1.
யுத்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் வெளியே வர அங்கு என்ன நடந்தது என்ற உண்மையும் வெளிவரத் தொடங்கி உள்ளது. சர்வதேச ஊடகங்கள் அனைத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள முல்லைத் தீவு யுத்தமுனையின் மனித அவலத்தை விபரிக்க வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றனர் செய்தியாளர்கள். சில காட்சிகளைக் காட்டுவதைத் தவிர்க்க இயலாததால் அது பற்றிய எச்சரிக்கையை வழங்கியே அவற்றைக் காட்சிப்படுத்துகின்றனர். இந்தப் பெரும் அவலத்திற்குக் இவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டிட முடியாத அளவிற்கு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசும் எல்ரிரிஈ யும் அப்பகுதியில் வகைதொகையின்றி மனிதக் கொடுமைகளைப் புரிந்திருப்பதை வெளியேறி வருகின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் யுத்தப் பகுதியில் இருந்து வெளியெறி வரும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவோ அவர்களுடைய துயர் துடைப்பதாகவோ இல்லை. அவர்களின் பெயரில் ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதில் அம்மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டு உள்ளனர். வன்னி மண் பூர்வீக மண் அம்மக்கள் அங்கிருக்கவே விரும்புகின்றனர் என்று கூறி அம்மக்களை யுத்தப் பகுதிக்குள் வாழ நிர்ப்பந்தித்த புலத்து உறவுகள் இலங்கை இராணுவத்தினதும் புலிகளினதும் தாக்குதலுக்கு அம்மக்களை இலக்காக்கி உள்ளனர். (இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்)
இன்று ஆயிரம் ஆயிரமாக யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்தகொண்டிருக்கும் மக்களை நோக்கி புலத்து உறவுகள் தங்கள் உதவிக் கரங்களை நீட்ட எத்தனிக்கவில்லை. தென்பகுதியில் உள்ள மக்களே சமைத்த உணவுகளை வழங்குகின்றனர். வீட்டில் ஒரு ஆபத்து என்றால் பக்கத்து வீட்டில் உள்ளவன் தான் உதவி செய்வான். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தொப்புள்கொடி உறவால் ஆபத்திற்கு தண்ணீர் கூடக் கொடுக்க முடியாது. மேலும் காயப்பட்ட மக்களை காப்பாற்றுபவர்கள் அனைவரும் தமிழ் மருத்துபவர்களும் அல்ல. இது இந்த யுத்த்தில் மட்டும் நிகழவில்லை. சுனாமிக் காலகட்டத்திலும் இதுதான் நிகழ்ந்தது.
அரசையும் மக்களையும் பிரத்துப் பார்க்க முடியாத தமிழ் தலைமைகள் செய்த அரசியலும் அதனைத் தொடர்ந்து வந்த இராணுவ மயமாகிப் போன தமிழ் அரசியலும் தமிழ் மக்களை பல பத்து ஆண்டுகளுக்கு பின்கொண்டு சென்றுள்ளது என்பது வேதனையான உண்மை. இப்போராட்டத்தை புரட்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள இருந்த அத்தனை சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு அல்லது அதனிலும் பின்னே வந்து நிற்கின்றோம்.
யுஎன் செயலாளர் நாயகம் பான்கிமூன் ராயட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு “”I intend to immediately dispatch a U.N. humanitarian team to the no-fire zone. The purpose of this humanitarian team would be to first of all monitor the situation and support humanitarian assistance and try to do whatever we can to protect the civilian population who are caught in the fire zone. – நான் உடனடியாக மனிதாபிமானக் குழு ஒன்றை தாக்குதல் தவிர்ப்புப் பகுதிக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன். அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுவதும் தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாகக்க எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் தான் அந்த மனிதாபிமானக் குழுவின் நோக்கம்” என்று தெரிவித்து இருக்கிறார். இலங்கை அரசாங்கம் இக்குழுவை கட்டாயமாகவும் அவசரமாகவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பான்கீ மூன் தெரிவித்து உள்ளார். http://www.alertnet.org/thenews/newsdesk/LN183462.htm
இதற்கு முன்னர் எல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு (ஏப்ரல் 22) இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்குப் பின்னர் இன்று ஐநா செயலாளர் நாயகமும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதே கருத்தை பிரித்தானியா – பிரெஞ் வெளியுறவுச் செயலர்கள் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையிலும் தெரிவித்து இருந்தனர். ஏற்கனவே பெப்ரவரி நடுப்பகுதியில் இணைத் தலைமை நாடுகள் மற்றும் இந்தியாவும் இக்கோரிக்கையை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. (”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்)
தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்பது பற்றி இந்திய உளவுத்துறையின் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்க பொறுப்பாக இருந்த ரோ சந்திரன் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் எண்பதுக்களின் நடுப்பகுதியில் உரையாடிய போது பிரபா அதனை மறுத்துவிட்டார். இக்கோரிக்கைகாக தன்னுடன் போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்து விட்டபின் நான் தமிழீழத்தை கைவிடமுடியாது என்று தெரிவித்து உள்ளார். இன்று கால்நூற்றாண்டுக்குப் பின் எத்தனையாயிரம் இழப்புகள். தமிழீழக் கோரிக்கை என்றைக்கோ அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. இன்றைக்கு பிரபாகரன் இந்த யுத்தப் பகுதியில் இருக்கின்றாரோ இல்லையோ அல்லது இலங்கையை விட்டுவெளியேறி இருந்தாலுமே அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்)
பிரபாவின் எதிர்காலம் மட்டுமல்ல அவர் வலிந்து தலைமை தாங்கிய தமிழ் மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. (தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்)
2.
ஏப்ரல் 20 முதல் சிகிச்சைக்கு வருபவர்கள் மூன்றில் நான்கு பங்கினர் நிலக்கண்ணி வெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் ஏனையவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வருவதாகவும் வவுனியா வைத்திய சாலையில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர் போல் மக்மாஸ்ரர் தெரிவிக்கிறார். அவர் மேலும் தெரிவிக்கையில் 450 படுக்கைகள் உள்ள வவுனியா வைத்தியசாலையில் 1700 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக கூறுகிறார். அங்குள்ள நிலைமைகள் பற்றிய அவருடைய குறிப்பு வன்னி மக்களின் நிலையை ஓரளவுக்க மனக் கண்முன் கொண்டு வருகிறது.
”நாங்கள் அங்கங்களை நீக்கும் சத்திர சிகிச்சைகளை நிறையச் செய்ய வேண்டி இருக்கிறது. பலருக்கு கீழ்கால் மற்றும் பாதங்களில் கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது. பலருக்கு அவை வெடித்துச் சிதறி உள்ளது. அதனால் நாங்கள் அவசரமாக அங்கங்களை நீக்கும் சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். பல நோயாளிகளின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. வயிற்றில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை, குடலில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை (உணவின்மையால்) நெஞ்சும் சுவாசப்பைகளும் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாள வேண்டி உள்ளது. தலைக்காயங்களையும் நாங்கள் கையாள்கின்றோம். தலையில் காயம்பட்டவர்கள் பலர் எங்களை வந்தடைவதில்லை. பஸ்களில் காயப்பட்டவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மக்கள் பஸ்களிலேயே இறக்கிறார்கள். சிலசமயம் பஸ்களில் இருந்து உயிரற்ற உடல்களே இறக்கப்படுகின்றது.”
போல் மக்மாஸ்ரர் – எல்லைகளற்ற மருத்தவர்கள் அமைப்பு
We are doing a lot of amputations. Many of the lower limbs are severely, severely injured and blown off. So we’re doing emergency amputations and a lot of these patients we’re doing abdominal expirations, or damage to internal organs and the bowel, we’re dealing with chest injuries, draining damaged chests and lungs, and we’re dealing with some head injuries as well, but the majority of the severe head injuries don’t make it to us. Buses that bring these people down, people are dying on those buses, and bodies are being taken off the buses sometimes as well.
Paul McMaster – Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF)
http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3551&cat=field-news&ref=home-center
3.
ஏப்ரல் 20ல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான இளம்தாய் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய வாக்குமூலம்.
”என்ரை பெயர் வினோ. நாங்கள் மாத்தளன் ஹொஸ்பிட்டலுக்குப் பக்கத்தில் இருந்த நாங்கள். 20ம் திகதி இரவு ஒரு மணியில இருந்து ஒரே சண்டை நடந்தது. சரியான செல்லடி. நாங்கள் வாறத்துக்காகத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்த நாங்கள். அதுக்குள்ள பதுங்குகழிக்குள்ள இருந்த நாங்கள் நினைக்கவே இல்லை உயிரோட வருவம் என்று. விடிய ஆறு மணிபோல ஓடி வந்த நாங்கள் வரும் போதும் சரியான செல் அடி. காயப்பட்டுத்தான் வந்த நாங்கள். கனபேர் செத்திட்டாங்கள். நாங்கள் காயங்களோட ஓடி வந்தநாங்கள்.
எனக்கு காலிலையும் கையிலையும் காயம் எனது கணவனுக்கு நாலைந்து இடத்தில காயம். கால்லில கையில உடம்பில தலையில எல்லாம் காயம். இன்னும் செல் துண்டுகள் உடம்பில இருக்குது.
நாங்கள் இங்கால வாறத்துக்காகத்தான் ஒரு மாசமா முயற்சி செய்து கொண்டு இருந்தம். ரெண்டு மூன்று தரம் நாங்கள் வரும்போது சரியான தடையாப் போச்சு. எங்களைத் துரத்தினாங்கள். பிடிச்சுடுவாங்கள். சரியான கரைச்சல்பட்டுத்தான் ரோட்டுக் கரையா ஒரு பதுங்குழிக்குள் இருந்தனாங்கள். அன்றைக்கு சரியான செல் அடி ஆறு மணி வரைக்கும் பங்கருக்கு உள்ளேயே இருந்த நாங்கள். பக்கத்தில எல்லாம் செல் வீழுந்து வெடிச்சது. விடிய எழும்பிப் பார்க்கேக்க எல்லாச் சனமும் ஒடினாங்கள். செல்லும் ரவுண்ஸ்ம் வந்துகொண்டிருக்க நாங்களும் எழும்பி ஓடினம். ஆஸ்பத்திரிக்கு முன்னால ஓடி வந்தநாங்கள். தண்ணிக்குள்ள விழுந்தடிச்சு ஓடி வந்தநாங்கள். அப்பிடி வரேக்க தான் காயப்பட்ட நாங்கள். நிறையப் பேர் செத்தவை. நிறையப் பேர் காயப்பட்டவை.
தங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து அங்காள போக வேண்டாம் என்று சொல்லி விடுதலைப் புலிகள் தடுத்தாங்கள். அம்மா சகோதரங்கள் எல்லாம் அங்கால. ஒருதருமே இங்கால வரேல்ல. நானும் என்ர மனுசனும் பிள்ளையும் தான் வந்திருக்கிறம் அவையின்ர நிலமை என்ன என்று ஒன்றுமே தெரியாது.
நாளாந்தம் செல்லடி. நாளாந்தம் ஆட்கள் சாகிறான்கள். நாளாந்தம் ஆட்கள் காயப்படுறான்கள். யார் உயிரோட இருப்பினம் யார் சாவினம் என்று தெரியாது. இப்படியான நிலைமையில எந்த நேரமுமே பதங்குழிக்குள் தான்.
இங்க வரேக்க ரெண்டு மூன்று சோதணைச்சாவடி வைச்சு செக் பண்ணி அனுப்பினவை. ரெண்டு பாக் கொண்டுவந்தனாங்கள். சோதிச்சவை. கொண்டுவந்த நகை காசு எவ்வளவு என்று பதிஞ்சுதான் விட்டவை. மற்றும்படி பிரச்சினையில்லை. நேற்று (21 ஏப்ரல்) ஒழுங்கான சாப்பாடு இல்லை. இன்றைக்கு கொஞ்சச் சாப்பாடு தான் வந்தது. எங்களுக்கு கிடைக்கேல்லை. மதியச்சாப்பாடு பின்நேரம் தந்தவங்க. அதுவும் ஒரு ஆளுக்குக் காணக் கூடியது தான் வந்தது. சரியா கஸ்டப்படுறம். ரெண்டு மூன்றுநாள் குழிப்பிலை வந்து அப்படியே சேறு சகதிகளோடு இருக்கிறம். உடுப்புகளும் நனைந்து அப்படி அப்படியே இருக்கிறம். மருந்து கூட ஒருக்கட்டினபடி அப்படியே இருக்கு. நேற்றுப் பின்நேரம் (ஏப்ரல் 21) தான் புதுமாத்தளனில இருந்து வவுனியாவுக்கு கொண்டு வந்தவை.
மாத்தளனில இருந்து இராணுவத்தின்ர காம்புக்கு ஓடி வந்தநாங்கள.; அந்த இடம் சாலை என்று சொல்றவை. அங்க இருந்து இன்னொரு இடத்திற்குப் போய் அங்கயும் சாப்பாடில்லாமல காஞ்சு கிடந்து ஓமந்தைக்கு கொண்டு போனவையள். பிறகு வவுனியாவுக்கு கொண்டு வந்திரக்கினம்;.
அங்க இயக்கம் பண்ட அடிச்சிருக்கு. பண்டுக்கு இங்கால கணினமான அளவு தண்ணி. அதைத்தாண்டி இங்கால வர பெரிய கடல்துண்டு மாதிரி. அதுக்குள்ளயும் இடுப்பு அளவுக்குத் தண்ணி. அதுக்ள்ளயும் பிள்ளைகள் தாண்டு ஓடேலாம. சரியா கஸ்ரப்பட்டிட்டம். அந்த நிலைமையை என்ன என்று சொல்வதென்றே தெரியாது.”
இவருடைய வாக்குமூலம் இரு வேறுபட்ட இராணுவங்களுக்கு மத்தியில் சிக்குண்ட மக்களின் நிலையைத் தெளிவுபடுத்துகிறது.
4.
யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருகின்ற மக்கள் பலரைச் சந்தித்த அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் டேவிட் சாட்டருடைய வாக்கு மூலமும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”பெருமளவிலான அகதிகளுடன் கதைத்ததில் அவர்கள் தமிழ் புலிகளின் தலைமை தங்களை நடத்தியது தொடர்பாக மிகவும் வெறுப்புடன் உள்ளனர். புலிகளின் தலைமை தொடர்பாக தமிழ் பொது மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைமை, தமிழ் மக்களுக்கான தாயகத்தை உருவாக்குவதற்காக போராடுபவர்கள், அவர்களை சுரண்டுகிறார்கள், அவர்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது சுடுகின்றார்கள், யுஎன் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் களவாடுகின்றனர்.”
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுத்தத் தவிர்ப்புப் பகுதியில் பொருட்களின் விலை உச்சமாக இருப்பதாக ஐபிசி வானொலிச் செய்திகள் தெரிவித்து இருந்தது. கடந்த பல மாதங்களாக ஐசிஆர்சி ஊடாக யுஎன் உலக உணவுத்திட்டம் அனுப்புகின்ற உதவிகளைத் தவிர எவ்வித விநியோகமும் இருக்கவில்லை. இந்த விலைக்கு விற்கப்பட்ட உணவுகள் என்பது உணவுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்ட்ட உணவுப் பொருட்களே. தற்போது வெளியேறும் மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்கும் விபரங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த தந்தையொருவர் அல்ஜசீரா தொலைக் காட்சியில் தாங்கள் அங்கு சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்ரப்பட்டதாகவும் யுஎன் அனுப்பிய உணவுகளை வாங்கவும் தங்களிடம் காசு இருக்கவில்லை என்றும் அவை உச்ச விலைக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கை இனவாத அரசு தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு இராணுவத் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடாத்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய புலிகள், அந்த இனவாத அரசு சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுப்பிய குறைந்தபட்ச உணவையும் மக்களிடம் சேரவிடாமல் தடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தங்களது பாதுகாப்பிற்காகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்குக் கூட அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உணவைக் கூட புலிகள் அம்மக்களுக்க வழங்கவில்லை. குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் பட்ட அவஸ்தையையை அத்தந்தை தொலைக்காட்சியில் விபரித்தார்.
5.
கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன் டிசம்பர் 6ல் வவுனியாவிற்கு வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய தொலைபேசிப் பேட்டியில் குறிப்பிட்ட கருத்துக்களை இங்கு மீளப் பதிவு செய்கிறேன்.
சந்திரன் தனது மகளுடன் வவுனியாவுக்கு வந்திருந்தார். குடும்பமாக யாரும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிப்பதில்லை. அதனால் குடும்பத்தின் ஒரு உறுப்பினரே வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார். அதனால் இளம் குடும்பஸ்தரான சந்திரன் தனது மனைவியை பிணையாக விட்டு வவுனியாவுக்கு வந்துள்ளார். அவரது மகள் அவருக்கு பாதுகாப்புக்காக வந்திருக்கிறார். ‘அப்பாவை தனிய விட்டால் பிடிச்சுக் கொண்டு போவினம் என்று தான் அப்பாவோடு வந்தனான்’ என்று மழழை மாறாத குரலில் அச்சிறுமி கூறுகிறார். ‘அம்மாவுக்கு பாஸ் கொடுக்கினம் இல்லை’ என்றும் அச்சிறுமி கூறினார்.
சந்திரன் தினம் தினம் வேலை செய்து சம்பாதிப்பவர். அன்றாட வேலை கிடைத்தால் தான் அவரது வீட்டில் அடுப்பு எரியும். இருந்தும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது குடும்பம் தங்களாலான உதவிகளைச் செய்கிறார்கள். மாவீரர் தின நிகழ்வுகளுக்கும் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளோடு நின்று தோள் கொடுத்தவர்.
‘என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை’ என்கிறார். ‘வெற்றியோ தோல்வியோ இந்தச் சண்டை இத்தோடு முடிந்துவிட வேண்டும்’ என்று விரக்தியுடன் கூறிய அவர் ‘எப்படியாவது திரும்பியும் கிளிநொச்சிக்குச் சென்று தனது மனைiவியை அழைத்து வர வேண்டும்’ என்கிறார். ‘பண வசதி உள்ளவர்கள் வீட்டையும் வளவுகளையும் காசையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு குடும்பமாக வெளியேறுகிறார்கள். குறைந்தது 50, 60 இலட்சம் பெறுமதிக்கு அவர்களுக்கு கொடுத்தால் பாஸ் கிடைக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். ‘ஆனால் அன்றாடம் காட்சிகளான தங்களுக்கு கொடுக்க எதுவும் இல்லை. வருவதை கண்டு கொள்ளத்தான் முடியும்’ என்கிறார்.
‘வாராவாரம் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கணக்குப் பார்த்து நிவாரண உணவு வழங்கப்படுகிறது’ என்று கூறிய சந்திரன் ரிஆர்ஓ விடம் இருந்து தங்களுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தார். அவர்களுடைய உதவி குறிப்பிட்ட கொஞ்சப் பேருக்கே வழங்கப்படுகிறது’ என்று கூறினார். சந்திரன் மேலும் கூறுகையில் ‘குடில்கள் அமைக்க வழங்கப்பட்ட பொருட்களிலும் பெருமளவிலான பொருட்கள் கள்ளச் சந்தையிலேயே விற்கப்படுகிறது’ என்றார். ‘கஸ்டப்பட்டவர்களின் நிலைதான் மோசமாக உள்ளது’ என்றார். (தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்)
சந்திரனுடைய மனைவி இன்னமும் யுத்தப் பகுதியிலேயே உள்ளார். இரு வாரங்களுக்கு முன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அதன் பின் அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை.
இங்கு வணங்கா மண் என்றும் ரீஆர்ஓ என்றும் வெண்புறா என்றும் கண்ணீர் வெள்ளம் என்றும் இரத்த வெள்ளம் என்றும் சேர்த்த நிதியில் அந்த மக்களுக்கு எதுவும் சுவறவில்லை. கடைசியில் இனவாத அரசு தனது முகத்தைக் காப்பாற்ற அனுப்பியதையும் விலைக்கு வித்துள்ளார்கள். ஆனால் புலம்பெயர் தேசத்தில் உள்ள வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ரிஆர்ஓ அங்கு வெட்டிக் கிழப்பதாக கதைசொல்கின்றன.
6.
தப்பி வந்த மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குவதற்கு அரசு தன்னைத் தயார்படுத்தி இருக்கவில்லை. உலகிலேயே மிகப்பெரும் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறும் இலங்கை அரசு அந்த மக்கள் எவ்வாறான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல. அனைத்து சர்வதேச உதவி அமைப்புகளையும் யுத்தப் பகுதிகளுக்குள் செல்லத் தடைவிதித்து தங்கால் அனைத்தும் முடியும் என்றவர்கள் அதற்கு ஏற்ப தங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இராணுவ முன்னேற்றத்தில் காட்டும் தீவிரத்தை மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசு காட்டவில்லை.
புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணிக்கும் அரசு அவர்களால் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி இருந்தது. பெருமளவிலான இழப்புக்கள் செல் தாக்குதல்களால் நிகழ்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் புலிகளை ஒழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே அரசு தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றுள்ளது. இந்த மக்களின் உயிரிழப்புகளிற்கும் ஏற்பட்ட அவலங்களிற்கும் இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள். இரு தரப்புமே மக்களுடைய நலன்களை கவனத்திற் கொள்ளவில்லை என்பதல்ல இருதரப்புமே மக்களை மண்முட்டைகளாகவே கருதி தங்கள் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு உள்ளனர். புலிகள் மக்களை மண்மூட்டைகளாக தங்களுக்கு அரணாகப் பயன்படுத்த இராணுவமோ மக்களும் மண்ணும் என்று தமிழ் மக்கள் மீது செல்களை வாரி இறைத்துள்ளது.
இந்த அவலங்களுக்கு அரசாங்கம் ‘பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கை’ என்று நியாயம் கற்பிப்பது அயோக்கியத்தனமானது. தனது அதிகாரத்தை நிலைநாட்ட மேற்குலகை வாயடைக்கச் செய்ய அவர்கள் பயன்படுத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் கையாண்டு உள்ளது. 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது பெரும்பாலும் ஜேவிபி க்கு அதரவான சிங்கள இளைஞர் யுவதிகளை நிர்வாணமாக்கி ராயர் போட்டு கொழுத்தியும் கொன்றொழித்த அரசு இன்று அதனிலும் இலகுவாக தமிழ் மக்களை எவ்வித பாரபட்சமும் இன்றி விமான மற்றும் செல் தாக்குதல்களை நடாத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து உள்ளது. அதனிலும் பல்லாயிரக் கணக்கானவர்களை காயப்படுத்தி உள்ளது.
இந்த அவலத்தில் புலிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என்று சொல்லிய வன்னி மக்களை தங்களுக்கு மண்மூட்டையாக்கி இலஙங்கை இராணுவத்தைக் கொண்டு அவர்களை அழித்ததில் புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பம்மாத்து கோரிக்கைகளையும் கோசங்களையும் வைத்து நீண்ட நாளைக்கு புலிகளால் அரசியல் நடத்த முடியாது.
புலிகள் பலவீனமாவது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் என்பதோ புலிகள் ஆயுதங்களைப் போடும்படி கேட்பது சரணடையக் கூறுவது தவறான முன்னுதாரணமாக முடியும் என்று கூறுவதும் இவை இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தும் என்பதும் யதார்த்தத்தில் வன்னி மக்களுக்கு எவ்வித நலனையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதில்லை.
வன்னி மக்கள் இரு இராணுவங்களுக்கு இடையே சிக்குண்டு தங்கள் உயிரை தினம் தினம் இழக்கின்றனர். இந்த அவர்களைப் பதம்பார்க்கும் இரு இராணுவமும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் வன்னி மக்கள் மிகவும் நிம்மதியாக தங்கள் வாழ்வை நகர்த்துவார்கள். குறைந்தபட்சம் தங்களை நோக்கி ஆயுதங்களை நீட்டும் இரு தரப்பில் ஒரு தரப்பாவது ஆயுதங்களைக் கீழே போடுமாக இருந்தால் அம்மக்கள் ஓரளவுக்காவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இன்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மக்கள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு மற்றைய ஒரு இராணுவத்தை எவ்விதம் கையாள வேண்டுமோ அதற்கேற்ப கையாளுவார்கள். அதனை அந்த மக்களிடமே விட்டுவிடலாம். (”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்)
தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய அவசரமான அவசியமான ஒரு நிலை முன் எப்போதையும் விட இப்போது அதிகரித்து உள்ளது. அதற்கு முன்னதாக இன்னமும் யுத்தப் பகுதிக்குள் உள்ள மக்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்கள் கௌரவமாக நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்களை நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் வருடக் கணக்கில் தடுத்த வைக்கும் திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கான போராட்டங்கள் தமிழ் மக்களால் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும்.