவால் விடுத்தார். தனது சுயநல அரசியலை நோக்கமாகக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை தவறாக வழிநடத்தவே அரசும் ஜனாதிபதியும் முனைப்புக் காட்டி வருகின்றது.

தனியார் ஊடகங்கள் மௌனியாக்கப்பட்டிருப்பதோடு அரச ஊடகங்கள் 24 மணி நேரமும் ஐக்கிய தேசியக்கட்சி மீதும் ரணில் மீதும் சேறு பூசுவதையே பணியாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் வைத்தே பகிரங்க விவாதத்துக்கு ரணில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 47 இலட்சம் வாக்குகளை பெற்றவர் ரணில். நாட்டின் பிரதமராக பதவிவகித்தவர். இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். நாட்டின் மாற்றுத் தலைவராக காணப்படுகின்றார். சர்வதேசம் ஏற்றுக் கொண்ட தலைவராகக் கூடக் காணப்படுகின்றார். இத்தனை தகைமையும் கொண்டவருடன் பகிரங்க விவாதத்துக்கு வரமுடியாது என்று ஜனாதிபதி கூறுவாரானால் அது இயலாமையையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் பொய்க்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்பதையே காட்டுகின்றது எனக் கேட்டுக் கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *