வன்னி முகாம்களில் உள்ள ஒவ்வொருவருமே இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட மிக முக்கிய திருப்புமுனையின் வரலாற்றுச் சான்றுகள். இவர்கள் ஒவ்வொருவருடைய வரலாற்றுப்பதிவும் மிக முக்கிய சாட்சியங்கள். அந்த வகையில் வன்னியில் உள்ள மக்களுடன் தேசம்நெற் தொடர்ச்சியாகத் தொடர்புகளை மேற்கொண்டு அவர்களுடைய கருத்துக்களையும் தகவல்களையும் பதிவு செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக வன்னி முகாம்களில் உள்ள சிலரின் கருத்துக்களையும் அவர்கள் தந்த தகவல்களையும் தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஒக்ரோபர் 16ல் வன்னி முகாமுக்கு தொடர்பு கொண்ட போது உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்த குடும்பஸ்தருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை நாம் முன்னர் உரையாடியவர்கள் ஏற்படுத்தித் தந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன் என மூன்று குழந்தைகளின் தந்தையான இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் பின்னைய வாழ்வு கிளிநொச்சியிலேயே சங்கமமமாகியது. இவரது பிள்ளைகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை தெரிந்திருக்கவில்லை. அவருடனான நீண்ட உரையாடல் முள்ளிவாய்க்காலின் கடைசி நாட்களைக் கண்முன் கொண்டு வந்த நிறுத்தியது. கேள்வியைக் கேட்பதற்கு எம்மிடம் தைரியம் இல்லை. அவர் என்ன சொன்னாரோ அதனைப் பதிவு செய்தோம். அவருடைய வார்த்தைகளிலேயே உங்கள் முன் பதிவிடுகிறோம்.
‘நான் உருத்திரபுரம், வட்டக்கச்சி, கட்டைக்காடு, விஸ்வமடு, பாரதிபுரம், ஆச்சிக்காணி, இருட்டுமடு, சுதந்திரபுரம், பொக்கணை, முள்ளிவாய்கால் என்று அலைந்து கடைசியில் வன்னி முகாமுக்கு வந்திருக்கிறேன்.
எங்களைக் கொண்டுவந்து முதலில் zone 4ல் விட்டார்கள். இப்ப இரண்டு மாதமாக அருணாசலம் முகாமில் ஒரு யுனிற்ரில் இருக்கிறோம். zone 4 முகாம் செட்டிக்குளம் காட்டுக்குள் இருக்கும் ஒரு சின்ன முகாம். கடைசியாக புலிகளின் பிரதேசத்திலிருந்து வந்தவர்களை இங்கே வைத்திருந்தார்கள். கடைசியாக பிரபாகரனுடன் இருந்த ஆட்கள் என்பதால் இந்த முகாமை ஆமியும் பொலிசும் இது பிரபாகரன் முகாம் என்றும் சொல்வாங்கள்.
புலிகள் கடைசியாக நகை அடைவு பிடித்தவர்கள். இது புலிகளின் வைப்பகம். இந்த வைப்பகத்தில் சனங்கள் நகைகளை அடைவுவைத்து காணி, விதைப்பு, உழுவதற்கு நிலம்வாங்க, உரம்வாங்க, புலிகளிடம் காசு கடன் வாங்குவது வழக்கம். மே மாத தொடக்கத்தில் குடும்ப அட்டை இலக்கங்களைத் தந்துவிட்டு உங்கட நகைகளை எடுத்துக் கொண்டு போங்கோ எனச் சொன்னார்கள். பின்பு நீங்கள் காசு கட்டலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் நிப்பாட்டிப் போட்டுப் போயிட்டாங்கள். ஒருவருக்கும் ஒன்றும் கொடுக்கவில்லை.
பிறகு பார்த்தால் மூன்று உரப்பை நிறைய காசு வந்து கிடந்தது. புலிகள் மூன்று பேர் நின்று ‘காசை அரசாங்கம் எடுத்துப்போடும். சனங்களுக்கு கொடுப்பம்’ என்று சொன்னாங்கள். மற்றவன் ஒருத்தன் சொன்னான் ‘காசு கொடுக்க வெளிக்கிட்டால் சனம் கூட்டம் கூட அவன் ஷெல் அடிப்பான் சனம் சாகும்’ என்று சொல்லிப் போட்டு காசை எரித்து விட்டார்கள். வெள்ளைமுள்ளி வாய்க்கால் அங்காலையும் கடல் இங்காலையும் கடல். ஒரு குறிப்பிட்ட இடம்தானே. ஒரு மூலையில்தான் இருந்தனாங்கள். தொகையான சனங்கள். காசுக்கு சனம்குவிய வெளிக்கிட்டால் குண்டடிப்பான் என்றுதான் முழுக்காசையும் எரிச்சவங்க. ஒரு கிழவிக்கு மட்டும் 18 லட்சம் ரூபாய்கள் கொடுத்தாங்கள். அதை தபால் வாற பையில் போட்டுக்கொண்டு வந்தவ. முழுக்க 2000 நோட்டுகள் புதுக்காசு. எல்லா நோட்டிலும் கடைசி ரெண்டு சைபரும் வெட்டிக்கிடக்குது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. zone 4 வரைக்கும் கொண்டு வந்தவ.
5ம் மாதம் முதற் கிழமையிலிருந்து திரும்ப யோசித்தால் மிகப் பயங்கரம். 5ம் மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் எந்த உடல்களும் யாரும் புதைப்பதில்லை. எங்க பார்த்தாலும் உடல்கள். கடைசிச் சண்டை உக்கிரம். புலிகளும் சாரம் சேட்டுடன் ஆமிக்காரனும் சாரம் சேட்டுடன். யார் எவன் என்று தெரியாமல் நிக்கிறாங்கள். எல்லாப் பக்கமும் எல்லாரும் மாதிரி இருந்தது. முன்பு அரிசிக் கப்பல் புலிகள் வைத்திருந்தார்கள். அந்த இடத்தில் பனைகள் மரங்கள் திடீர் திடீரென எரியும். உக்கிரமாய் புலியும் ஆமியும் அடிபடும்.
நந்திக் கடலுக்குள்ளால் ஒருக்கா தப்பி ஓடிவர முயற்சிக்கையில் என்னுடைய பிள்ளையை புலிகள் பிடித்துப் போட்டாங்கள். எப்படி பிள்ளையை விட்டிட்டு வாறது. அதாலை நாங்கள் திரும்பிப்போய் அங்கேயே இருந்தோம். பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வரவேணும் எண்டதால் புலிகளின் இடங்களிலேயே சுத்தித் திரிந்தேன். எனது ரக்டர் அங்கு நிண்டது. தென்னங்குற்றிகள் ஏற்ற ரக்டர் ஓட வரச்சொல்லி புலிகள் கேட்டாங்கள். இப்படிச் செய்துகொண்டு இருக்கும்போது 5ம் மாதம் ஒன்பதாம் திகதி எனது பிள்ளையைக் கண்டேன். புலிகள் பிள்ளைக்கு பெற்சீற்றில ஒருசட்டையும் காற்சட்டையும் தைத்துக் கொடுத்திருந்தார்கள். பிள்ளையை ரக்டர் பெட்டிக்குள் தாய் ஏறச்சொல்ல பிள்ளை ஏறிவிட்டது. தளப்பாரால் பிள்ளையை மூடிக்கொண்டு வேற இடத்துக்கு வந்துவிட்டோம். 5, 6 நாளாக எங்களுக்கு சாப்பாடு இல்லை.
அங்க எங்கட ரென்ருக்கு முன்னுக்கு இருந்த தாய் தகப்பன் மகன் 3 பேரும் குண்டு விழுந்து ரென்டுக்குள்ளேயே முடிந்துவிட்டார்கள். பக்கத்து ரென்ட் கடைக்காரர் குடும்பம் 16 பேர். 16 பேரும் முழுதாக முடிந்து போனார்கள். எல்லாரும் ரென்ருக்குள் இருப்பதால் யாருடைய ஷெல் வந்து விழுகிறதென்று தெரியாது. எங்களுக்கு தெரிந்த ஆட்களின் உடல்களை உடனேயே எடுத்துப்போய் புதைப்போம்.
நாங்கள் 5 பேர். பிறகு இன்னொரு உறவினர்களும் சேர்ந்து கொண்டார்கள். இந்தக் காலத்தில் தப்பி ஓடுபவர்களை உடனடியாகச் சுடுவது வழக்கமாகி விட்டது. எங்களுக்குப் பக்கத்தில் ஒரு கலியாணம் கட்டாத வயது வந்த பெண் நின்றவ. அவ ‘சாப்பாடு இல்லை. பசி பட்டினியாய் இருக்குது. எங்களை போக விடுங்கோ’ எண்டு கேட்டு பேசுபட்டா. அவவை புலிகள் எங்களுக்கு முன்னாலேயே சுட்டாங்கள். எங்களை திரும்பிப் போகும்படி சொன்னாங்கள். வந்த இடத்திற்கு திரும்பிப் போய் ரக்டருக்குக் கீழே படுத்துக் கிடந்தோம். திரும்ப இரவு ஒன்பது மணிக்கு தப்பி ஓட நந்திக் கடல் பக்கம் வந்தோம். அன்றுதான் 72 மணித்தியாலத்தில் வெள்ளை முள்ளி வாய்க்கால் பிடிக்கிறது என்ற கடைசித் தாக்குதல் நடந்தது. இந்த இரவில் மட்டும் 1200 பேர்வரையில் செத்திருப்பார்கள். ரக்டர் பெட்டிக்கு கீழே லொறிக்குக் கீழே படுத்திருந்த ஆட்கள் என்று பலர் செத்துப் போச்சினம். தெருத்தெருவா எங்கை பார்த்தாலும் உடம்புகள் துண்டுகள் எண்டு பெரிய அழிவு.
கடைசியாய் 7 பஸ்ஸில் வரக்கூடிய ஆட்கள் மட்டுமே மிச்சம். இது 16ம் திகதி 5ம் மாதம். அப்பவும் புலிகள் ‘ஜசிஆர்சி வரும். ஒபாமா கப்பபல் வரும். போக வேண்டாம்’ என்று எங்களுக்குச் சொன்னார்கள்.
இப்பவும் புலிகளிடமிருந்து தப்பிவர நாங்கள் 18, 20 பேர்கள் வந்து இன்னுமொரு ரக்டர் பெட்டிக்குக் கீழே இருக்கிறம். 2, 3 பிரிவாக சனங்கள் படுத்திருக்கிறம். விடிய எழும்பி கேட்டால் குண்டு விழுந்திருக்குது. குடும்பத்தில் ஒரு பிள்ளையைத் தவிர மற்றவை எல்லாரும் சரி. குண்டுகள் எல்லா இடமும் எல்லா நேரமும் விழுகுது. யார் யாருக்கு என்ன எண்டு எதுவுமே தெரியாத இரவு. விடிந்தபிறகு பார்க்கிறதுகள்தான் மிச்சம்.
இங்க காம்பில் என்னோட என்ர எல்லாப் பிள்ளைகளும் இருக்கினம். பொழுதுபட இரவு நேரங்களில் சிஜடி வந்து எண்ணிப் பார்ப்பார்கள். இரவில் பெண்பிள்ளைகளை அம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போறாங்கள். விடிய கொண்டுவந்து விடுகிறாங்கள். கேட்டால் விசாரணை என்று சொல்கிறாங்கள். முகாமில் இருக்கிறவங்கள்தான் பொலிசுக்கு சொல்லிக் கொடுக்கிறது. ‘இந்தப் பிள்ளை புலி. புலிக்குப் பயிற்சி எடுத்தது’ என்று. இதை அவங்களும் நம்பி பிள்ளைகளை வவுனியா கச்சேரிக்கு முன்பாக ஒரு தகரத்தால் அடித்த சின்ன முகாம் உள்ளது. அங்கே கொண்டுபோய் விசாரிப்பாங்கள். பின்பு விடிய கொண்டுவந்து விடுவாங்கள். பிள்ளைகளை கொண்டு போனால் பின்னாலை தாய்மாரும் வெளிக்கிட்டு விசாரணை நடத்துற இடத்துக்குப் போய்விடுவினம். அம்புலன்ஸ்தான் பிள்ளைகளை எடுத்துக்கொண்டு போகும். ஏன் அப்படி இரவில் கொண்டு போகவேணும் என்று எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு அப்பிடி ஏதுமொண்டு நடந்தால் பிள்ளைகள் தாய் தகப்பன் குடும்பம் மனம்சோர்வாக அழுது புலம்பிக்கொண்டு இருப்பினம். இல்லையோ? அப்படி நான் காணவில்லை. எங்கட முகாமிலை பெடியள் ஒருத்தரையும் அப்படி பிடிச்சுக்கொண்டு போகேல்லை. புலிகளில் இருந்த பெடியங்கள் என்று எங்கட காம்பில் ஒருத்தரும் இல்லை. அப்படி ஒண்டும் இல்லை.
முன்பு புலிகளில் இருந்தவர்களை ஓமந்தை வவுனியா மடுக்கந்தை பொலனறுவை இப்படியான இடங்களிலை உள்ளுக்கை கொண்டு போய் வைத்திருக்கிறாங்கள். தாய் தகப்பன்மார் ஜிஏ, ஜிஎஸ் மூலம் கடிதம் எழுதிக் கொடுத்து அனுமதி பெற்று மாதத்திற்கு ஒருக்காப் போய் பார்த்திட்டு வரலாம். அங்கே சாப்பாட்டுக்கு கன்ரீன் இருக்காம். காசு இருந்தால் எதுவும் வாங்கலாமாம். தாய் தகப்பன் போய் பார்த்திட்டு தங்களிட்ட இருக்கிற காசுகளை கொடுத்திட்டு வந்திருக்கிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள் காணாமல் போகிறார்கள் என்று அப்படி ஏதும் நடப்பதாக பெற்றோர்கள் போய் வந்தவர்கள் சொல்லவில்லை. அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகத்தான் போய் பார்த்திட்டு வந்தவர்கள் சொல்கினம்.
நாங்கள் தங்கி இருக்கிற யுனிட்டுக்கு வெளிநாட்டவர்கள் யாரும் வரமுடியாது. இங்கை எங்கட குடும்பத்திற்கு (ஜவர்) தண்ணீர் 6 லீற்ரர் மட்டும்தான். அதுவும் சிலவேளை இரவு 10 மணிக்குத்தான் கிடைக்கும். தண்ணீர் பெரிய தட்டுப்பாடு.
சாப்பாடு என்றால் மா அரிசி பருப்பு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தருவாங்கள். மற்ற எல்லாச் சாமான்களும் நாங்கள்தான் வாங்க வேணும். ஒருநாளைக்கு நூறு ரூபாவாதல் வேணும். சிலவேளை யாரும் நிறுவனங்கள் வந்தால் சட்டி, பானை, கரண்டிகள் தருவினம். முந்திமாதிரி சமைச்ச சாப்பாடு தாறதில்லை. நாங்கள்தான் சமைப்பது. பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் உள்ளது. வெள்ளியும் செவ்வாயும் மரக்கறி வரும். வேற ஏதாவது தேவை எண்டால் காசு கொடுத்துத்தான் வாங்கவேணும்.
உடுப்பு துணிகள் யாரும் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து தந்தாலேயொழிய மற்றும்படி வேற ஒண்டும் இல்லை.
ரொய்லெட் சிலவேளை கிழமைக் கணக்காய் துப்பரவு பண்ணாமல் இருக்கும். இருந்திட்டு ஒரு நாளைக்குத் தான் துப்பரவு செய்வாங்கள். ரொய்லெட் பெரிய பிரச்சினை.
ரென்ட்ருகள் மழை வந்தால் இருக்க ஏலாது. பெரிய பிரச்சினை வரலாம். தண்ணி உள்ள வரும். 13ம் யுனிட், 3ம் யுனிட் இருப்பது பள்ளமான இடங்களில். மழை வந்தால் மழை வெள்ளத்தில் நீந்த வேண்டிவரும். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்களை எங்கேயோ கொண்டு போறாங்கள். எங்கேயோ புது காடுவெட்டி புது முகாம் போடுவதாகக் கேள்விப்படுகிறோம். எங்க என்று தெரியாது. மழைவந்தால் இங்க இருக்கேலாது எண்டதாலதான் மாத்துறாங்கள்.
வன்னியில் என்ன நிலவரம் என்று எமக்கு எதுவுமே தெரியாது. வேறு இடத்து செய்திகள் என்று கேட்க எங்கட காம்பில் ரேடியோ இருக்கிறது. தனித்தனிய எல்லோரிடமும் ரேடியோ இருக்கிறது. ஜபிசி ரேடியோ புலிரேடியோ எண்டு கேட்பதே பயம். ஜபிசி புலி ரேடியோ என்று பொலிஸ்காரனே சொல்வான்.
எங்களில் ஜந்துபேர் இன்னொரு குடும்பம் ஆறுபேர் பதினொரு பேர் இருக்கிறம். ஒரு தளப்பார் இருக்குது. பெண்களை உள்ளே படுக்க விட்டுவிட்டு ஆண்கள் வெளியே படுத்துக் கொள்வோம். இரவு பத்து மணிக்குப்பிறகு லைற் ஓவ் பண்ணிடுவாங்கள். எங்களுக்கு லாம்பு தந்திருக்கு.
பள்ளிக்கூடம் பக்கத்தில் உள்ளது. பின்னேரம் ஒரு மணிமுதல் மூன்று முப்பது வரை நடக்கும். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகிறார்கள். 15ம் யுனிற்றிலும் 6ம்யுனிற்றிலும் ஒரு மருத்துவ சேவை உண்டு. அங்கே போகலாம். ஏலாது என்றால் ஆமிவந்து பார்த்து செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்குத்தான் போக வேணும்.
இங்கே இருக்கேலாது. வெளியேவிட்டால் நிம்மதியாக இருக்கும். உறவினர் குடும்பம் வவுனியாவில் இருக்கினம். அவர்களோட போய் இருக்கலாம்.
கிளிநொச்சிக்கு ஆமி வந்தபோது புலிகள் எங்களை விட்டிருக்கலாம். நாங்கள் எங்கடபாட்டில எங்களிட்டை இருக்கிறத்தோடை ஆமியிட்டை போயிருக்கலாம். இப்ப புலிகள் எங்களை ஒண்டும் இல்லாமல் பண்ணிப் போட்டாங்கள். எல்லோரிடமும் நகைகளைச் சேர்த்துக்கொண்டு அவரவர்(புலிகள்) போய்விட்டினம். கையில் ஒண்டும் இல்லாமல் வந்தோம். ஆமி கொஞ்சம் தந்தது பிறகு ஜனாதிபதி மனைவி வந்து சேட்டு சாரம் தந்தார்கள். இது ஜந்தாம் மாதம் 30ம் திகதி என நினைக்கிறேன். பார்வைக்குறைபாடு உள்ளவைக்கு கண்ணாடி கொடுத்து உதவி செய்தார். ஒரு ஆஸ்பத்திரி கட்டித் தந்தவங்கள். படிக்கிற பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட உபகரணங்கள் புத்தகங்கள் உடுப்புகள் சப்பாத்துகள் எல்லாம் தந்தவைகள். எல்லாம் நொந்து கெட்டுப்போனம் அண்ணை. புலிகள் எங்களை கிளிநொச்சியிலேயே விட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினை அவலம் இல்லை.
காம்பிற்கு வந்தபிறகு zone 4ல் இலங்கை வங்கி வந்து அடைவு வைக்கிறவர்கள் அடைவு வைக்கலாம் என அறிவித்துக்கொண்டு வந்தது. அப்போது எங்களுடன் வரும்போது காசு கொண்டுவந்த மனிசி தன்னிடம் காசு இருக்குது என்றா. மகன் வெளிநாட்டில் இருந்து அனுப்பின காசு என்றும் சொன்னா. காசை எடுத்து வெளியே வைத்தால் 2000 ரூபா நோட்டுகள் எல்லாத்திலும் கடைசி ரெண்டு சைபரும் வெட்டியிருக்குது. இவவும் எதையும் திறந்து பார்க்காமல் காசை வாங்கிக் கொண்டு வந்தவ. செல்லடி ஒருபக்கம் பயம் ஒருபக்கம் யார்உதைப் பார்த்தது. ஆமிக்காரர் பஸ்ஸில் ஏத்திக்கொண்டு வரும்போது மனிசியும் எங்களோடைதான் வந்தவ. இது பொய்யான பணமாக செல்லாக்காசாக இருக்கவேணும். அது அனேகமாக புலிகளின் வைப்பகக் காசாகத்தான் இருக்கும். சிலவேளை வேறு என்ன சனியனோ தெரியாதுதானே அண்ணை. மனிசி கொண்டுவந்த காசு 18, 19 லட்சம் இருக்கும். உடனே பொலிசைக் கூப்பிட்டு கச்சேரி ஆட்களைக் கூப்பிட்டு 80 000 ரூபாய் புத்தகத்தில போட்டாங்கள். அவ்வளவுதான். மிச்சம் பறிமுதல். எனக்கு தெரிய அண்ணை ஆக 80000 ரூபாய்தான் கொடுத்தாங்கள்.
எங்களை வெளியே விடுவாங்களா? என்ன என்று ஒண்டுமே சொல்லுறாங்கள் இல்லையே. ‘முல்லைத்தீவுக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு பதியுங்கோ’ என்று கேட்டால் ஒரு பதிலுமே வருகுதில்லை. ‘கிளிநொச்சிக்கு இப்போதைக்கு போக இயலாது. உங்களுக்கு இங்க முகாம்களில் ஏதும் பிரச்சினை என்றால் கச்சேரிக்கு போய் அறிவியுங்கள்’ என்று சொல்லுவாங்கள். பொலிஸ் வந்து குடும்ப விபரம் இயக்கத்தில் இருந்தனீங்களோ தொடர்பு இருந்ததோ என்றெல்லாம் விபரங்கள் எடுப்பான். ‘சாப்பாட்டுச் சாமான்கள் தாறம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருங்கோ. எல்லாம் நேரம் வரேக்கை விடுவம்’ என்று சொல்கிறாங்கள்.
‘சனங்களின் வாகனங்கள் கார் லொறி ரக்ரர் எல்லா வாகனங்களும் கிளிநொச்சி கச்சேரி மைதானத்தில் கொண்டுவந்து விட்டிருக்குது. எல்லாம் தரப்படும். பரந்தனில் ஒரு மைதானத்திலும் எல்லாப் பொருட்களும் இழுத்து வந்து விடப்பட்டுள்ளது. அவரவர் பொருட்கள் அவரவரிடம் தரப்படும்’ என்றும் சொல்கிறார்கள். எங்கட வாகனப் புத்தகங்கள் எங்களிட்ட இருக்கின்றது.
ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தெரிந்த ஆட்களை போய்ப் பார்க்க கதைக்க விடுவார்கள் நான் போய்ப் பார்த்துள்ளேன். பக்கத்திலுள்ள முகாம்களுக்கு போய்வரலாம். ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு காவலுக்கு நிக்கிற ஆமிக்காரங்கள் கொஞ்சம் சேட்டைக்குணங்கள் உள்ளவங்கள். அதால அங்குபோக நான் முயற்சிக்கவில்லை. சில ஆமிக்காரங்கள் குடிச்சுப்போட்டு வெறியில்நிண்டு தெருவில் போய் வரும்போது பெண்களை சேட்டை செய்வாங்கள் மற்றும்படி வேற பிரச்சினைகள் இல்லை.
இங்கு அருணாசலம் முகாமில் பத்தாம் யுனிட்டில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கின்றது. காம்பில் மருத்துவம் செய்யும் சிங்கள டாக்டர் பெண்ணும் சேர்ந்துதான் இந்த கோயிலை அமைத்துத் தந்தார்கள். சனங்கள் கௌரி விரதம் இருக்கிறார்கள். அங்கே 50 ரூபாய்கள் கொடுத்து அர்ச்சனை செய்யப் போகிறார்கள்.
டக்ளஸ் தேவானந்தா எங்கட காம்பிற்கு வந்தார். அவர்தான் வந்து எங்களுக்கு என்ன தேவை என்று கேட்டு எல்லாப் பொருட்களும் அனுப்பி வைத்திருந்தார். எந்த விடயங்களும் எழுதிக் கொடுத்தால் அவரிடம் அது வந்து சேரும். 8, 9 பஸ்ஸில் எல்லோருக்கும் பார்சலாக உடுப்புக்கள் பொருட்கள் அனுப்பி வைத்தார். அவரை கட்டிப்பிடித்து கதைத்தவர்கள் பலர். அழுது குழறி அவரிடம் தங்கடை குறைகளை எல்லாம் சொல்லுவினம். புலிகள் செய்த அநியாயங்களையும், எப்படிச் சனங்களை கொன்று போட்டார்கள் என்றும் சனங்கள் ஒப்பாரி வைச்சு சொல்லிச்சினம். அவரிடம் எந்த விடயங்களும் எழுதிக் கொடுத்தால் அது கட்டாயம் வந்து சேரும். பிறகும் வந்து எல்லா மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கா என்று பார்த்துவிட்டுத்தான் போனவர். கூட்டமொன்றும் வைத்தவர். கூட்டத்தில் ‘ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் ஒற்றுமையாக இருக்கவேணும் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்’ என்றார். வேறு ஆட்கள் யாரும் வந்து எங்களைப் பார்க்கவில்லை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எங்களால் வாக்களிக்க முடியாது. நாங்கள் எல்லாம் கைதிகள் அண்ணை. அங்கே எல்லோரும் எங்களை கைதிகள் என்றுதான் கதைப்பினம். வாக்களிக்க விட்டால் சனங்கள் ரணிலுக்குத்தான் போடும்.
முள்ளிவாய்க்காலில் சண்டை நடந்த காலங்களில் மே 8ம் திகதிக்குப் பிறகு எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ரேடியோ இல்லை. ஒரு பாதர் இருந்தவர் அவர் ரேடியோ கேட்டுச் சொல்வார். ‘வெளிநாடுகளில் உண்ணாவிரதம் இருக்கினம்’ என்று சொன்னார். அந்த பாதரும் செத்துப் போனார்.
மே மாதம் 8ம் திகதியிலிருந்து மே மாதம் 18ம் திகதிவரை சரியாய்க் கஷ்டப்பட்டுப் போனம். பயம். எண்டைக்கும் இப்படிப் பயந்ததில்லை. மரணப்பயம். எங்களோடை இன்னொரு பொடியனும் இருந்தவர். அவர் மனைவியையும் தாயையும் அனுப்பிவிட்டு எங்களோட நிண்டவர். தானும் சேர்ந்து போனால் ஆம்பிளை எண்டுகண்டதும் கட்டாயம் புலிசுடும் எண்டதால் தான் நின்றுகொண்டு அவங்களை அனுப்பி வைத்தனான் என்று சொன்னார். உடுக்கிற சீலையில் பதினொரு மண்மூட்டைகள் கட்டி வைத்திருந்தனாங்கள். எந்த நேரமும் நாங்கள் தப்பியோட வழி பார்த்துக் கொண்டுதான் திரிந்தோம். இது மே மாதம் 12ம் திகதி பின்னேரம். தேத்தண்ணி போட சீனி இல்லை. பசிவேறு. சீனி வாங்க காசு இல்லை. ஒண்டரைக் கிலோ சீனி 5500 ரூபாவுக்கு விக்கிறாங்கள். 13ம் திகதி விடிய இந்தப் பெடியன் தேத்தண்ணி குடிப்பம் எண்டு கடைக்குப் போனவர் திரும்பி வரேல்லை. கடைக்குமேல் ஷெல் விழுந்து அதில நிண்ட எல்லாரும் சரி. இந்தப் பெடியன் யார், எவன், எந்த இடத்தவன் ஒன்றுமே தெரியாது. அந்தப் பெடியனை நாங்கள் கட்டின மண்மூட்டையை அவிழ்த்து மூடிப்போட்டு இடம் மாறிவிட்டோம்.
இடம் அடிக்கடி மாறுவோம். அந்த நேரம் ஒரு இடம் ஒரு பங்கர் எண்டு ஒண்டுமே நிரந்தரம் எண்டில்லை. அலைஞ்சு கொண்டும் ஓடிக்கொண்டும் பதுங்கிக் கொண்டும் தலைவிதிப்படி நடக்கட்டும் என்றுதான் திரிஞ்சோம். இப்படி கொஞ்சம் அல்ல பல பேர்கள். தாய் தகப்பன் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஒட புலிகள் பிள்ளைகளை சுட்டு செத்த சம்பவங்கள் பல நடந்தது. தப்பி ஓடுகிற சனங்களை தண்ணீக்கை போகவிட்டு புலிகள் சுட்டாங்கள். சனங்களின்ர கைகள் கால்கள் துண்டாடுகிற மாதிரி சுட்டவங்கள். அப்பிடியும் சனங்கள் தப்பி ஓடினது தான்.
15ம் திகதி ஆமி கிட்ட வந்திட்டாங்கள் நானும் பிள்ளைகளும் நிக்கிறம். என்ர கையில் ஒரு சாறம் சேட்டு மட்டும் தான். கட்டியிருந்த சாறம் அவிட்டுவிட ஏலாது கிழிஞ்ச சாரம். ஆமியிட்ட போவம் எண்டு வெளிக்கிட்டோம். வெளிக்கிட இயக்கம் ‘விடமுடியாது’ எண்டது. ‘ஜசிஆர்சி வருகுது. எங்கள் எல்லாரையும் காப்பாற்ற அமெரிக்க கப்பல் வருகுது. திரும்பிப் போங்கோ’ எண்டு கலைச்சு விட்டிட்டாங்கள். அப்படிச் சொன்ன புலி உறுப்பினர்கள் ‘யார் என்று தெரியுமோ’ என்று கேட்க இல்லை அவர்கள் எல்லாரும் புதியவர்கள். 7 பேர் நிண்டாங்கள். ‘நாங்கள் ஒரு கூட்டம் கூடி முடிவு எடுத்துள்ளோம். ஒபாமா கப்பல் அனுப்புகிறார். ஜசிஆர்சி கப்பல் வருது. ஒருபிரச்சினையும் இல்லை. எல்லாரும் தப்பிப்போகலாம்’ என்று தடுத்தார்கள். அந்த நேரம் நிண்ட ஆட்களும் மிக கொஞ்சம். கன சனம் தப்பி ஓடிவிட்டது. நான் பிள்ளைகளை தண்ணீக்காலை கொண்டு போகேக்கை புலிகள் சுட்டுப் போடுவாங்கள் எண்ட பயத்தில் தான் நிண்டனாங்கள்.
பிறகு நாங்கள் பனங்குத்திகளுக்கை படுத்துக் கிடந்தோம். இங்கே தான் அந்த நியாயம் கேட்ட பொம்பிளையை சுட்டவங்கள். இதில ஒரு பனை நிழலுக்கு அப்பிடியே நீளத்துக்கு சனங்கள் 20 பேர் மட்டில நிழலுக்கு இருந்தவைகள். இவர்கள் ஆமியின்ர பக்கம் ஒட ஆயத்தமாக இருந்தார்கள். ஆமியும் ஒரு கூப்பிடு தொலைவிலேதான் நிண்டது. ‘அங்கால போங்கோ இங்க நிக்காதேங்கோ’ எண்டு புலிகள் சத்தம் போட்டாங்கள். பிறகு ஆமிக்கு புலிகள் கிரனைட் எறிய ஆமி திருப்பி அடிச்ச ஷெல் இந்த சனங்களுக்குப் பக்கமாய் விழுந்து. அதில 17 பேர் செத்துப் போயிட்டினம். இது 16ம் திகதி பகல் 1 மணிக்கு நடந்தது. நாங்க ஒரு கொஞ்சப் பேர்தான் பெருந்தோகையான சனங்கள் வேறு வேறு இடங்களால ஓடித் தப்பிவிட்டினம். நாங்கள் ஒரு கொஞ்ச நாய்களிட்டை எம்பிட்டிட்டோம். நிண்டு அலைக் கழிஞ்சது தான். பிள்ளைகளை சுட்டுப்போடுவாங்க எண்ட பயம்.
எங்கட ஊரில நீர்ப்பாசன இலாகாவில் வேலை செய்தவர். அவரின் பிள்ளை இயக்கத்தில் பிடித்து வைத்திருந்தவங்கள். பிள்ளையையும் கூட்டிக் கொண்டு போய்த்தப்புங்கோ எண்டு புலி ஒருத்தன் கூட்டிக் கொண்டு வந்தான். இன்னுமொரு பொம்பிளைப் பிள்ளையும் – 10ம் வாய்க்கால் பிள்ளை -வந்தது. இந்தப் பிள்ளையின்ர தாய் தகப்பன் முந்தியே வவுனியாவுக்கை ஓடி வந்துவிட்டினம். இயக்கம் இந்தப் பிள்ளையையும் பொடியனையும் கூட்டி வந்து தப்பி போங்கோ என்று காட்டிவிட்டு முழங்கால் அளவு தண்ணீக்கை போகவிட்டுட்டு பொடியனையும் பொம்பிளைப் பிள்ளையையும் சுட்டுப் போட்டாங்கள். நான் ரக்ரரில் குத்திகளை ஏற்றி வந்து போட்டுவிட்டு பக்கத்தில பார்த்துக்கொண்டு நிண்டேன். இவ்வளவும் எனக்கு முன்னால நடக்குது. பொடியனுக்கு காதிலும் நெஞ்சிலும் காயம். பொம்பிளைப் பிள்ளை உடனேயே செத்துட்டுது பொடியன் காயத்துடன் ‘அப்பா அம்மா’ எண்டு தகப்பன்ர காலைப் பிடித்து கெஞ்சுகிறான். பொடியனை தூக்கிக் கொண்டு கிட்ட இருந்த இயக்கத்தின்ர ஆஸ்ப்பத்திரிக்கு போக ‘எங்களிட்டை மருந்து ஒண்டும் இல்லை. போங்கோ’ எண்டு கலைச்சு விட்டினம். பிறகு பொடியனும் செத்துப் போச்சு. மண்ணில் ஒரு அரை அடி தாளம் கிடங்கு கையால கிண்டி உடனேயே தாட்டுப்போட்டோம்.
அந்தப் பொடியனுக்கு ஒரு 22 வயது இருக்கும். இந்த பொடியன் இயக்கத்தில் இருக்கவில்லை. கோயில் துப்பரவு பண்ணி தேவாரம் பாடி கோயில் வேலை செய்கிற பொடியன். வீட்டுக்கு ஒருத்தர் வரவேண்டும் எண்டு கட்டாயப்படுத்தின நேரம் புலி பிடிச்சுக் கொண்டு போனது. பிறகு இவனை தகப்பன் இயக்கத்திலிருந்து களவாக கூட்டிவந்து மல்லாவியில் ஒளிச்சு வைச்சிருந்து. பிறகு திரும்ப முள்ளி வாய்க்காலில் இந்தப் பொடியன் பிடிபட்டுப்போச்சு.
எங்களுக்கு மற்றமற்ற பக்கங்களில் என்ன நடக்குது எண்டு தெரியாது. விடிய 5.30க்கு மேல் ஒருத்தரையும் காணவில்லை. புலிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. ஆமி ஒரு 50 யார் தூரத்தில் மண் மூட்டை கட்டி நிற்குது ‘கெதியா வாங்கோ. கெதியா வாங்கோ’ எண்டு ஆமி கையை காட்டினாங்க. நானும் பிள்ளையளோட ஆமியிட்டை ஒடிவந்திட்டோம். ஒரு பிஸ்கட் பைக்கட்டும் தண்ணீர்ப் போத்தலும் தந்தாங்க. பிறகு பஸ்ஸில் ஏத்தி இங்க வந்தோம்.” என்று தன் மரண அனுபவத்தை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். ”முகாமில் முக்கியமான சில பெண்கள் இருக்கினம். அவர்கள் தான் யார் வந்தாலும் முன்னுக்கு போய் கேள்வி கேட்பார்கள். பிரச்சினைகளை சொல்லுவார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடனும் கதைக்கலாம்” என்று ஒரு பெண்மணியிடம் தொலைபேசியை வழங்கினார்.
இராமநாதன் முகாம் குடும்பப் பெண் ஒருவரின் கதை இது: ”சேர்த்த பணங்களையும் சொத்துக்களையும் அநியாயமாக இழந்து ஒன்றுமில்லாமல் இருக்கிறோம். ஒரு இடி சாம்பலும் மக்களுக்கு செய்ய மாட்டாங்கள். தாங்கள் தங்கட வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போய்விட்டாங்கள். இவங்கள் எப்பவோ போயிருந்திருக்க வேணும். இந்தச் சிதறுவார் என்ன செய்தவங்கள். நாங்கள் கட்டின வீட்டிலும் இருக்க முடியவில்லை. உழைச்ச காசையும் நாங்கள் அனுபவிக்கவில்லை. எப்ப பாத்தாலும் வரி அது இது எண்டு காசை பறிப்பது தான் தொழில். மனிசருக்கு உதவாத நாய்கள் இவங்கள்.” என்று அப்பெண் கடும் கோபத்துடன் கூறினார்.
அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் மகளுடனும் கதைக்க முடிந்தது. மகள் வருமாறு தனது முகாம் அனுபவத்தைத் தெரிவித்தார். ”எனது பள்ளி நான் இருக்கும் முகாமுக்குள்ளேயே இருக்கின்றது. அன்று (16ம் திகதி) நான்கு பாடங்கள் தான் நடந்தது. மற்றப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் வரவில்லை. எனது சகோதரர்கள் கதிர்காமர் முகாமுக்குப் போய்ப் படிக்கின்றனர் (அவர்கள் உயர்தர வகுப்பினர்)” என்றும் கூறினார்.
படிக்கக்கூடிய தனது பிள்ளைகளுக்கு படிக்க வசதியான இடமில்லை என தாய் குறைபட்டா. தொடர்ந்து தாய் கதைக்கையில் ”தமக்கு அரிசி சீனி பருப்பு மா தேங்காய் எண்ணெய் இதோட ரின்மீனும் சோளன் மா பைக்கற்றும் தருவார்கள். இந்தக் கிழமை ரின்மீன் தரவில்லை. குடிக்கிற தண்ணீர் தரப்படும். குளிப்பதற்கு குழாய்க் கிணறு இருக்கின்றது. மற்றது லைன் பைப்பிலும் ஒரு யுனிட்டுக்கு ஒரு மணித்தியாலம் தண்ணீர் தருவாங்கள். நாங்கள் வாளியைப் போட்டுவிட்டு வரிசையாக நிண்டு குளிப்பம்” என்றார்.
ஒக்ரோபர் 17ல் எம்முடன் கதைத்த குடும்பத்தினருடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது: ‘அவர்கள் அன்று தீபாவளி கோவிலுக்குப் போய்விட்டார்கள்’ என்று கூறினார்கள். எனவே வவுனியாவில் வதிபவரும் எனக்கு வேறு ஆட்கள் தொடர்புகள் கிடைக்க உதவுபவருமான ஒருவருடன் தொடர்பு கொண்டேன். “அவனவனன் இஞ்சையிருந்து எங்கையாவது வெளிநாட்டுக்கு ஓடித்தப்ப திரியிறான். நீங்கள் என்னடாவெண்டால் உங்கை இருந்துகொண்டு இங்கை என்ன நடக்குது எண்டு கேட்டுக்கொண்டு. உங்களுக்கு வேற வேலையில்லையோ? உங்கட பிள்ளை குட்டி குடும்ப அலுவல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கோ” என்றார்.
இருந்தாலும் அவர் வவுனியாவில் உள்ள தன்னுடைய நண்பருடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். ”வவுனியாவிற்கு சனங்கள் தொகையாக வெளியேறி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு காம்பில் கொடுத்த சாமான்கள் கொடுத்த பருப்பு சீனி கூடுதலாக சேர்ந்தால் வெளியே வரும்போது கொண்டுவர விடுவாங்கள். அதை விற்றால்த்தான் அவர்களுக்கும் மற்றச் செலவுக்கு காசு வரும். அதால விக்கிறாங்கள். உள்ளுக்க பருப்பு 30 ரூபா என்றால் வெளியில் அதை 60 ரூபாக்கு விக்கினம். கொழும்பு மார்க்கற் 170 ரூபா. வெளியால வாறவங்க உள்ளுக்குள் இருக்கும் ஆட்களிட்டை 30 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டுவந்து 60 ரூபாய்க்கு விக்கினம். உள்ளுக்குள் இருப்பவனுக்கும் காசு. வெளியில வந்தவருக்கும் காசு. இப்படி பிழைக்கத் தெரியாட்டி வாழ இயலாது என்றார்.
கனசனத்தை வெளியால கொண்டுவந்து பள்ளிக்கூடத்தில வைச்சு தங்கட தங்கட ஆட்களோட போக விட்டிட்டாங்கள். இப்படி தொடர்ந்து நடக்குது.
இனிமேல் ஏதும் புதிசாய் பிரச்சினை வந்தாலும் அவன்ர ஆமி சமாளிக்கும் எண்ட துணிவு அரசாங்கத்திற்கு வந்து விட்டது” என்றார் அந்த நண்பர்.
உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்த குடும்பஸ்தருடன் ஓக்ரேபார் 24ல் மீண்டும் கதைத்தேன். இப்போது முன்னர் உரையாடியவரின் மனைவியுடன் பேசினோம். அவர் சொன்னார் ”இன்று புதிதாக வவுனியா மானிப்பாய் போக உள்ளவர்களுக்கு ரோக்கன் தந்திட்டார்கள். எங்களுடைய ரோக்கன் நம்பர் இரண்டாயிரத்து எழுநூற்றிச் சொச்சம். நாங்கள் வவுனியா போக ஆயத்தம் எப்ப ஏற்றுவது என்று தெரியாது. முல்லைத்தீவு. மல்லாவி துணுக்காய், பாசியன்குளம் இடங்களுக்கு போக உள்ளவர்களுக்கும் ரோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இனி சிஜடி விசாரித்து ஏற்றுவார்கள். வயது கட்டுப்பாடுகள் உள்ள பிள்ளைகளை புலிகளுடன் தொடர்புகள் இருந்தவர்களா என சிஜடி விசாரிப்பார்கள். சிலநேரங்களில் மற்றவர்கள் இவர்கள் புலியில் இருந்தவர்கள் என்றும் சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி புலிகளுடன் தொடர்பு உள்ளவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி, மனம் மாறக்கூடிய பயிற்சிகள் அளிக்கப்படும். வயது கட்டப்பாடு உள்ள பிள்ளைகளுக்கு கட்டாயம் விசாரணைகள் இருக்கும்” என்றார்.
முகாமில் உள்ளவர்களிடம் புலிகளினால் ஏற்ப்படுத்தப்பட்ட வயது கட்டுப்பாடு உள்ளவர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு. அதாவது இந்த இளம் வயதினர் முன்பு புலிகளிடம் அனுமதிபெற்றே போகவேண்டும். இன்று சிஜடி விசாரணையின் பின்பே போக அனுமதிக்கப்படும் அல்லது புனர்வாழ்வு முகாம் போக வேண்டி வரும்.
உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்தவரின் மனைவி தொடர்ந்தார் ”வெளியேற பஸ்ஸில் ஏற்றும் மக்களை பள்ளிக் கூடங்களில் வைத்திருந்து அங்கிருந்து ஒவ்வொரு குடும்பங்களாக பேசி அவர்கள் வீடு தங்க இடம் ஏதும் இருக்கிறதா? அல்லது இவர்களுக்கு வேறு ஏதும் உதவிகள் தேவையா என ஆராயப்படும். எல்லோருக்கும் ஒவ்வொரு ரென்டும் கொடுக்கப்படும் 5 000 ரூபாய் பணமும் கொடுக்கப்படும். 20 000 ரூபாய் வங்கியில் இடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு தரும்வரை தெரியாதுதானே. முன்பு போனவர்களுக்கு 25 000 ரூபாயும் கொடுக்கப்பட்டு அதில் 4000 ரூபாய் இவர்கள் சாமான்கள் ஏற்றிச் சென்ற லொறிக்கு கூலி கேட்கப்பட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம் உண்மைகள் தெரியாது.
பள்ளிக்கூடங்களில் மக்களை இறக்கிவிட்டு அங்கே இருந்து அவரவர் வீட்டுக்கு கூட்டிச்செல்கின்றனர். அவரவர் வீடுகள் இருக்கா? அந்த வீட்டில் சீவிக்க முடியுமா? அல்லது இவர்களுக்கு இவர்களது வளவில் ரென்ட் வேணுமா? என பல விடயங்களைப் பார்த்தே வீட்டுக்கு அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இனி நாங்கள் போகும் போதுதானே மிச்சம் மீதி தெரியவரும். சிலவேளை நாங்கள் போகும் போது நிலமைகள் வேறுமாதிரியும் மாறிவிடுமல்லோ. பாப்பம். உயிராபத்து இல்லாத அலுவல் என்றால் எங்களுக்கு ஓகே.
வவுனியாகாரர்களை வவுனியா கச்சேரியில் இறக்குவினம். அவை தாங்களே போகலாம் அங்க மிதிவெடி ஆபத்து பிரச்சினை இல்லைத்தானே. வன்னிப்பகுதிதானே பிரச்சினை. சும்மா நேரடியாக போக ஏலாதுதானே. வவுனியா போறவர்களுக்கு சொந்தக்காரர்கள் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. மற்றவை தங்கட பாடுகளை பாப்பினமாக்கும். வெளியிலவிடு வெளியில விடு எண்டு கேட்டு வெளியே போய்விட்டு யாரைக் கேட்பது. உள்ளே இருந்தால் சாப்பாடும் வசதிகளும் இவர்களின்ர (அரசாங்கத்தின்ர) பொறுப்பு. யோசிக்கவெல்லோ வேணும்.
கிளிநொச்சிபோக சனங்கள் பயப்பிடுதுகள் திரும்பி ஏதும் இதண்டாலும் எண்டு. நாங்கள் அதுதான் வவுனியாவிற்கும் பதிந்திருக்கிறோம். வவனியாவிலிருந்து பிள்ளைகளைப் பற்றி யோசிச்சு செய்வம். எனது பெரிய பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிப்போட்டு குழந்தைப் பிள்ளைகளுடன் கிளிநொச்சி போகலாம் எண்டு இருக்கிறம்.
காம்பிலிருந்து போறவர்களை பள்ளிக்கூடத்தில் வைத்திருந்து பிறகு தகரம் தளப்பார் சாமான்கள் கொடுத்து அவரவர் வீட்டுக்கு அனுப்புகினம். போய் வீடுகளை துப்பரவு பண்ணிப்போட்டு இருங்கோ எண்டு விடுகினமாம். எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் கொடுக்கினம்.சிலவேளை நிலைமைகளைப் பார்த்து செய்ய அரசாங்கத்திற்கு வசதியாக இருக்குது போல. நாங்கள் அவங்கட பக்கத்தையும் பார்த்து தானே யோசிக்க கதைக்க வேணும்.
நாங்க நினைக்கிறோம் மழை வந்தால் இங்கை சில காம்புகள் அல்லோல கல்லோலமாய் போய்விட்டாலும் எண்ட பயம் போலவும் கிடக்கு. காணி வளவு உள்ளவர்கள் தங்கட பிட்டியான பகுதியான பகுதிகளில் ரென்டை போட்டு இருந்தாலும் அவைக்கு தெரியும்தானே மழை வெள்ளம் வந்தால் என்ன செய்யிறது என்று. எது செய்தாலும் பள்ளிக்கூடம் போய் முழுவிபரங்கள் கொடுத்து பதிஞ்சுதான் பிறகு போகலாம் சிலருக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து பதிஞ்சு தங்கட காணிகளுக்கு போய் துப்பரவு பண்ணிப்போட்டு, பிறகு மாலை 6 மணிக்கு பள்ளிக்கூடம் வாங்கோ என்றும் சொல்லுகினமாம்.
அரசாங்கம் பயப்பிடுகிறது அங்க போய் என்ன நடக்கும் என்று. சனமும் பயப்பிடுகுது. அங்கே போய் என்னென்ன சிக்கல்கள் வருமோ தெரியாது என்ற பயம்தான். காட்டுக்குள்ளே இருக்கினம் என்றுதான் சனம் பயப்பிடுகிறார்கள். இப்ப நாங்களும் அதுக்குதானே பயப்பிடுகிறோம். நாங்கள் திரும்பி போக அங்கினை எங்கேயும் இருந்துட்டு வந்து சாப்பாட்டைத்தா? அதைத்தா? இதைத்தா? என்று ஆக்கினைப் படுத்துகின்றாங்களோ என்று நாங்களும் இதுக்கு பயப்பிடுகிறோமல்லோ. சொல்லஏலாது முந்தினமாதிரி திரும்பி வந்து சாப்பாட்டைத்தா? பிள்ளையைத்தா? அப்பிடி இப்பிடி……….
ஆமியால பிரச்சினை என்று பயப்பிடேல்ல. இயக்கத்திக்குத்தான் பயப்பிட வேண்டி இருக்கு. எங்கே யார் இருக்கிறாங்க என்று தெரியாதெல்லோ பிறகு வந்து பிள்ளையளை இழுத்துக்கொண்டு போக வந்தாலும் எண்ட பயம்தான்.
போன கிழமை காம்பிலிருந்து கோவில்பற்றுக்கு போன எங்கட சொந்தக்காரர் போன் எடுத்தவர். அவருக்கு 2 வயது பிள்ளை இருந்ததால் அவருடைய தாய் கையெழுத்து போட்டு யாழ் கச்சேரிக்கு போய் பதிவுசெய்து நேரடியாக வீட்டுக்கு போய்விட்டார். அவருக்கு 25 000 ரூபாய் கையில் கொடுத்தது அரசாங்கம். இப்ப யாழ்ப்பாணம் போறவர்களுக்கு 5 000 காசும் 20 000 வங்கி புத்தகத்திலுமாம். கச்சேரியில் இருந்து கொஞ்சப்பேர் ஆட்டோவிலும் சிலர் கார் பிடித்தும் வீடுகளுக்கு போனவர்களாம்.
நாங்கள் வவுனியாவில் கொஞ்நாள் இருந்து பார்ப்போம். பிறகு பெரிய பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பத்தான் வேணும். இங்க வைத்திருப்பது ஆபத்து என்று யோசிக்கிறோம். நாங்கள் அவ்வளவு பட்டு தெளிந்து வந்து விட்டோம். எங்கட அடுத்த நடவடிக்கை மிக கவனமாக இருக்க வேணும்தானே. அதுதான் பயமாக கிடக்கு. இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும். போட்ட உடுப்போடதானே ஓடி வந்தனாங்கள். எங்களிட்டை ஒண்டும் இல்லை.
இங்கு காம்பில அரிசி மா பருப்பு தருவார்கள். வேறு மரக்கறிகள் வாங்கித்தான் சாப்பாடு சமைக்க வேணும். தாற உணவுப்பொருட்களுடன் சாப்பாடு சமைக்க மிச்ச சாமான்கள் வாங்க காசு வேணும். சரியான கஸ்டம். காசு இல்லாதவர்கள் எப்படி இந்த சாமான்களை வாங்க முடியும். காசு இல்லாத சனங்கள் சரியா கஸ்டப்படுகிறார்கள். அவர்கள் சோற்றை அவித்து பருப்பையும் அவித்து மாத்தளனில் சாப்பிட்ட மாதிரித்தான் சாப்பிடுகினம். வேறு என்ன செய்கிறது.
எங்கட ஏஎல் படிக்கிற பிள்ளையைத்தான் புலி பிடித்துப்போனது. கஸ்ரப்பட்டு பிள்ளையை இழுத்து வந்து சேர்த்திட்டோம். இப்ப பள்ளிக்கூடம் போகிறா? வவுனியாவிற்குப் போனால் வேற பள்ளிக்கூடம் போக வேண்டிவரும். வாற வருடம் ஆவணிக்கு ஏஎல் எடுப்பா! பிள்ளை கெட்டிக்காரி ஒஎல் 7ஏ எடுத்துபாஸ் பண்ணின பிள்ளை. 5ம் வருட ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினவ.
கசிப்பு காய்ச்சி குடிப்பது பற்றி அவர் கதைக்கையில் உங்களுக்கு தெரியும் தானே எங்கட சனங்களை. சிங்களம் கதைக்கத் தெரிந்தவர்கள் ஆமிக்காரனோட கதைத்து அவன் சாமான் வாங்கி வந்து கொடுக்கிறான் காய்ச்சி, குடிக்கிற நாய்கள் வாங்கி குடிக்கும். இது விக்கிறவருக்கும் காசு, உழைப்பு. ஆமிக்காரனுக்கும் கசிப்பு. சனங்கள் கஸ்டம் தானே, சீவியத்தை கொண்டு போக. கசிப்பு காய்ச்சி வித்து சீவியம் நடாத்துதுகள். ஆமிக்காரன்களும் காசு கொடுத்து வாங்கி குடிப்பாங்களாம். இப்படி சிங்களம் கதைச்சு தங்கட அலுவல்களை பலர் பலவிதமாக பார்த்திருக்கிறாங்கள். சிலர் வெளியாலையும் போயிட்டினம்.
இந்த காம்பால் வெளியே போய் வவுனியாவில் உறவினர் குடும்பத்துடன் இருப்பம். அவர்கள் இருக்கிற வீடும் கஸ்டம்தான். கொஞ்ச நாளைக்கு ஏதோ பாப்போம் என்ன நடக்குது எண்டு. கிளிநொச்சி இப்ப போகமுடியுமோ தெரியாது. ஆனால் எங்களுக்கு போக பயமாக இருக்குது.” என்று அவர் பலதையும் பத்தையும் எம்முடன் பேசினார்.
இப்போது மீண்டும் குடும்பஸ்தவருடன் பேசினோம். ‘காம்பில் இருந்து இங்கு இரவும் பகலுமாக ஆட்களை ஏற்றுகிறார்கள். எத்தினையாயிரம் பேரோ தெரியாது ஆனால் ஏத்திக்கொண்டே இருக்கிறாங்கள். இங்கயும் ரென்டுக்கை இருக்க ஏலாது. ஒரே வெய்யில், சனங்களுக்கு கொப்புளிப்பான் சின்னமுத்து என்று நோய்களும். சனங்களுக்கு கஸ்டம். நாங்கள் முதலில் வவுனியா போய் இருந்து நிலமைகளைப் பார்த்து பின்னர் கிளிநொச்சி போவோம் எங்கட வீடுகள் உடைஞ்சு போய்விட்டதோ தெரியாது. எல்லாம் போனால்த்தான் தெரியும்” என்று முகாமை விட்டு வெளியே செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
உருத்திரபுரம் 8ம் வாய்காலைச் சேர்ந்த குடும்பத்தினருடன் இரு தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டதில் அவர்கள் முகாமை விட்டு வெளியேறி வவுனியாவில் உள்ள உறவினர்களுடன் தங்கி இருப்பதாகத் தெரிவித்தனர். அந்த உறவினர்களுடன் இவர்களுக்கு முன்னர் வெளியேறியவர்களும் தங்கி உள்ளனர். அதனால் அவர்களுடைய வீட்டுமுற்றத்தில் இன்னுமொரு சிறு கொட்டிலை அமைத்து அதில் தற்காலிகமாக சிறிதுகாலம் தங்கி இருக்கப் போவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.