“வணிகமயமாக்கப்பட்ட டியூஷன் வகுப்புகளால் இலவசக் கல்வி அழிந்து போய்க்கொண்டிருக்கிறது.” – கல்வி அமைச்சர் விசனம் !

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மாற்றத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கூட மாணவர்கள் வருகைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற வேண்டும் . அதன்படி, எதிர்காலத்தில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரு மண்டபத்தில் கூட்டி சொற்பொழிவு செய்வதன் மூலம் கல்வி என்பது அடையக்கூடிய ஒன்று அல்ல என்றும் . தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் உட்பட ஆரம்ப வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இவ்வாறான கற்பித்தல் முறைகளை பிரயோகிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளை டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பினால் பாடசாலைகள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்த அவர், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கு முகங்கொடுத்து சிரமங்களை எதிர்நோக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்விக்காக பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய இக்கட்டான நிலையை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வணிகமயமாக்கப்பட்ட டியூஷன் வகுப்புகளால் இலவசக் கல்வியின் நோக்கம் மறைந்து வருவதாகவும் இவ்வாறானதொரு நிலைமை வேறெந்த நாட்டிலும் காணப்படவில்லை எனவும், இந்த நாட்டில் ஆரம்பகால கல்வி தொடர்பாக தற்போதுள்ள கருத்துக்கள் மற்றும் அளவுகோல்கள் முற்றாக மாற்றப்பட வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *