இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களின் உடனடி நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஐநா சபை உதவிகளைச் செய்து வருவதாக சனியன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகிய வோல்டர் கேலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐநா சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலன், செட்டிகுளம் மனிக் பாம் பகுதியில் உள்ள கதிர்காமர் நிவாரண கிராமம், அருணாச்சலம் நிவாரண கிராமம் என்பவற்றிற்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.
அங்குள்ள பலதரப்பினரிடமும் கலந்துரையாடி நிலைமைகளை அவர் கேட்டறிந்து கொண்டார். ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடிக்கும் விஜயம் செய்த அவர், வவுனியா செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையிலான திணைக்களத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற வேளையில் நான் இங்கு வந்திருக்கிறேன். மோதல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. வன்னிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைகின்றார்கள். இது எங்களுக்கு கவலையளிக்கின்றது. இதுவிடயத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம்.
அதேவேளை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை பொறுப்பேற்று நிலைமைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. அவர்களைப் பராமரிக்க வேண்டியுள்ளது. இது விடயத்தில் பெரும் சவால்கள் இருக்கின்றன. எனவே நிலைமைகளை நேரில் கண்டறிந்து உரிய சிபாரிசுளைச் செய்வதே எனது விஜயத்தின் நோக்கமாகும்.
கொழும்பில் அரசாங்கத்துடன் நான் பேச்சுக்களை நடத்தியுள்ளேன். இங்கு வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களின் இடைத்தங்கல் முகாம்கள், இடைத்தங்கல் கிராமங்கள், ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடி ஆகிய இடங்களை நான் பார்வையிட்டுள்ளேன். இந்த இடங்களில் அரசாங்கம் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டிருப்பதை என்னால் காணமுடிந்தது.
அதேவேளை, இங்குள்ள நிலைமையானது (இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குப்) பொருத்தமானதாக இல்லை. இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இதுவிடயத்தி்ல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதும், உரிய தீ்ர்மானங்களும் சிபாரிசுகளும் மேற்கொள்ளப்படும். ஐநா மன்றமும் இந்த மக்களின் தேவைகள் குறித்து சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் அவசர நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு நாங்கள் உதவி வருகின்றோம்” என வோல்டர் கேலன் தெரிவித்தார்.