“இளைஞர் யுவதிகளுக்கு Wi-Fi இலவசமாக வழங்குவதாக கூறிவிட்டு ஊடக சுதந்திரத்தை முடக்குகிறார் ஜனாதிபதி ரணில்.” – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு !

“சர்வதேச  விசாரணையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.”என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளுக்காக ஆளும் தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புகழ்பாடுகிறார்கள். ஜனாதிபதிக்கும் எமக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித முரண்பாடும் கிடையாது.ஆனால் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மக்களின் போராட்டத்தை தடுப்பதற்காக தற்போது நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கு வை-பை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமூக ஊடகங்களை முடக்குவதற்காக சட்டம் கொண்டு வர முயற்சிப்பது கவலைக்குரியது.

ஜேர்மனிய ஊடகத்துக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நேர்காணலில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்களை கொண்டு ஆளும் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளார்கள். நேர்காணலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தார்.

ஜனநாயகத்தை முடக்கி,சர்வதேசத்தை  பகைத்துக் கொண்டு ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொதுஜன பெரமுனவினர் கடந்த ஆண்டு லி குவான்யூ , மாத்தீர் மொஹமட் ஆகியோர் என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை களமிறக்கி,நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ராஜபக்ஷர்கள் தலைமறைவாகி உயிரை பாதுகாத்துக் கொண்டார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கி மீண்டும் பாடம் படித்துக் கொள்ள போகிறார்கள்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அரசாங்கம் உணர்வுபூர்மாக ஆராய்வதில்லை. எண்ணம் போல் விலையேற்றத்தை இலக்காக கொண்டுள்ளது. மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீண்டும் மின்கட்டணம் அதிகரித்தால் தென்னாசியாவில் அதிக மின்கட்டணம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

தற்போதைய மின்கட்டண அதிகரிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. பெறும் வருமானத்தில் மக்களால் எவ்வாறு வாழ முடியும். மக்களின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால் பாரிய எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *