August

August

வடமராட்சிக் கிழக்கில் மக்கள் மீள்குடியமர படைத்தளபதி அனுமதி!

Mahinda_Hathrusinge_Major_Genவடமராட்சி மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர யாழ்.மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அனுமதியளித்துள்ளார். நேற்று மாலை பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடம் இடம் பெற்ற சந்திப்பில் அவர் இவ்வனுமதியை  வழங்கினார்.

போர் நடவடிக்கைகளால் சில வருடங்களுக்கு முன்னர் டமராட்சிக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுதல் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று பலாலி படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது இம்மக்களில் வாழ்வாதார பிரச்சினைகள் உட்பட்ட அம்மக்கள் அவர்களின் காணிகளில் மீள்குடியமர்த்தப்படுவதன் அவசியம் குறித்தும் யாழ்.அரசாங்க அதிபர் படைத்தளபதிக்கு விளக்கிக் கூறினார். இதனயடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இதனடிப்படையில் முதற்கட்டமாக நாளை திங்கள் கிழமை வடமராட்சிக்கிழக்கின் அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த அம்பன் பகுதியில் 81 குடும்பங்கள்  மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன.  அத்துடன் செம்பியன்பற்று வடக்கு, தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2அயிரத்து 455 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 531 பேர் மீளக்குடியமர்வதற்கான அனுமதி நேற்று படைத்தளபதியால் வழங்கப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை யாழ். மாவட்டச்செயலகம் மேற்கொள்ளவுள்ளது.

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

Prof_Hooleயாழ் பல்கலைக் கழகம் தொடர்பாக தேசம்நெற்றில் இடம்பெற்று வரும் விவாதம் பல்வேறு வகையிலும் எமது சமூகத்தின் கல்விநிலை பற்றியதாகவும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

அவ்வகையில் தனது அமெரிக்க பல்கலைக்கழகத்துடனான கற்பித்தலை நிறைவுசெய்து கொண்டு இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கற்பித்தலை முன்னெடுக்கச் செல்லும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை தேசம்நெற் லண்டன் வரவழைத்து ஒரு சந்திப்பினை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

நோக்கம்: வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதும் கலந்துரையாடுவதும். இக்கலந்துரையாடல் பேராசிரியரின் சிறப்புரையைத் தொடர்ந்து இடம்பெறும்.

சிறப்புரையிலும் கலந்துரையாடலிலும் பின்வரும் அம்சங்களை உள்ளடக்க முயற்சிக்கப்படும்.

1. இதுவரையான கல்விமுறையும் அதன் குறைபாடுகளும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்.

2. எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்.

3. கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ் பேசும் சமூகங்களிடையே உள்ள பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் எவ்வாறான மாற்றங்களை தம்முள் ஏற்படுத்த வேண்டும்.

4. சமூக மாற்றத்திற்கு கல்வியை எவ்வாறு பயன்படுத்த முடியும்.

5. தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை உறுதி செய்ய, வாழ்நிலையை மேம்படுத்த கல்வி மேம்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம்.

காலம்: 29 ஓகஸ்ட் 2010, ஞாயிறு மாலை 15:30

இடம்:
Lord Brooke Hall
Shernhall Street
Walthamstow,
London E17 3EY

தொடர்பு :த ஜெயபாலன் : 07800 596 786 or 02082790354
த சோதிலிங்கம் : 07846322369  ரி கொன்ஸ்ரன்ரைன் : 0208 905 0452

இக்கலந்துரையாடல் விவாதம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புபவர்கள் அல்லது பேராசிரியர் ஹூலிடம் கேள்விகளை முன்வைக்க விரும்புபவர்கள் இங்கு அவற்றினைப் பதிவிடவும். முடிந்தவரை விவாதத்தை தொகுத்தும் கேள்விகளுக்கான பதிலைப் பெற்றுத்தரவும் முயற்சிப்போம்.

கூட்டு தேசியவாத அடிப்படையில் அரசாங்கத்துக்கு மு.கா ஆதரவு

rauff.jpg“தனித் தனியான தேசியவாதங்கள் தலைதூக்கியிருக்கின்ற இன்றைய நிலையில் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு கூட்டுத் தேசியவாதக் கோட்பாடு அவசியம் என்ற நிலையிலேயே அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறது.” என மு. கா. தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பiர் சேகு தாவூத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர்,  “இன்று நாட்டில் சிங்களத் தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், முஸ்லிம் தேசிய வாதம் என தேசியவாதம் முரண்பட்டுக் கிடக்கின்றது. இன்று வன்முறை ஒழிக்கப்பட்டிருக்கிறதேயொழிய, தேசியவாத முரண்பாடுகள் ஒழியவில்லை.

இந்த நிலையில் அனைத்து மக்களையும் சேர்த்து கூட்டுத் தேசியவாத சிந்தனையோடு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதனைக் கருத்திற் கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் அரசை ஆதரிக்க முன்வந்திருக்கிறது” என்றார் பiர் சேகுதாவூத்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை ஏற் பட்டிருக்கிறது. இதனால் அவர் 13வது திருத்தத்திற்கும் மேலாகச் (13+) சென்று சிறுபான்மையினர் நலன் பேண ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்துள்ளது.  இதனையும் கருத்தில் கொண்டே நாம் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளோம் எனவும் பiர் சேகுதாவூத் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினரைப் பாதிக்கும் விடயங்களுக்கு மு.கா. ஆதரவளிக்காது; நம்புகிறது தமிழ்க்கூட்டமைப்பு

அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்காதென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிப்பதென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடி முடிவெடுத்திருந்தது.

இந்த நிலையில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பேச்சு களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு ஏதேனும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.  சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது;

இது முஸ்லிம் காங்கிரஸின் தனிப்பட்டமுடிவு.இதனால் எம்மிடையேயான பேச்சுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுமென நினைக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.அது முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி.மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் சரி பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனவே,அந்தப் பேச்சுகளுக்கு ஆபத்து இருக்காதென நினைக்கிறேன்.

தேறி வருகிறார் ஆரியவதி

ariyawathi_main.jpgஆணிகள்,  ஊசிகளை சூடுகாட்டி உடலில் ஏற்றப்பட்டிருந்த மாத்தறையைச் சேர்ந்த ஆரியவதி (49 வயது) எனும் பெண் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சத்திரசிகிச்சையின் பின்னர் குணமடைந்து வருகிறார். அவர் நேற்று பேசக்கூடிய நிலையில் இருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க நேற்று ஆரியவதியை பார்வையிட்டுள்ளார். அத்துடன் அப்பெண்ணுக்கு வீடொன்றையும் வழங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார். உடலில் மீதமாக இருக்கும் 5 ஊசிகளையும் உடனடியாக அகற்ற முடியாதிருப்பதாகவும் ஏனெனில் அப்பெண்ணின் நரம்புகள் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் உடனடியாக அவற்றை அகற்றவில்லை எனவும் கம்புறுப்பிட்டிய மருத்துவமனை பணிப்பாளர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

இப்பெண்ணுக்கு 3 ஆயிரம் டொலர்களை அரசாங்கம் வழங்கும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஸ்பத்திரியில் வைத்து 1 இலட்ச ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதித் தொகை ஆரியவதி ஆஸ்பத்திரியை விட்டு சென்ற பின் கொடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் கூறினார்.

தனது குடிசையை வீடாக நிர்மாணிக்கும் நோக்கத்துடனேயே ஆரியவதி சவூதிஅரேபியாவுக்கு சென்றிருந்தார். கடந்த மார்ச்சில் அங்கு சென்றிருந்த ஆரியவதியை வேலைக்கு அமர்த்திய குடும்பம் கொடுமைப்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் தன்னை அடிப்பதாகவும் அவர்களின் ஏழு பிள்ளைகளும் தன்னை கொல்லப் போவதாக மிரட்டுவதாகவும் ஆரியவதி கூறியுள்ளார். மூன்று மாதங்கள் சித்திரவதைக்குள்ளான இவரை அவருக்கு வேலை பெற்றுக் கொடுத்த முகவரிடம் தொழில் வழங்கியவர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆரியவதியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு முகவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆணிகளை சூடுகாட்டி பெண் (எஜமானி) தனது கணவரிடம் கொடுக்க அவர் தனது உடலில் அவற்றை அறைந்ததாக ஆரியவதி கூறியுள்ளார். நான் வலியால் சத்தமிட்டால் அவர்களின் பிள்ளைகள் என்னை கொல்லப் போவதாக கத்தியைக் காட்டி மிரட்டுவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

அமைச்சர் எஸ்.பி இன்று யாழ். பல்கலை விஜயம்

University_of_Jaffna_Logoஉயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்படவுள்ளது. இங்கு விஜயம் செய்யும் அமைச்சர் பல்கலைக்கழகத்தில் 30 மில். ரூபாயில் நிர்மாணிக்கப்படவுள்ள சுகாதார, விஞ்ஞான கட்டடத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைப்பார்.

பணிப்பெண்களை ஜோர்தானுக்கு அனுப்புவதற்கு தொடர்ந்தும் தடை

இலங்கைப் பெண்களை ஜோர்தானுக்கு பணிப் பெண்களாக அனுப்புவதற்கு இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளமை தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இலங்கை பணிப் பெண்களுக்கு 200 டினாரை மாதாந்த சம்பளமாக வழங்க வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை ஏற்றுக் கொண்டாலேயே ஜோர் தானுக்கு பணிப்பெண்களாக இலங்கையரை அனுப்ப முடியும் என பணியகத்தின் தலைவர் அறிவித்திருந்தார்.

இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி

malinga.jpgஇலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று தம்புள்ளையில் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தில்சானும், ஜயவர்தனவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இதனால் இலங்கை
அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன. 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக விளையாடிய தில்சான் அரை சதம் அடித்தார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார். 15.4 ஓவரில் இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி 20.2 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது முதல் விக்கெட்டை இழந்தது. ஜயவர்தன 39 ஓட்டங்களில் இசாந்த் சர்மா பந்தில் தி. கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தரங்க 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய தில்சான் அதிக பட்சமாக 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்கஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை எடுத்தது.

இந்தப் போட்டியில் அதிக பட்சமாக தில்சான் சதம் அடித்தார். அவர் 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை எடுத்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியா செல்லும் பெண் சாரணியர்கள்

jaffna.jpgஉலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக மலேசியாவில் நடைபெற இருக்கும் கூடலில் பங்குபற்றுவதற்காக யாழ். மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் 36 பெண் சாரணியர்கள்  நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டனர். யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. எம்.பி. சில் வேஸ்த்திரி அலன்ரின் உதயனும் காணப்படுகிறார்.

யாழ், முல்லை, கிளிநொச்சியிலும் நல்லிணக்க குழுவின் அமர்வுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் விசாரணைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக திறந்த அமர்வாக இங்கு விசாரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ.ஏ. குணவர்தன தெரிவித்தார்.

ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்கொள்வார்கள். எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்படும். அதேவேளை ஒக்டோபர் மாதம் ஒன்பதாந் திகதி முதல் 11 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் நடைபெறும்.

ஆணைக் குழு முன் சாட்சியமளிக்க விரும்பும் பொதுமக்கள் குறித்த அரசாங்க அதிபர் அலுவலகத்துடனோ அல்லது ஆணைக்குழுவுடனோ தொடர்புகொள்ளலாமென அறிவிக்கப் பட்டுள்ளது. கொழும்பு- 7, ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மூன்றாந்திகதி நடைபெறும் அமர்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எம். ஐ. எம். மொஹிதீன், பீ. எம்.டி. பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியமளிப்பர்.

செப்டெம்பர் ஆறாந்திகதி கலாநிதி அநுர ஏக்கநாயக்க, சுசந்த ரத்னாயக்க, கே.ரி. இராஜசிங்கம் (ஏஷியன் ரிபியூன்) ஆகியோர் சாட்சியமளிப்பார்கள். செப். 13ஆம் திகதி நடைபெறும் விசாரணையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் வழங்குவார்கள். 15 ஆம் திகதிய விசாரணையில் முன்னாள் சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜோன் குணரத்ன, அருட் தந்தை துலிப் டி. சிக்கேரா ஆகியோரும் 24 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப், மத நிறுவனமொன்றின் பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் அளிப்பர். 29 ஆம் திகதி பேராசிரியர் அர்ஜுன்அலுவிகார, கலாநிதி சமன், பீ. ஹெட்டிகே ஆகியோர் சாட்சியம் வழங்குவர்.