இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 34 இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலை செய்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று தெரிவித்தது. இவர்கள் நேற்று முன்தினம் இந்திய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
34 மீனவர்களும் 7 படகுகளும் கடற் படையினரிடம் கையளிக்கப்பட்டதாக கடற் படைப் பேச்சாளர் கப்டன் மகேஷ் கருணாரத்ன தெரிவித்தார். மேற்படி மீனவர்கள் நீர்கொழும்பு, தெவிநுவர போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 108 மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் கூறியது.
ஏனைய 74 பேரும் விரைவில் நாடு திரும்புவர் எனவும் அதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது. இவர்கள் தெவிநுவர, திருகோணமலை, தங்கல்ல, கோட்டகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த படகொன்றை மடக்கிய கடலோர காவல் படையினர் அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருந்த 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும், தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த படகும் அதில் இருந்த 5 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டு காசிமேடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.