புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று யூன் 15 முதல் யூன் 20 வரை இலங்கை சென்று திரும்பி இருந்தனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடுத்து வைக்கப்பட்டு உள்ள தலைவர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைச் சந்தித்து உரையாடியதுடன் அவருடன் வடமாகாணத்தில் உள்ள மீள்குடியேற்றம் வன்னி முகாம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஆகியோரையும் சந்தித்து வந்துள்ளனர். இது பற்றிய விபரங்கள் அருகில் இணைக்கப்பட்டுள்ள முன்னைய பதிவுகளில் உள்ளது.
வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்
புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்
புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்
தற்போது இந்த விஜயம் தொடர்பாக இக்குழுவில் பயணித்த சார்ஸ்ஸ் அந்தோனிதாஸ் அந்த ஐந்து நாட்களும் இலங்கையில் நடைபெற்ற விடயங்களை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். விரைவில் மீண்டும் இலங்கை சென்று அபிவிருத்தி நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகக் குறிப்பிடும் சாள்ஸ் அன்தோனிதாஸ் தமிழ் மக்களைப் பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதே தற்போதுள்ள அவசிய தேவை என்கிறார். சார்ள்ஸ் அந்தோனிதாஸ் யூன் 29 2010ல் தேசம்நெற் ஆசிரியர்களுக்கு வழங்கிய நேர்காணல்.
கேபி யை சந்திக்கச் சென்றவர்களின் பயணம்
தேசம்நெற்: இந்தப் பயணத்தில் போனவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டு இருந்தனர்? கேபி க்கும் அவர்களுக்கும் என்ன உறவு?
சார்ள்ஸ்: எனக்கு கேபி யை போராட்ட ஆரம்பகாலத்திலேயே நன்கு தெரியும். பிரான்ஸில் இருந்து கலந்துகொண்ட கெங்காதரன் கேபி உடன் ஒன்றாகப் படித்தவர். கனாவில் இருந்து கலந்துகொண்ட பேரின்பநாயகம் கேபி க்கு கற்பித்த விரிவுரையாளர். மற்றையவர்கள் சிலர் உறவினர்கள். இன்னும் சிலர் புலிகளுடன் இருந்தபோது ஏற்பட்ட உறவு. அருட்குமார் பிரிஎப் உறுப்பினர் அவர் எப்படி இந்தப் பயணத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை.
கேபி கைது செய்யப்பட்ட பின் முதன்முறையாக கேபியின் மனைவியுடன் மட்டும்பேச போன் கொடுத்திருந்தார்கள். அவரது மனைவி தாய்லாந்திலே தான் வசிக்கிறார். பின்பு உறவினர்களுடன் பேச அனுமதி கொடுத்திருந்தார்கள். அதிலிருந்து மேலும் விரிவடைந்து வேறு நண்பர்களிடமும் வேறு ஆட்களுடனும் பேச அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
என்னைப் பொறுத்த வரையில் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதுதான். அப்படி செய்கிற நன்மைகள் மக்களை போய் சேருகிறதா? என்பதுதான் முக்கியம். அப்படியாயின் இந்த தொடர்புகள் தேவையா? கைவிடுவதா? இதுதான் என்முன்னால் உள்ளது.
மற்றது அபிவிருத்தியுடன் சம்பந்தப்படாமல் எந்த நடவடிக்கையும் செய்து மாற்றங்களை கொண்டுவர முடியாது. அது கனவாகவே தான் இருக்கும்.
தேசம்நெற்: கேபி ஆல் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவாக நீங்களும் இன்னும் எண்மரும் இலங்கை சென்று திரும்பி இருக்கின்றீர்கள். நீங்கள் இக்குழுவில் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? அதாவது உங்களுக்கும் கேபி க்கும் உள்ள உறவு என்ன?
சார்ள்ஸ்: கேபி சம்பந்தமாக எனக்கு நல் அபிப்பிராயம் கடந்த போராட்ட காலங்களில் இருந்தது, ரெலோவின் குட்டிமணி, தங்கத்துரை காலத்தில் ஆரம்பித்த உறவு. தாடி தங்கராசா என்பவரால் தங்கத்துரை சுட்டு காயப்படுத்தியபோது கேபி உடனடியாக வந்து வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தந்திருந்தார். அன்றிலிருந்து எனக்கு கேபி மீது நல்ல அபிப்பிராயம் உண்டு. யார் எவர் என்ற பேதம் பாராது மற்ற மனிதர்களுக்கு உதவ காப்பாற்றும் குணாம்சம் கொண்டவர்.
கேபி இயற்கையாகவே மற்றவர்களிடம் இணைந்து வேலை செய்யும் குணாம்சம் கொண்டவர். இந்த குணாம்சங்கள் அவர் புலி இயக்கம் என்பதற்காக அவரிடமிருந்து அகன்று விடவில்லை என்பதே எனது அபிப்பிராயம். இயக்க முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி நான் பேசவிரும்பவில்லை. ஆனால் கேபி ஒரு ஜனநாயகவாதி. ஜனநாயகத்தை நிலைநிறுத்த விருப்புபவர் என்பதில் எனக்கு அன்று இருந்த அதே மாதிரியான உணர்வு இம்முறை அவரை சந்திக்கும் போதும் இருந்தது.
தேசம்நெற்: உங்களை இந்த சந்திப்புக்கு அழைத்தது யார்?
சார்ள்ஸ்: கேபி தான் ஒழுங்கு பண்ணி இருந்தார். கேபி தனது தொடர்புகளின் ஊடாகவே என்னிடம் தொடர்பு கொண்டார். நேரடியாக அவர் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. என்னுடன் வந்த மற்றையவர்களுடன் எனக்கு இங்கே எந்தவித தொடர்புகளும் இருக்கவில்லை. லண்டனில் இருந்து புறப்பட்டவர்கள் விமான நிலையத்திலும் பின்னர் தங்கியிருந்த ஹொட்டலிலும் தான் சந்தித்து பேசினோம்.
குழுவினரில் விமலதாஸை எனக்கு முன்பே தெரியும். அவரும் நானும் ரமிழ் ஹெல்த் ஓர்கனைசேசனில் இருந்து சென்றோம். அருட்குமார் வருவது எனக்கு பின்புதான் தெரியும். சிவனடியானையோ மற்றவர்களையோ எனக்கு தெரியாது. ஹொட்டலில் கதைக்கும்போது என்ன நடக்கபோகுது என்றுதான் பேசினார்களே தவிர ஒரு திட்டமிட்டு எதைப் பேசுவது. எதைச் சொல்லுவது என்று யாரும் பேசவில்லை.
தேசம்நெற்: கேபி ஜ சந்தித்த பின்பு நீங்கள் எல்லோரும் குழுவாக சந்தித்தீர்களா? என்ன தீர்மானித்தீர்கள்?
சார்ள்ஸ்: சந்தித்தோம். அப்போது ஒரு கருத்து உருவாகிவிட்டது. மக்களை இப்படியே விடமுடியாது. அரசிடம் கையேந்தும் நிலைக்கு எம்மக்களை விடக்கூடாது. நாம் தான் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். ஆகவே கேபிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவே எல்லோராலும் ஒருமித்து முடிவு எடுக்கப்பட்டது.
பிறகு இங்கு வந்த அருட்குமார் ஏன் இப்படி அறிக்கை விடுகிறார் என்பது புரியவில்லை. அவருக்கு இங்கே புலிகளின் ஆட்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். இலங்கைக்குச் செல்லும்போதே அரசின் பிடியில் உள்ள ஒருவரைத்தான் சந்திக்கப் போகிறோம் என்றுதானே போனோம். அவர் இப்போது குறிப்பிடும் விடயங்கள் இலங்கைக்குச் செல்வதற்கு முன்னதாகவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். அப்படியானால் அவர் எதற்கு வந்தார் என்றும் தெரியவில்லை. சிலவேளை என்ன நிலைமை என்று அறிய இவர் அனுப்பப்பட்டு இருக்கலாம்.
தேசம்நெற்: இலங்கை போய்வந்த உங்கள் குழுவிற்கு என்ன செய்கின்ற நோக்கம்?
சார்ள்ஸ்: இன்னமும் குழுவாக பேசவில்லை. நான் ஒரு அறிக்கையை எழுதி கொடுத்துள்ளேன். எல்லோருமாக படித்துவிட்டு வெளிவரும் என நினைக்கிறேன்.
தேசம்நெற்: அது வெளிவருமா? டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமாரின் நிலைப்பாடு உங்களை குழப்பாதா?
சார்ள்ஸ்: அருட்குமார் தவிர்ந்த மற்றவர்கள் ஒத்துவருவார்கள் என்றே கருதுகிறேன். அருட்குமார் நிலை என்பதைவிட இந்த மாதிரியான நிலை இன்னமும் புலம்பெயர் நாட்டிலுள்ளது என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை மாற்றியமைக்காது விட்டால் தமிழர்களின் பாடு பெரும்பாடாகி போய்விடும்.
தேசம்நெற்: வன்னி யுத்த காலத்துக்கு முன்பாக உங்களுக்கு கேபியுடன் தொடர்பு இருந்ததா?
சார்ள்ஸ்: இல்லை. கேபி ஒருமுறை லண்டன் வரும்போது என்னை விசாரித்துப் போனதாக அறிந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை, லண்டன் வந்து போனபின்பு கேபி எரித்தீரியாவில் கூடுதலாக இருந்திருந்தார். நீண்ட காலம் அவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக எரித்திரியாவிலே தங்கி இருந்தார்.
போராளிகள் கடமையில் எப்படி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது என்பது மிகமுக்கியமானது. இதை பலர் கவனத்தில் எடுப்பதில்லை. இதன் காரணமாக பலவித சீரழிவுகள். போராட்டம் முடிந்த நாடுகளில் நடந்துள்ள அனுபவங்களை இவர்கள் பெறுவதில்லை. பல போராட்டவாதிகளுக்கு இது பற்றிய சிந்தனை இல்லாமல் போராட்டத்தை தொடருவது என்ற எண்ணத்தில் தொடர்வார்கள்.
தேசம்நெற்: இந்த இலங்கைப் பயணத்திற்கு முதல் நீங்கள் கேபியை எப்போது சந்தித்தீர்கள்?
சார்ள்ஸ்: 2009ல் மே 18க்குப் பின்னதாக மலேசியாவில் சந்தித்து இருந்தேன்.
தேசம்நெற்: கேபியின் சொந்தங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தது ஏதாவது?
சார்ள்ஸ்: கேபி யின் தாய் சகோதரிகளை வெளியே எடுக்க முயற்சித்ததாகவும் அதற்கு வெளியே கொண்டு போக வேண்டிய செலவுக்கு பணமில்லாமல் கஸ்டப்பட்டதாயும் தாயும் சகோதரியும் வேறு வேறாக கடலில் வரும்போது இலங்கைக் கடற்படையினால் கொல்லப்பட்டதாயும் கேள்விப்பட்டேன். இது கேபி இயக்கத்தை விட்டு விலத்தப்பட்ட காலத்தில் (1990களில்) நடந்தது என நான் லண்டனில் கேள்விப்பட்டேன். இதை கேபி சொல்லவுமில்லை நான் கேட்கவுமில்லை.
கேபி இனுடைய அரசியல்
தேசம்நெற்: கேபி யை ஒரு ஜனநாயகவாதி என்கிறீர்கள். புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை கொலைத் தாக்குதல்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அனுப்பியவர் கேபி. அவர் எப்படி ஜனநாயகவாதியாக முடியும்?
சார்ள்ஸ்: கேபி என்றுமே எந்த விதமான கொலைகளிலும் பங்கு பற்றியது இல்லை. அது மட்டுமல்ல கேபி நேரடியாக எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடவில்லை.
கேபி ஆரம்ப காலங்களிலேயே நாட்டைவிட்டு வெளியேறியவர். 1975 – 1985 களில் பலவிதமான நெருக்கடிகள் இயக்கத்தினுள்ளே வளர்ந்த காலம் இது. ரெலோவினுள் புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார். பின்னர் வெளியேறுகிறார். இதன் காரணமாக பல பிரச்சினைகள் உருவாகின்றது. இதற்கு முகம் கொடுக்க முடியாமல் கேபி திண்டாடுகிறார். காரணம் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரிடமும் கேபி மிக நெருக்கமாக உறவாடியவர். இதனால் கேபி வெளியேறி தனியாக இருக்க விரும்புகிறார்.
ராஜீவ்காந்தி கொலை:
தேசம்நெற்: கேபி கைது செய்யப்படுவதற்கு முன்பாக போராட்டம் பற்றிய கேபியின் நிலைப்பாடுகள் என்னவாக இருந்தது?
சார்ள்ஸ்: இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தே கேபி யிடம் இருந்தது.
தேசம்நெற்: கேபி இந்தியாவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகக் கூறுகிறீர்கள். ரஜீவ்காந்தி கொலை தொடர்பான குற்றவாளி கேபி. அப்படி இருக்கையில் அவர் எப்படி இந்தியாவுடன் இணைந்து செயற்படுவது பற்றி பேசினார்?
சார்ள்ஸ்: தனக்கும் ரஜீவ்காந்தி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது இந்தியா இலங்கை எல்லோருக்கும் நன்றாக தெரிந்த விடயம் என்றும் இது பற்றி தான் பயப்பட ஒன்றுமில்லை என்றும் கேபி சொன்னார். தான் ரஜீவ் கொலை பற்றி பத்திரிகையில் பார்த்தே அறிந்தேன் என்றும் ரஜீவ்காந்தி கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற விடயமே தனக்கு பலகாலம் கழித்தே திட்டவட்டமாக தெரியவந்தது என்றும் கேபி சொல்கிறார். ஆனால் தன்னை புலிகளின் உறுப்பினராக கருதி எதுவும் நடக்கலாம் என்றார்.
இலங்கை அரசுடன் ஒத்துழைப்பும் பொருளாதார அபிவிருத்தியும்
தேசம்நெற்: இப்போது கேபி சொல்லுகின்ற அரசுடன் ஒத்துழைத்து பொருளாதார முன்னேற்றத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றியோ, போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது பற்றியோ, கேபி பிரபாகரனுடன் பேசியுள்ளாரா?
சார்ள்ஸ்: இது பற்றி நான் கேபி உடன் பேசவில்லை. இறுதிக்காலத்தில் பிரபாகரன் தன்னை சுற்றியுள்ளவர்களின் போக்குகள் பற்றி விளங்கிக் கொண்டுள்ளார். அதனால்தான் பிரபாகரன் கேபியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். இந்தக் காலத்தில் தான் கேபி யை தனக்கு அடுத்ததாக வெளிநாட்டு தொடர்புகளுக்கு நியமித்திருந்தார்.
கேபிக்கு போராட்ட காலங்களில் பிரபாவுடன் இருந்த தொடர்பை இலங்கை அரசு ஒட்டுக்கேட்டிருந்தது. யார் யாருடன் யாருக்கு ஊடாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அரசுக்கும் தெரியும். ஒரு கட்டத்தில் கோதயபாய பிரபாகரன் இறந்தது பற்றியும் பிரபாகரனுக்கும் கேபி க்கும் இடையே தொடர்பாளராக இருந்தவர் கொல்லப்பட்டதைப் பற்றியும் கேபி க்குச் சொல்லியுள்ளார்.
தேசம்நெற்: கேபி யாரை இந்த அபிவிருத்தி மனிதநேயப் பணிகளைச் செய்யவில்லை என்கிறார் புலிகளையா? அரசையா? புலம்பெயர் மக்களையா?
சார்ள்ஸ்: சமுதாயம் என்றே சொல்லுகின்றார். காரணம் எப்பவுமே எமது மக்கள் இரந்து கொண்டு நிற்கின்றார்களே நாம் நாமாக எமக்காக என்று செயற்பட முடியாதா? என்று தான் கேட்கிறார்
மக்களை முகாமைவிட்டுப்போ என்றால் போகமாட்டேன் என்கிறார்கள். முகாமை விட்டுப் போனால் அவர்களுக்கு வாழ்வதற்கு வழியில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பதுதான் பிரச்சினை. இதைத்தான் நாம் சந்தித்த புலிகளின் முன்னாள் போராளிகளும் கேட்கிறார்கள்.
கேபி பெரிய அரசியல்வாதி அல்ல இடைத்தரகராக வேலை செய்ய்ககூடியவர். அன்று புலிகளுக்கு பிரேமதாஸாவுடன் உடன்பாட்டை ஏற்படுத்தியவர் இந்த கேபி தான்!
புலிகளை அடைத்துள்ள முகாமிற்கு போனபோது கேபி கண்ணீர்விட்டு அழுதார். அவ்வளவு மென்மையானவர். சரியாக பரிதாபப்படுகின்றார். சிலநேரம் பார்த்துவிட்டு வந்து பஸ்சில் இருந்து விடுகின்றார்.
தேசம்நெற்: அரசாங்கத்தின் பிடியிலுள்ள ஒரு கைதியுடன் எவ்வளவு தூரம் நீங்கள் இணைந்து வேலை செய்யலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான கேள்வி மிகவும் நியாயமானது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? இது பற்றிய விமர்சனம் கேபி தன்னுடைய வாழ்நாளைக் கொடுத்து உருவாக்கிய புலிகள் அமைப்பிலிருந்தே வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்ள்ஸ்: புலிகள் அமைப்பு பிரபாகரனின் பின்பு அரச எதிர்தரப்பு ஆட்களுடன் ஒன்றிணைந்தார்கள். சரத்தை ஆதரித்தார்கள். ஆனால் அரசு புனருத்தாருன வேலைகளில் கேபி க்கு ஒரு பங்கு உண்டா? செய்ய முடியமா? என்பதைப் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றார்கள். கேபி க்கு உள்ள பங்களிப்பை பொசிட்டிவ்வாக பாவிக்க யோசிக்கிறார்கள் என்ற கருத்து எழுந்த போது நான் கேட்டேன் ‘ஏன் கேபி’ என்று. உடனே இராணுவ பிரிகேடியர், ‘‘உங்களிடம் வளங்களைத் தந்தால் நீங்கள் களியாட்டங்களிலும் சுயநல வேலைகளிலம் தான் ஈடுபடுவீர்களே” என்றும் ‘இன்னும் ஒருமுறை நாம் ஏமாற முடியாது’ என்றார். இது சிலவேளை கருணா போனறோர்களை நினைத்துக் கொண்டு இந்த இராணுவத்தளபதி சொன்னாரோ என நான் நினைத்துக்கொண்டேன்.
தேசம்நெற்: கேபி சொல்லுகின்ற பொருளாதார அபிவிருத்தி என்ற முன்னெடுப்புப் பற்றிய பலமான விமர்சனம் கேபி மீது எழுந்துள்ளது. இது இன்னும் வளரும். இதை எப்படிக் கையாளப் போகிறார்?
சார்ள்ஸ்: தான் பிடிபட்ட போது யாரும் கவலைப்படவில்லை எனக் கேபி மனவருத்தப்பட்டார். பிடிபட்டபோது எல்லாம் முடிந்துவிட்டது என்றே எண்ணியதாகத் தெரிவித்தார். ‘நான் இப்போது வெளியே வருகிறேன். இப்படி வெளியே வரும்போது சிலர் சங்கரி சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றோர் என்மீது சேறு பூசுகிறார்கள். நான் கைதியாக இருக்கிறேன். என்னுடன் போட்டி போடுகிறார்கள்.” என கேபி தனது மனக்கவலையைத் தெரிவித்தார்.
‘’நாங்கள் வட கிழக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தம் அமைப்பை வைத்திருக்கின்றோம். அதனூடாக நீங்கள் யாரும் எந்த அபிவிருத்தியைச் செய்யலாம். நாங்கள் என்ன செய்கின்றோம் எப்படிச் செய்கின்றோம் என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ளக் கூடியதாகத்தான் ஒழுங்குகள் செய்யப்படும். நீங்களே அபிவிருத்தியை எங்கே எப்படிச் செய்வது போன்ற விடயங்களையும் தெரிவு செய்ய முடியும். அதேபோல நிதி போன்ற விடயங்களிலும் நீங்களே முடிnவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்கிறார் கேபி. இதில் அரசும் உடன்பட்டு இருப்பதால் இதனால் சிக்கல்கள் எழாது என்பதே கேபியின் கருத்து.
ஈபிடிபி அரசுடன் இணைந்து அரசின் அங்கமாக செயற்படுகின்றது. கேபி அரசுடன் இணைந்து இன்னுமொரு அமைப்பை உருவாக்கி செயற்ப்பட முன்வருகிறார். அதேபோல எங்களையும் இன்னுமொரு அமைப்பினை உருவாக்கும்படி கேட்டார். நாங்கள் ஆர்ஆர்என் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளோம். நாம் எமது அமைப்பு ஆர்ஆர்என் பற்றி கூறினோம். கேபி அதனை வரவேற்றார். ‘எல்லோரும் மக்களுக்காகவே தான் வேலைசெய்ய முயற்சிக்கிறோம்’ என்றார்.
தேசம்நெற்: இலங்கை அரசு கேபியையும் அவரிடம் போய்வந்த குழுவினரையும் பயன்படுத்தி புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களைப் பிரித்தாள முற்படுகின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்றதே.
சார்ள்ஸ்: நாங்கள் அங்கு நின்றிருந்த போது ஒரு இராணுவத்தளபதி விளையாட்டாக சொன்னார், ‘உங்களை அழிக்க நாங்கள் தேவையில்லை’ என்று. இதற்கு மேல் அதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
தேசம்நெற்: பரந்துபட்ட மக்களிடம் போகும்போது இது அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை எப்படித் தவிப்பீர்கள்?
சார்ள்ஸ்: நாங்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை. அவர்கள் தமது பணத்தை பொதுப்பணத்தை கொண்டு போய் என்ன உதவிகளை செய்ய விரும்புகிறார்களோ அதற்கு ஒத்தாசைகள் உதவிகள் வழங்குவோம். அப்படி அவர்கள் பணம் முதலீடு செய்தால் அவர்களே மக்களுக்கு உதவி செய்வார்கள். தாமும் பணம் சம்பாதிப்பார்கள்.
இந்த அபிவிருத்தி என்பதில் சமூக தேவைகளை கவனத்தில் கொண்டு செய்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதில் அங்குள்ள அரசியல்வாதிகளும் நாட்டம் கொண்டு கவனமெடுக்க வேண்டும். எங்களுக்குரிய தார்மீக கடமைகளை உணர்ந்து உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் என்றால் நாங்கள் உங்களக்கு உதவி செய்ய தயார். அந்த மக்கள் பயன் பெறுவார்கள்.
தேசம்நெற்: புலிகளின் வெளிநாட்டிலுள்ள பணத்தை கேபி கொண்டுபோக உள்ளார் என்பதே முக்கிய பேச்சாக உள்ளது.
சார்ள்ஸ்: கேபி இதை எப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை. எல்லாமே மக்களின் பணம். அந்தப் பணம் மக்களிடம் போய்ச்சேர வேண்டும். அல்லது பணத்தை தந்த மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற பேச்சை கேபிக்கு முன்பு வைத்தார்கள். கேபி சொன்னார், ‘எங்களுக்கு வேண்டாம். பிரச்சினைகள் இருப்பதை மக்களிடம் கொண்டு போவோம். மக்கள் விருப்பம் என்றால் ஆதரிக்கட்டும் இல்லாவிட்டால் போகட்டும்.’
நாங்கள் காசை கையில் எடுக்க மாட்டோம். அங்கு ஒரு செயற்திட்டம் உருவாக்கப்பட்டு அந்த திட்டத்திற்கு நீங்கள் நேரடியாகவே பணத்தை கொடுக்கலாம். அது மட்டுமல்ல அது எப்படிச் செலவு செய்யப்படுகின்றது என்பதையும் பணத்தை வழங்கியவரும் பொதுமக்களும் எந்த நேரத்திலும் பார்வையிடலாம்.
தேசம்நெற்: புலிகளின் வெளிநாடுகளில் உள்ள பணம், சொத்துக்கள் பற்றி அங்கு பேசப்பட்டதா?
சார்ள்ஸ்: இல்லை. ஆனால் ஒருகட்டத்தில் இராணுவ அதிகாரிகளுடன் பரீட்ச்சைக்காலம் வருகின்றது மாணவர்களை படிக்க சோதனை எடுக்க அனுமதிக்கலாம் தானே என்று கேட்க, அவர் ‘நீங்கள் இதை இப்படி பிரபாகரனிடம் கேடடீர்களா’, என்று திருப்பிக் கேட்டார். ‘இல்லையே’, என்று தானே பதிலளித்துவிட்டு ‘’ஏன் இப்படி எங்களிடம் கேட்கிறிர்கள்”, என்று மற்றுமொரு கேள்வி கேட்டார்.
புலிகளின் இறுதிக் காலத்தில் தமிழரின் பலகோடி சொத்துக்களை எடுத்தீர்கள் தானே என்று கேட்க, ‘எந்தக் காசு? அதைப் பற்றிக் கேட்க நீங்கள் யார்?”, என்றெல்லாம் அவர்கள் திருப்பி கேட்கும்போது எம்மிடம் பதிலும் இல்லை.
ஒருமுறை இராணுவ அதிகாரி கூறும்போது, ‘வெளிநாட்டில் உள்ளவர்களில் யார், யார் எவ்வளவு பணம் புலிகளுக்கு கொடுத்தார்கள் என்ற விபரம், நீங்கள் புலிகளுக்கு கொடுத்த விண்ணப்ப பத்திரங்கள் உங்கள் கையெழுத்துடன் உள்ளது. இவற்றை நீங்களே எமக்கு தந்துள்ளீர்கள். இவையாவும் காஸ்ரோவின் அலுவலகம் முழுவதுமாக முழுமையாக எம்மிடம் உள்ளது’ என்றும் ‘அந்த அலுவலகம் சேதப்படுத்தப்படாமலே எம்மிடம் உள்ளது’ என்றும் கூறினார். இந்த விடயங்கள் யாவும் அனைவருக்கும் முன்பாகவே சொல்லப்பட்டது.
தேசம்நெற்: மக்கள் சுயமாக கை ஏந்தாத வாழ்வு வேணும் என்கிறார் இதற்கான வளங்களை எங்கிருந்து எதிர்பார்க்கிறார்?
சார்ள்ஸ்: அதை வெளிநாட்டிலுள்ள புலிகளிடமிருந்தும் பல பொது நிறுவனங்களிடமிருந்தம் எதிர்பார்க்கிறார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு
தேசம்நெற்: நீங்கள் கேபி யைச் சந்தித்து வந்த பின்பு தமிழர்கள் அரசியல் தீர்வை நோக்கிப் போகக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
சார்ள்ஸ்: அரசியல் தீர்வுக்கான சிறு அசைவைக்கூட முன்னெடுக்க நாட்டில் யாரும் இல்லை. ஒரு உண்ணாவிரத்ததை கூட முன்னெடுக்க முடியவில்லை. முன்னெடுக்க ஆளில்லை. இதற்காக கூட்டிணைவாக வேலை செய்தல் அமைப்புக்களையும் மக்களையும் இணைத்த அரசியல் தீர்வுக்காக செயற்ப்படவில்லை, யாரும் செய்ய தயாரில்லை, எம்மிடம் சக்தியுமில்லை என்ற உணர்வு வளர்ந்துள்ளது. சரி ஒரு பொதுக்கூட்டத்தை இந்த தமிழரின் உரிமைப் பிரச்சினை பற்றிப் பேச ஒரு முன்னெடுப்புக்கூட இல்லையே!
நாங்கள் ஒரு ஜனநாயக கலாச்சாரத்தை இனிமேல்த்தான் உருவாக்க வேண்டும். எமது உரிமைப் போராட்டத்திற்காக செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய கலாச்சாரத்தை தொடக்க வேண்டும். எமது தரப்பினர் எப்போதும் தம்மை இரண்டாம் தர பிரஜைகளாகவே நினைக்கிறார்கள். அதனை நினைத்தே மற்றவர்களிடமும் பேசவும் செய்கிறார்கள்.
நாம் அங்கு இருக்கும்போது யாரும் விட்டுக்கொடுத்து பேசவில்லை. எமது பங்கிற்கு நாமும் பேசுகிறோம். ஆனால் எல்லாவற்றிக்கும் அவர்களிடம் பதில் உண்டு. எல்லா இராணுவ அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அலுவலர்களும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள். பதில் அளிக்கிறார்கள். அவர்களிடம் பலமான கருத்து ஒருமிப்பு உண்டு.
நாங்கள் பேசும்போது நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன்தான் பேச வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.
தேசம்நெற்: 2004ல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சென்றிருந்தீர்கள் பின்னர் இப்போது போயுள்ளீர்கள். புலம்பெயர்நாடுகளில் உள்ள ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் பற்றியும் உங்களுக்கு தெரியும். இப்போதுள்ள நிலை பற்றி உங்கள் கருத்து என்ன? அன்றும் இன்றும் உள்ள அரசியல், சமூக மாற்றங்கள் என்ன?
சார்ள்ஸ்: இலங்கையில் நாங்கள் இப்போது போய் வேலை செய்யலாம். வேலை செய்ய வேணும் என்ற விருப்பத்தை வளர்த்துள்ளது. ஜனநாயகம் மீண்டும் உருவாகியள்ளது. புனரமைப்பு, reconciliation தமிழர்களிடையே நடைபெற வேண்டும். தமிழர்க்குள்ளேயே அதிகமான பிரிவுகள், பிளவுகள், ஒற்றுமையின்மை உள்ளது. இப்போதுள்ள அவல நிலையில் நாம் தமிழர்கள் ஒன்று சேர்ந்து கதைக்க முடியாத நிலையே உள்ளது. மனித உரிமைகள் விடயத்தில் சேர்ந்து வேலை செய்தாலேயே சமூகப் புனருத்தாருணம், reconciliation எம்மிடையே வளரும்.
ஓற்றுமை வேணும், ஒற்றுமை வேணும் என்று சொல்லிக்கொண்டே இருக்காமல் reconciliation, தமிழருக்கான புனருத்தாருண வேலைகளை செய்வதாலேயே இந்த ஒற்றுமையை வளர்க்க முடியும்.
தேசம்நெற்: இலங்கையில் வேலை செய்யலாம் என்பது தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் சுயமாகவா? அல்லது அரசுடன் இணைந்து இயங்குவதையா குறிப்பிடுகின்றீர்கள்?
சார்ள்ஸ்: சிவில் சொஸைட்டி சுயமாக வேலை செய்ய வேணும். அது தன்பாட்டில் இயங்குவது அவசியம். இந்த சிவில் சமூகம் வெறுமனையாக இருப்பது தெரிகிறது. சுயமாக இயங்க ஒத்தாசைகள் வழங்கப்படல் வேண்டும். அப்படி வழங்கும்போது அது அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தொடர்பை ஏற்ப்படுத்தும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்காகவே உள்ளனர். அவர்களும் இணைந்து வேலை செய்ய முடியும்.
அதைவிட தமக்கு என்று ஒன்றுமே இல்லை என்று சொல்லுகின்ற மக்களுக்கு நாம் உதவிகளும் வேலைகளும் செய்யாவிட்டால் அது நாம் அந்த மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும். இப்படி உதவி இந்த மக்களுக்கு செய்யாவிட்டால் சமூகநீதி என்பதே இல்லாமல் போய்விடும்.
முன்னாள் போராளிகளுடன் மக்களுடன் சந்திப்பு
தேசம்நெற்: ‘கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து மக்களையும் சந்திக்க நடவடிக்கை எடுத்தோம்’ என்று நீங்கள் பிபிசி தமிழோசையில் சொல்லுகிறீர்கள். ஆனால் அருட்குமார் மக்களை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று சொல்கின்றார்.
சார்ள்ஸ்: எமக்கு ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திவிட வேண்டும். அவர்கள் எங்களுடன் வந்தாலும் அவர்களையும் மீறி தனிப்பட மக்களுடன் போராளிகளுடன் பேசினோம். அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்துகொண்டோம்.
முகாம்களுக்கு போகும்போது அவர்களின் நிகழ்ச்சிகள் நோக்கங்கள் வேறு. களியாட்டங்கள் காட்ட வேணும் என்றதும் அதனுடன் ஒரு கூட்டம் நின்றுவிடும். நான் அதைவிட்டு விலகிப்போய் எமது மக்களுடன் பேசியுள்ளேன். அங்கிருந்த புலிகளின் போராளிகளும் தோளில் கைபோட்டுக் கூட்டிச்சென்றனர். என்னுடன் பேசினார்கள்.
அவர்களுடைய கதைகளைக் கேட்கும் போது இதயத்தில் வலித்தது. ‘நாங்கள் இங்கே சிரிக்கிறோம் ஆனால் மனதுக்குள்ளே அழுகின்றோம். எங்கள் குடும்பங்களை போராட்ட காலத்திலும் கைவிட்டுவிட்டோம். இப்பவும் அவர்கள் எங்களால் கஸ்டப்படுகிறார்கள்.’ என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். ‘தாய், சகோதரம், மனைவி பிள்ளைகள் எங்களைப் பார்க்க வரமுடியும். அப்படி வந்து பார்க்க பணம் இல்லாமல் இருக்கிறார்கள்’ என்றும் அவர்கள் தங்கள் கஸ்ட நிலையை எடுத்துக் கூறினர்.
சிவில் அமைப்புகள் இல்லை. இப்படியான பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகள் இல்லை. யாரும் செயற்பட முன்வருவதும் இல்லை.
தேசம்நெற்: முகாமில் இருந்த போராளிகளுக்கு கேபி ஜ தெரியுமா?
சார்ள்ஸ்: அரசாங்கம் எதிர்பார்த்தது பொடியன்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று. ஆனால் போராளிகளுக்கு யார் யார் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. வந்தவர்களைக் கூட தனிப்பட யார் யார் என்றும் தெரியும். கேபி ஜ நன்றாகவே தெரிந்துள்ளார்கள்.
தேசம்நெற்: புலிப் போராளிகள் வேறு என்ன பற்றிப் பேசுகிறார்கள்?
சார்ள்ஸ்: தங்கள் குடும்பம் தங்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதே அவர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்கு தொடர்பு கொள்ள வசதிகள் இல்லை.
நாம் இதுபற்றி இராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களின் வேண்டுகோளை எழுத்தில் கேட்டார்கள். அதை உடனடியாக மேலிடத்திற்கு அனுப்பினார்கள். உடனேயே தொலைபேசி இணைப்புக் கொடுக்க அனுமதி கிடைத்தது. இந்த தொலைபேசி இணைப்பு இரு நாட்களுக்குள் வழங்கப்பட்டது. இப்படி இந்த போனை போட ஏன் ஒரு வருடம் எடுத்தது. இந்த போராளிகளைப் போய் பார்த்து அவர்களின் குறைகளை கேட்டறிய அவர்களது பிரச்சினைகளை கேட்க ஆளில்லை. இராணுவத்திடம் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ள முடியாமலுள்ளது.
இன்னும் இந்த போராளிகள் இயக்கத்தில் இருந்தது போல் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போல் இருக்கின்றார்கள். ஒரு அமைப்பாக ஒன்றுமில்லை. எல்லாமே யாரோ சொல்லுவார்கள், செய்வார்கள் என்ற மனப்பான்மையுடனும் உள்ளனர். அமைப்பாக செயற்பட அவர்களுக்கு தெரியாது. புலிகள் இப்படியாக செயற்பட அவர்களை பழக்கிக் கொள்ளவில்லை
தேசம்நெற்: வரணியில் மக்களை சந்தித்ததாக சொன்னீர்களே?
சார்ள்ஸ்: இராணுவம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் மக்களிடம் சுய முயற்சியில்லை. கோழி வளர்த்தல், ஆடு, மாடுகள் வளர்த்தல் போன்ற சிறு விடயங்கள் கூட இல்லை. தோட்டம் செய்யக் கூடிய இடங்களில் கூட வீட்டில் சிறு தோட்டங்கள் கூட போடுவதை இவர்களிடம் அவதானிக்க முடியவில்லை. அவர்களிடம் பேசியதில் நான் அவதானித்தது எல்லாம் அவர்கள் எல்லாமே யாரோ கொண்டுவந்து தருவார்கள் அல்லது வரும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் நிறையவே உண்டு. இதில் பாரிய தவறு இருக்கிறது என்றே தெரிகிறது. காரணம் காலப்போக்கில் இவர்கள் தமக்கு என எதையும் செய்து கொள்ளமாட்டார்கள் என்றே கருதுகிறேன். இது ஆபத்தானது. பின்னர் இவர்கள் வெறுமையையே காண்பர்கள். இதனால் விரக்தியடையும் நிலைவரலாம்.
இராணுவம் மக்களை வென்றெடுத்தல் என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக என்னால் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதற்காக நிறைய பணம் செலவிடுகிறார்கள். இராணுவத்தினர் அரச அலுவலர்கள் அதிகாரிகள் எல்லோரும் ஒரேமாதிரியாகவே பேசுகிறார்கள். எம்முடன் பேசுவதிலிருந்து இவர்கள் எல்லோரும் பெரிய திட்டத்துடன் இணைந்தே செயற்படுகிறார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது.
தமிழ் அமைப்புகள் தொடர்பாக
தேசம்நெற்: பிற்காலத்தில் ரெலோ – புலிகள் ஒன்று சேர உங்களுக்கும் கேபி க்கும் அல்லது ரெலோவுக்கும் கேபிக்கும் இருந்த உறவுகள் காரணமாக இருந்ததா?
சார்ள்ஸ்: இது நீங்கள் ரிஎன்ஏ உருவாகும் காலங்களைப் பற்றி பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். ரெலோ புலிகளின் இணைவுக்கு அதிகமாக சாதிரீதியான உறவுகளே காரணமாக இருந்ததே தவிர வேறு ஏதும் கொள்கை அடிப்படையல்ல.
தேசம்நெற்: ரிஎன்ஏ, ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய அமைப்புகள் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அறிந்தீர்கள்?
சார்ள்ஸ்: நான் நினைக்கிறேன் அவர்கள் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளவில்லை போலும். தற்போதுள்ள காலகட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை பல எம்பிக்கள் விளங்கிக் கொள்ளவில்லைப் போல் தெரிகிறது.
சம்பந்தர் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் பங்கு கொள்ளாதவர். செல்வநாயகத்தையும் அவரது முடிவையும் பலமுறை எதிர்த்து சவால்விட்டவர், சமஸ்டி ஆட்சி பற்றி பேச சம்பந்தருக்கு ஒரு தகுதி உண்டு. இதற்கான பேச்சை தொடரும் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அதற்கான முன்னெடுப்பை அவதானிக்க முடியவில்லை. ஆனால் இந்த தலைமையை வைத்துதான் செயற்பட வேண்டும்.
தேசிய விடுதலையும் பொருளாதார விடுதலையேதான். அந்த பொருளாதார விடுதலையைப் பற்றி அறிவு இல்லாமலே தான் எமது போராட்டவாதிகள் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
தேசம்நெற்: மற்றைய அமைப்புக்கள், குறிப்பாக ரிஎன்ஏ யின் வேலைப்பாடுகள் இந்த மக்களை நோக்கி என்ன செய்கிறார்கள்?
சார்ள்ஸ்: கேபி யாரையும் எதையும் விட்டுவிட்டு வந்து செயற்படும்படி கேட்கவில்லை. அபிவிருத்தி மனிதநேயப் பணிகள் என்பன தமிழர்களிடையே செய்யப்படவில்லை. இதைச்செய்ய எல்லோரும் முன்வர வேண்டும் என்பதும் இந்த வேலைகளுக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதையே கேபி கூறிக்கொண்டார்.
கேபி ஒருமுறை சொன்னார் தேசியம் தேசியம் என்று சொல்பவர்கள் மற்றவனிடம் போய் பிச்சை கேட்பதையே தேசியம் என்கிறார்கள் என்றார்.
தேசம்நெற்: நாட்டிலுள்ள ரிஎன்ஏ என்ன சொல்கிறார்கள்?
சார்ள்ஸ்: இரண்டு பக்க விமர்சனம் உண்டு. ரிஎன்ஏ தங்களை பார்க்க வருவதில்லை என்பது போராளிகளின் கருத்து. அரசு அனுமதிப்பதில்லை என்பதற்காக ரிஎன்ஏ என்ன முயற்சிகளை போராட்டத்தை எடுத்தது என்பது அவர்களின் கேள்வியாகவும் உள்ளது. உண்மையிலேயே ரிஎன்எ யும் ஏதும் செய்ததாக இல்லை. ஆனால் ரிஎன்ஏ தங்களை அரசு அனுமதிப்பதில்லை என்று கூறிவிட்டு இருந்து விடுகிறார்கள்.
ஆனால் முகாம்களிலும் சரி நாட்டின் தமிழர் பகுதியிலும்சரி தாங்கள் தருவதை எடுக்க வேண்டியது என்பது போன்ற நிலையையே அரசும் வைத்திருக்கிறது.
தேசம்நெற்: டக்ளஸ் செய்யும் முயற்சி பற்றி கேபியின் கருத்து என்ன? அரசியல் தீர்வு பற்றி கேபியின் கருத்து என்ன?
சார்ள்ஸ்: மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து வேலை செய்வதே அவசியம் என்கிறார். ரிஎன்ஏ ஜ பலவீனப்படுத்தக் கூடாது என்பது கேபி யின் கருத்து.
தேசம்நெற்: ரிஎன்ஏ மற்றும் இந்திய தமிழக அரசியல் தலைவர்களை கேபி கேவலமாக விமர்சித்துள்ளதாக, டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார், குற்றம்சாட்டி உள்ளார்.
சாள்ஸ்: இது வாழ்வா சாவா நிலைப்பாடு. இதில் முட்டாள்தனமான அரசியல் செய்ய முடியாது.
கேபி க்கும் அரசுக்கும் உள்ள உறவு
தேசம்நெற்: 2006 இல் இருந்தே கேபி க்கு அரசுடன் தொடர்பு உண்டென்று கூறப்படுகின்றதே?
சார்ள்ஸ்: இவ்விடயம் கதைக்கப்பட்டபோது அருட்குமார் அங்கு இருக்கவில்லை. பின்னேரம் விமல் இவருக்கு இந்தக் கதையைச் சொல்லியுள்ளார். அன்று பின்னேரம் கேபி யை சந்திக்கும் போதும் இதை கேபியிடம் கேட்டு விசாரித்த அறிந்து கொள்ளவில்லை. ஆனால் பிறகு அதை தனது கருத்தாக பேட்டியில் சொல்லுகிறார் அருட்குமார்.
இதுதான் அங்கு பேசப்பட்டது.’ தாய்லாந்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட கபில ஹெந்தவிதாரண 2006ல் தாய்லாந்து போயிருக்கிறார். கேபி இன் விலாசங்களைத் தேடி எல்லா இடங்களுக்கும் போயிருக்கிறார்கள். ஆனால் கேபியை பிடிக்க முடியவில்லை. கேபி இதை கபில ஹெந்தவிதாரணவுக்கு பகிடியாக உங்களால் என்னை பிடிக்க முடியவில்லைத்தானே என்று சொன்னார்!’
தேசம்நெற்: 2007ல் கேபி பிடிபட்டதாக பத்திரகை செய்தி வெளிவந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதே?
சார்ள்ஸ்: தாய்லாந்தில் கேபி யை கைது செய்ய கோட் ஒடருக்காக விண்ணப்பம் செய்திருந்தனர். இந்தச் செய்தியை பத்திரிகையில் போட்டிருந்தனர். இதை கேட்டு நோர்வேயிலுள்ள கேபியின் உறவினர் கேபி உடன் தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் கேபிக்கு விடயம் தெரியவந்தது. அந்த இடத்தில் கேபி இருக்கவில்லையானாலும் கேபி உடனேயே இடம் மாறிவிட்டார். பின்னர் தாய்லாந்து பொலீசார் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தியதை பத்திரிகைகள் கேபி பிடிபட்டார் என்று செய்திகளை வெளியிட்டிருந்தது. காரணம் ஏற்கனவே கோட் ஓடர் வந்துவிட்டது எல்லாம் ஒன்றாக தவறாக செய்திகள் பத்திரிகைகளில் கேபி பிடிபட்டார் என செய்தியாகியது. இதை நான் கேபியுடன் பஸ்சில் வரும்போது பக்கத்திலிருந்து கேட்டு வந்தேன்.
தேசம்நெற்: விடுதலைப் புலிகளின் வரலாற்றை கேபி இல்லாமல் எழுத முடியாது. இயக்கத்தில் இரத்தமும் சதையுமாக இருந்தவர். எப்படி மிகக் குறுகிய காலத்தில் இப்படியான மாற்றத்தை மிகச்சடுதியாக மேற்கொண்டார்?
சார்ள்ஸ்: கேபி அரசாங்கத்துடன் வேலை செய்ய வேணும் என்பதை எப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் போர் முடிந்தபிறகு அவருடைய கருத்து ‘மக்களுக்கு மக்களிடம் பெற்ற பணத்தினால் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். அவர்கள் கை ஏந்தும் நிலையை மாற்ற வேண்டும்’ என்ற நிலைப்பாடாகவே இருந்தது. ‘மக்களை கைதிகளாக விடமுடியாது என்றும் அரசுடன் தொடர்புபட்டு வேலை செய்தாவது மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற கருத்தும் கேபி யிடம் யுத்தம் முடிந்த கையோடு இருந்தது.
அரசியல் தீர்வு முக்கியம். ஆனால் மக்கள் மிகவும் கஸ்டப்பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்வு முக்கியம் என்ற கருத்து இருந்தது. அரசியலுக்கு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தும் அவரிடம் இருந்தது.
தேசம்நெற்: கேபி யை மிகுந்த வசதிகளுடன் கூடிய ‘விசும்பாயா’ மாளிகையில் தங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் கேபி ஒரு கைதியல்ல இலங்கை அரசின் விருந்தினர் என்ற குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதாகவே உள்ளது?
சார்ள்ஸ்: எனக்கு எங்கே கேபியை வைத்திருக்கிறார்கள் எனத் தெரியாது. ஆனால் சந்திக்க வரும்போது வேறு இடத்திற்கு கூட்டி வருகிறார்கள்.
பேசிக்கொண்டு இருக்கும் போது ஓரிடத்தில் கேபி சொன்னார், “எனக்கு காலைத் தொங்கப்போட்டு படுத்துப்படுத்து கால் சரியான உழைவும் வீக்கமும்’ என்று. ஒரு காவலாளியைக்காட்டி ‘இவர் எதோ ஒரு வளையம் ஒன்றை போட்டுவிட்டார். காலை உயர்த்தி வைத்து நிம்மதியாக படுக்கக் கூடியதாக இருந்தது’ என்றார். அந்தக் கதைகளைப் பார்த்தால் கட்டில் கூட ஒழுங்காக இல்லை என்று தான் நான் எதிர்பார்க்கிறேன்.
தேசம்நெற்: கேபி க்கும் அரசுக்கும் முன்னரே உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் கேபி யே பிரபாகரனையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்தார் என்றும் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
சார்ள்ஸ்: இன்று வரையில் கேபி பிரபாகரனை விமர்சித்ததை நான் காணமுடியவில்லை. பிரபாகரனில் தவறு கண்டதாகவும் நான் பார்க்கவில்லை. பிரபாகரன் பற்றி பக்தி மதிப்பு எப்பவும் உள்ளது. தான் படும் வேதனை மற்றவர்களுக்கு புரியாது என்பதை அடிக்கடி கூறுவார்.
கேபி சொன்னார், ‘பிரபாகரன் ஒரு சிறு சந்தேகம் இருந்தாலே அவர்களுடன் பழகமாட்டார். அவர்களைக் கிட்டவும் வைத்திருக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒருவர் என்னை தூக்கி வைக்கிறார் என்றால் அதற்கு ஒருகாரணம் இருக்க வேண்டும். அவர் தூக்கிவைக்காமல் நான் இந்த இடத்தில் இருக்கவில்லை” என்றும் சொன்னார்.
கேபி பற்றி சார்ள்ஸ் அந்தோனிதாஸ்
தேசம்நெற்: கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார் என நீங்கள் நம்புகிறீர்களா?
சார்ள்ஸ்: அவர் பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ மட்டுமல்ல யாருக்கும் தீங்கு இழைக்க மாட்டார் என்ற அபிப்பிராயமே எனக்கு உள்ளது.
தேசம்நெற்: கேபியினுடைய தற்போதைய நிலைப்பாடு சண்டையின் முடிவின் காரணமாக எழுந்த நிலைப்பாடா? அல்லது தான் கைது செய்யப்பட்டதனால் ஏற்பட்ட நிலைப்பாடா? அதாவது அரசுடன் ஒரு உள்நாட்டு யுத்தத்தை மேற்கொள்ள ஆயுத விநியோகத்தை மேற்கொண்டவர் அரசுடன் சேர்ந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு எப்போது வந்தார்?
சார்ள்ஸ்: அவர் மலேசியாவில் கைது செய்யப்பட முன்பே இந்த நிலைப்பாட்டில் இருக்கிறார். போராட்டம் முடிந்து புலிகளின் அழிவின் பின்பு உள்ள சூழலே அவரை அதற்கு நிர்ப்பந்தித்து இருக்கலாம். அவர் பொருளாதார விடுதலையை நோக்குகிறார்.
தேசம்நெற்: கேபி தனது சுயநல நோக்கில் செயற்ப்படவில்லை என நீங்கள் நம்புகிறீர்களா?
சார்ள்ஸ்: கேபி சுயநலம் அற்றவர். நாங்கள் மலேசியாவில் ஒரு சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது மிகவும் குறைந்த விலையான உணவையே எடுப்பார். நாங்கள் கொண்டுபோய் கொடுத்த நல்ல சேட் உடுப்புகளை தனக்கு தெரிந்தவர்களுக்கே கொடுத்தார். இம்முறை நான் என்ன கொண்டுவர என்று கேட்க பென்சில், பென், பேப்பர் கொண்டுவாங்கோ பிள்ளைகளுக்கு கொடுக்க என்றார்.
தேசம்நெற்: கேபியின் இன்றைய இந்த முயற்சி அரசியல் நோக்கம் அற்றது என்று நம்புகிறீர்களா?
சார்ள்ஸ்: கேபிக்கு தனிப்பட்ட திட்டங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. மக்களுக்குள்ளே வேலை செய்ய வேணும் மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் எனபதைவிட வேறு இருப்பதாக நான் நம்பவில்லை.
நாடுகடந்த தமிழீழ அரசு
தேசம்நெற்: கேபி புலிகளுக்கு இன்றும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்றோ அல்லது தாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்தால் மக்கள் ஆதரவளிப்பர் என்றோ நம்புகிறாரா?
சார்ள்ஸ்: ‘இதை விட்டுவிடுங்கோ. இது எல்லாம் முடிந்த கதை’, என்பார்.
தேசம்நெற்: நாடுகடந்த தமிழீழத்தை முன்மொழிந்த அதன் உருவாக்கத்திற்கு வித்திட்ட கேபி யின் இன்றைய நிலைப்பாடு என்ன?
சார்ள்ஸ்: அது பற்றிக் கேட்கவில்லை. எந்த முயற்சியும் நாட்டுடன் சம்பந்தப்படாமல் செய்வதால் பிரயோசனம் இல்லை என்று கருதுகிறார். நாடுகடந்த அரசு நாட்டில் நடந்த அவலங்களுக்கு என்ன செய்தது என்பது என்பது அவரின் கேள்வியாகும்.
இறுதியாக …..
தேசம்நெற்: இந்த பயணத்தின் பின்பு உங்கள் நண்பர்களிடமிருந்து எதிர்ப்புகள் ஏதாவது வந்ததா?
சார்ள்ஸ்: நாங்கள் விட்ட தவறு இனிமேல் விடக்கூடாது. தேசியவாதிகள் என்று என்னைச் சொன்னவர்கள் இப்போது தெரிந்து கொள்ளட்டும் நான் எதைச் சொல்ல விரும்புகிறேன் என்று. யாரும் என்னுடன் பகைக்கவில்லை!
தேசம்நெற்: கடந்த காலங்களில் நீங்கள் பேசிய அரசியலுக்கும் இன்றுள்ள உங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கும் முரண்பாடுகள் உள்ளதா? நீங்கள் தவறு விட்டுள்ளதாக நினைப்பது உண்டா?
சார்ள்ஸ்: பெரிய தவறுகள் விடப்பட்டு உள்ளது. ஒன்று சிங்கள மக்களுக்கு எதிராக திசைதிருப்பியது (ஆரம்பத்தில் அல்ல பின்னர்). அநுராதபுரம் படுகொலைகள் போன்றவற்றிக்கு நாங்கள் எதிராக பிரச்சாரம் செய்ய எங்களுக்கு விசரங்கள் பட்டம் சூட்டினார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நேரம் மிகவும் முனைப்பாக பலமாக எதிர்த்திருக்க வேண்டும். அந்த மக்களுக்காக குரல் கொடுத்தது போதாது இவைகளே தவறுகள் என நான் பார்க்கிறேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் – 1987, சந்திரிகாவின் அரசியல் தீர்வு, 2002 ஒஸ்லோ உடன்படிக்கை போன்றவைகள் எல்லாம் பாரிய தவறுகள். 1987 ல் நாங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் நாம் என்ன நிலையில் இன்று இருந்திருப்போம். இது பற்றி கேபி உடன் பேச முடியவில்லை. கேபி எங்களுடன் தங்கவோ சேர்ந்து சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக கைதிகளாக இருக்கும் புலிகளில் 2000 பேர்களை நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பாக அரசு விடுதலை செய்ய உடன்பட்டிருந்தது.
தவறுகளை விமர்சிக்க வேண்டும். சிலவேளை இந்த வழியால் போயிருந்திருக்க வேண்டியதில்லை என்று யோசிக்கிறேன். நாங்கள் திரும்பி பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.