பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசிடம் அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நேற்று இலங்கையில் 2 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காரைக்குடி அருகே வடகுடியில் நிருபர்களிடம் சிதம்பரம் பேசுகையி்ல்,
இலங்கைப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் பேசியும், அறிக்கைகள் விடுத்தும் வருகின்றனர். இதிலே சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மத்திய அரசைப் பொறுத்தவரை 83ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்த வேறு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசுகள் இந்த பிரச்சனையில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமைகளை அளிக்கும் குடியுரிமை கிடைக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கையிலே தமிழர்கள் வாழும் பகுதியிலே ஒரு மாநிலம் அமைய வேண்டும். தேவையெனில் மேலும் ஒரு மாநிலம் அமையலாம்.
இது நமது கொள்கை இந்த கொள்கையில் முன்னேற்றம் கொண்ட காலமும் உண்டு, பின்னடைவு ஏற்பட்டதும் உண்டு. தற்போதைய பின்னடைவு நமக்கு மிகுந்த வருத்தத்தையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போர் நிறுத்தத்தினை பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்ததன் காரணமாகத் தான் இன்று இந்தியாவோடு சேர்ந்து உலக நாடுகளும், ஐநாவும் சேர்ந்து போர் நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றன. நேற்று முன்தினம் கூட ஐநா. சபையின் செயலாளர் பான்-கி-மூன் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து சில அழுத்தமான கோரிக்கைகளை இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறோம். மிகுந்த அழுத்தத்தோடு வற்புறுத்தி தெரிவித்திருக்கிறோம். போர் நிறுத்தத்தினை கோரிக்கை, வேண்டுகோளாக இல்லாமல் அதற்கும் மேலான தேவையாகவே கூறியுள்ளோம்.
அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தரப்பினரையும் போர் நிறுத்தத்திற்காக வற்புறுத்தி வருகிறோம். இதற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறேன். இதற்கு பலன் கிடைக்காவிட்டால் இலங்கை அரசுக்கு, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும். தமிழக மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை நம்ப வேண்டும், ஆதரிக்க வேண்டும். மத்திய அரசில் 4 ஆண்டுகள் 11 மாதம் அங்கம் வகித்து விட்டு அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டு, அதன்பின் அந்த அரசை விட்டு வெளியே வந்து இந்த அரசு இலங்கை பிரச்சினையில் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் (பாமக) கூறுவது அபத்தமான விநோதம்.
அமைச்சரவையில் நடைபெறும் விவாதங்கள் முடிவுகளை அனைத்து அமைச்சர்களும் அறிவார்கள். மாற்று கருத்து இருந்தால் அப்போது தெரிவித்து இருக்க வேண்டும். மத்திய அரசு இந்த நிமிடம் வரை போர் நிறுத்தத்திற்கான தேவையை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.
haran
உமக்கு செருப்பு எறிந்தும் விஷயம் புரியவில்லையே புலிகளை தடையை வலத்தி பேச்சுவார்த்தை மேசையைக் கூட்டி தலைவருக்கு மன்னிப்பு அளித்து செய்ய வேண்டியதை செய்யவும்.
பார்த்திபன்
//மத்திய அரசில் 4 ஆண்டுகள் 11 மாதம் அங்கம் வகித்து விட்டு அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டு, அதன்பின் அந்த அரசை விட்டு வெளியே வந்து இந்த அரசு இலங்கை பிரச்சினையில் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் (பாமக) கூறுவது அபத்தமான விநோதம்.//
பாமகவினருக்கு இலங்கைப் பிரைச்சினை என்பது ஊறுகாய் போல தேவையேற்படும் போது தொட்டுக் கொள்வார்கள். மறறும்படி யார் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவார்களோ அவர்களோடு சூடு சொரணையின்றி ஒட்டிக் கொள்வார்கள். நாளை தேர்தலின் பின் காங்கிரஸ் கட்சிக்கு போதிய இடங்கள் கிடைக்காவிடில் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் பேரம் பேசி எத்தனை மந்திரிப் பதவிகள் கிடைக்குமென்பதன் அடிப்படையில் ஆதரவு தர முன் வருவார்கள்.