_._._._._
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீளவும் ஒருமுறை பார்ப்பதன் மூலம் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
_._._._._
பிரித்தானிய தமிழ் மாணவர்கள் – இளையோர்களால் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று (யூன் 17 2009) முடிவுக்கு வருகின்றது. பலருக்கும் இவர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரிந்திருக்கவில்லை. 75 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் வன்னி மக்கள் மிக மோசமான மனித அவலத்தை எதிர்கொண்ட வேளையில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் நடத்தப்பட்டது. யுத்த பூமியில் இருந்து பௌதிக ரீதியில் மட்டுமல்ல யதார்த்தத்திலும் வெகுதொலைவில் நின்று நடத்தப்பட்ட இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் – உண்ணாவிரதப் போராட்டங்கள் வன்னி மக்களை அவலத்தில் இருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த அவலத்திற்கு உள்ளே வாழ நிர்ப்பந்தித்து உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கம் போன்று செயற்பட்ட ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன முன்னெடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தாயகத்தில் இருந்து ஒஸ்லோ உடன்பாட்டிற்கு பின்னான காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது என்பது பரகசியமான உண்மை. இந்த அமைப்புகளின் கட்டமைப்பு பரவலாக்கம் என்பனவே இந்த அமைப்புகளின் பின்னணியைப் பறைசற்றும். ஜெனவாவிற்கு முன்னாக இடம்பெற்ற தீக்குளிப்புச் சம்பவமும் இந்தப் பின்னணியிலேயே இடம்பெற்றதாக செய்திகள் வெளிவந்திருந்தது.
வன்னி யுத்தத்தில் வன்னி மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய மனித அவலம் ஒன்று நிகழப் போகின்றது என்பதை தேசம்நெற் நண்பர்கள் வேட்டையாடு விளையாடு என்ற தெரு நாடகம் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலேயே எச்சரித்து இருந்தனர். ( யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் ) இந்த வன்னி மக்கள் சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தால் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து தப்பி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும். மிகப்பெரும் மனித அவலம் ஒன்று தடுக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் இவர்களின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இலங்கை அரசை மிகச் சரியாக கண்டித்த போதும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பலாத்காரமாக தங்களுடன் தங்கள் மண்மூட்டைகளாக இழுத்துச் சென்றதை கண்டிக்கத் தவறியது. மக்களது சுயாதீனமான நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மோசமான முறையில் கட்டுப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மோசமான நடவடிக்கையே பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் உயிரிழக்கவும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடையவும் காரணமானது. மேலும் வன்னியில் உள்ள சக மாணவர்கள் இளையவர்கள் பலாத்காரமாக முறையான பயிற்சிகள் கொடுக்கப்படாமல் யுத்த முன்னரங்கு நிலைகளுக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் கூட இவர்கள் மௌனமாகவே இருந்தனர்.
மே 1 2006ல் சம்பூரில் ஆரம்பிக்கப்பட்ட புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையில் டிசம்பர் 31 2008 வரையான 19 மாதங்களில் சில நூறு பொது மக்களே கொல்லப்பட்டு இருந்தனர். இக்காலப் பகுதியில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை. உண்ணாவிரதப் போராட்டங்கள் நிகழவில்லை. யுத்த நிறுத்தமும் கோரப்படவில்லை. ஆனால் ஜனவரி 1 2009 முதல் மே 18 2009 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் படுகொலை செய்யப்படும்வரையான 5 மாதங்களிற்குள்ளாக 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்குக் முக்கிய காரணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத் தீவு என்று பரந்திருந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்தை நோக்கி நகர்த்தப்பட்டு அப்பிரதேசத்தை யுத்தகளமாக்கியது. இலங்கை இராணுவத்தின் மரபுவழி யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க இயலாது பின்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கெரில்லா போராட்டத்திற்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக தாம் அழைத்து வந்த மக்களுக்குள் ஒழிந்திருந்து தாக்குதலைத் தொடுத்தனர்.
காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள பெரும்பான்மையின அரசுகள் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது. அதற்கு எவ்விதத்திலும் மாறுபடாத வகையில் தற்போதைய அரசும் நடந்துகொண்டது. ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருக்கும் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்ட போதும் வன்னித் தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே நடந்து கொண்டது. புலிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகள் மக்கள் செறிவானதாக உள்ளதை நன்கு அறிந்திருந்த போதும் என்ன விலை கொடுத்தும் புலிகளை வேரறுப்பதிலேயே அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. மக்களின் அவலங்கள் பற்றியோ அம்மக்களுக்க ஏற்படப் போகும் அழிவு பற்றியோ அரசு கவனமெடுக்கவில்லை.
யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பற்றி யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை அரசோ தமிழீழ விடுதலைப் புலிகளோ சிந்தித்து இருந்தால் இந்தப் பாரிய இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரு தரப்பினருக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் குரல் எழுப்பி இருந்தாலும் இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும்.
ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்தது. இப்பெரும் தவறே 20 000 பொது மக்களின் அழிவுக்கு வித்திட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் காயங்களிற்கு உள்ளாக்கியது. புலிகளும் மக்களும் ஒன்று என்று இவர்கள் போட்ட கோசம் இன்று இன்று 300 000 வரையான வன்னி மக்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்துள்ளது.
யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற People for Equality and Relief in Lanka (PEARL) அமைப்பு மார்ச் 2ல் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பகுதியில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தனர். ( முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் ) வன்னி மக்கள் எப்படியாவது யுத்தப் பகுதியில் இருந்து தப்பிக்க முயல்கையில் வன்னி மண் அந்த மக்களின் பூர்வீக மண் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தது.
இன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கூட வன்னி மக்களின் நலனில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி. முற்று முழுதாக தோல்வியடைந்த ஒரு போராட்டம்.
படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டனர். படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன் கடாபி நாகேஸ் ஆகியொர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் பல நூற்றுக்கணக்கான பொராளிகளும் கொல்லப்பட்டனர். ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )
ஏப்ரல் 5ல் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியது புலம்பெயர்நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 7ல் பரேமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆகிய இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.
இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஐ நா பொதுச்செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் தங்களுடைய பிரதிநிதிகள் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு அர்த்தமற்ற கோரிக்கையைத் தவிர வேறு எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஐ நா பொதுச் செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்க உண்ணாவிரதம் இருந்து அனுமதி பெற்றவர்கள் இந்த உண்ணாவிரதிகளின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.)
இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கும் கோரிக்கைகளே அன்றி நடைமுறைச்சாத்தியமான வன்னி மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக அமையவில்லை.
உண்ணாவிரதிகளில் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார். பரமேஸ்வரன் சிவசுப்பிரமனியம் பின்னாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிரித்தானிய அரசு சில உறுதிமொழிகளைத் தந்துள்ளதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறிய பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் பிரித்தானிய அரசின் உறுதி மொழிகளை தற்போது வெளியே தெரிவிக்க முடியாது என்று மறுத்தவிட்டார். ஆனால் அந்த உறுதிமொழி என்னவென்பது பின்னர் வெளிவந்தது. மனிதக் கேடயங்களாக உள்ள வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுவித்தாலேயே பிரித்தானிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் என்ற உண்ணாவிரதிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் மெற்றோ பொலிட்டன் பொலிசாருக்கு எட்டு மில்லியன் பவுண்களுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி மக்கள் இலங்கை அரசபடைகளால் கொல்லப்படுவதற்கு புலம்பெயர் மக்களும் காரணமாக இருந்துள்ளனர். இம்மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகக் கொடுமை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் அதன் தலைவர் வே பிரபாகரனின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் சிங்கக் கொடியையும் முப்படைத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.
புலம்பெயர்ந்த மாணவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளையவர்கள் இயக்க கட்சி அரசியலுக்குள் அள்ளுண்டு செல்லாது தங்களுக்கான ஜனநாயக பூர்வமான அமைப்புகளைக் கட்டி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். அதனை விட்டு இறக்குமதி செய்யப்பட்ட தலைமைத்துவங்களுக்குப் பின் மந்தைக் கூட்டமாக இழுக்கப்படுவதை இவர்கள் நிராகரிக்க வேண்டும்.
தங்கள் கைகளிலும் வன்னி மக்களின் குருதி படிந்திருப்பதை இவர்கள் உணர்ந்து சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டே அடுத்த நகர்வை ஏற்படுத்த முடியும்.
பார்த்திபன்
பிரித்தானியாவிலுள்ளவர்கள் கோபிக்க வேண்டாம். ஏனெனில் “புலன்” பெயர்ந்த புண்ணாக்குகள் பலர் பிரித்தானியாவிலேயே இருப்பதாக எனக்குப் படுகின்றது. ஏனைய நாடுகளில் நிலைமைகளை உணர்ந்து படிப்படியாக தமது போராட்டங்களைக் குறைத்துக் கொண்டு வன்னியிலுள்ள அந்த மக்களுக்கு உதவத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் பிரித்தானியாவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மாலை முடிவிற்கு வந்தாலும், எதிர்வரும் 20.06.09 சனிக்கிழமை மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதனால் என்ன பயன் உள்ளது என்பதை விட, இதை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை தமது சுய விளம்பரங்களுக்காகவும் ஏற்கனவே கண்ணீர்வெள்ளம் மூலம் சுருட்டிய பணங்களை கையாடல் செய்யவுமே இது உதவப் போகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அமைப்பு சார்பாக வானொலிகளில் பேசிய சில “புலன்” பெயர்ந்த புண்ணாக்குகள் சொன்ன தகவல் என்னவெனில்; “பிரித்தானியா அரசு தம்மை புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிக்க தங்களைக் கோரிக்கை விடச் சொன்னார்களாம், அதை ஏற்று தாமும் மக்களை விடுவித்து விட்டோமாம்”. இப்ப அந்த மக்களை அரசு ஏன் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருக்கின்றது?? அவர்களை விடுவிக்குமாறும் கொல்லப்பட்ட மக்களுக்காக அரசின் மீது விசாரணை நடத்தவுமே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோமெனவும் காதிலை பூ வைத்தனர். அட அப்ப பிரித்தானியா வாழ் “புலன்” பெயர்ந்தவர்கள் தானா மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டது?? எனவே எனியும் பிரித்தானிய வாழ் மானமுள்ள தமிழர்கள் இவர்களின் ஏமாற்று வேலையை தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றீர்களா??
chandran.raja
எழுபத்தைந்து வாரங்கள் என்ன? எழுபத்தைந்தது மாதங்கள் என்ன? எப்படி போராட்டம் வழிவந்தாலும் மனிதநேயம்மிக்க புலம்பெயர் தமிழ்மக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்?
உள்நாட்டு யுத்தத்தால் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட ஐந்துலட்சத்திற்கு அதிகமான மக்கள் சொந்தநாட்டியே அகதியாக்கப்கட்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு குடிநீரே! பிரச்னையாக இருக்கிற போது மிகுதியைப்பற்றி கலந்துரையாடிய வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய பேராட்டம் இழந்துபோன லட்சக்கணக்கான தமிழ்மக்களின் அடிப்படைவாழ்வை உயர்துவது பற்றியே இருக்க முடியும். இதைவிட்டு வேறுவகையாக சிந்திப்பார்களேயானல் அதன் பயனாக விளைந்த செயல்பாடுகளுக்கு “போராட்டம்” என பெயரிடுபவர்களேயானால் அவர்கள் ஜிரிவி. தீபம் தொலைக்காட்சியின் சேவைக்கு ஒப்பானவர்களே! இரத்தம் உறுஞ்சும் அட்டைகள் எல்லா இனத்திலும் உள்ளார்கள்.
palli.
ஜெயபாலன் இதுபற்றி பலதடவை பல தலைப்புகளில் விவாதித்துள்ளோம்; என்ன அன்று இந்த விடயங்களை (நடந்து கொண்டு இருக்கும் போது) தவறெனவும் அதனால் மக்கள் படபோகிற துன்பங்களையும் தவளையைவிட இரவு பகலாக கத்தினோம்; புலியோ அல்லது அரசோ கேக்கவில்லை; அதனால் இன்று நடந்து முடிந்த வரவு செலவை கணக்கு பார்ப்பதுபோல் கால் இல்லாதவர்கள் எத்த்னை அனாதைகள் எத்தனை விதவைகள்; சிறுவர்கள்; வயோதிபர்; இது யாருடைய உடல் இது எந்த உடலின் உறுப்பு எபடியெல்லாமோ சிந்திந்து அழுவதா? அல்லது அமைதி காப்பதா? எதுவுமே புரியாமல் எழுதுகிறோம்; இதில் வேடிக்கையை பாருங்கள் இந்த க இ போராட்டம் இன்று பெயர் மாற்றபட்டு ஆறுதல் ஆற்றுகை என்னும் புதிய பெயருடன் வலம்வருகிறது; அடி வாங்கியது வன்னி மக்கள்;உயிர்களை விட்டதும் அவர்கள்; பசியால் வாடுவதும் அவர்கள்; உடுக்க உடை இல்லை அவர்களுக்கு; சுகாதாரம் சொல்லவும் வேண்டுமா; உறவுகள் ஒன்றாய் இல்லை; இறப்புகள் தெரியாது; மருத்துவம் போதாது; அழக்கூட நெரம் இல்லை; தூக்கம் துக்கமாகவே தொடர்கிறது; பிள்ளைகள் பசியால் துடிக்க; பெற்றவர்கள் அதை பார்த்து துடிக்க; இத்தனையும் வன்னி மக்கள் பட;
புலியோ முட்டாள் தலமையாலும்
அடங்கதனமான பேச்சாலும் அழிந்து நிற்க்க;
அரசு இழப்புகள் பல இருந்தாலும்
வெற்றி கழிப்பில் கொண்டாட்டங்கள்
பல பலைடத்தில் செய்து கொள்ள;
சர்வதேசமும் தனது கையால் ஆகா
தனத்தால் வேடிக்கை மட்டுமே
பார்க்க முடிந்தது;
இதில் இந்த புண்ணாக்குகள்
வோண்டுத ரமில் ஈலம் ஏலம்
போட்டு கழைத்து விட்டார்களாம்
அதனால் ஆறுதல் ஆட்டம் தொடக்கமாம்;
இன்று வன்னி இப்படி போனதுக்கு 50வீதம்
புலியும் அரசும் ஆனால் மிகுதி 50வீதமும்
காரனம் இந்த பாழாய் போன புலிகொடியும்
கட்டவுட்டும் புண்ணாக்கு வியாபாரிகளுமே:
Constantine
What a complete waste of time and money. This action couldnt save Prabaharan nor the innocent people in Vanni.
நண்பன்
மழை வரும் என்று அறிந்து குடையை கையோடு எடுத்துப் போறவர்கள் இருக்கிறார்கள். மழை வந்திட்டுதே என்று எவர் குடைக்குள்ளாவது நுழைந்து போனால் போதும் என்று இருக்கிறவர்கள் இருக்கிறார்கள். புலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள்.
நான் கண்ணால் பார்த்த ஒரு விடயம் இது. நம்பினால் நம்புங்கள். சுவிஸில் இளையோர் அமைப்பு ஐநா முற்றத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது. 7 முதல் 9 ஆயிரம் வரை கூட்டம். ” பனை மரத்தில வவ்வாலா, புலிகளுக்கே சவாலாவோடு , இன்னம் அண்ணன் அடிக்கவே தொடங்கயில்ல…இனித்தான் அடி” என்ற கோஸங்களும் – கரகோஸமும் -பாடல்களுக்கு துள்ளல் ஆட்டமும் இடம்பெற்றது.
இடையில் சனம் உணர்ச்சிவசப்பட்டு மகிந்தவை கொழுத்தி , சிறீலங்கா கொடியைக் கொழுத்தி கடைசியில ஐநாவுக்குள்ள அத்து மீறி நுழைய பலர் எத்தனிக்க , சிலர் தடுக்க , போலீஸ் தண்ணி அடிக்க ரெடியாக, மேடையில முழங்கினவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களை அடக்க முடியாமல் திணறியதை பார்க்க பரிதாபமாக இருந்தது. தலைவர் மேல் அன்புள்ளவர்கள் இங்கால வாங்கோ, மறைந்த மாவீரர்கள் மேல் அன்புள்ளவர்கள் இங்கால வாங்கோ என்று ஒரே ஒப்பாரி. சில சனம் ஐநா வந்து பதில் சொல்ல வேணும் என்று கத்திக் கொண்டு ஐநாவை நோக்கி முன்னேற , அதை தடுக்க இயலாமல் தத்தளித்து , “ஐநா எங்கள் கோரிக்கைகளை வாங்கிக் கொண்டார்கள். அதை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சொன்னார்கள்” என்று ஒரு பெரும் பொய்யை சொன்னதும் ஐநாவுக்குள் நுழைய இருந்த சனம் மைதானத்துக்குள் வந்தது.
உண்மையில் அப்படி யாரும் வரவில்லை. அவ்வளவு சனமும் அதை கண்ணை திறந்துகொண்டு நம்பினார்கள். இதுதான் கொடுமை. அங்கு நின்ற ஊடகவியலாளர்களான வெள்ளைகளை விட ஒரு வெள்ளையும் அங்கு வரவில்லை. உண்மையில் அப்படி வந்திருந்தால் அங்கு வந்த ஐநா பிரதிநிதி நாலு வார்த்தையாவது பேசிவிட்டே மகஜரை வாங்கிச் செல்வார். அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதை சிந்திக்கும் தன்மைகள் கூட பிரான்ஸ் – ஜெர்மனி – சுவிஸ் – இத்தாலி – பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து கூடிய புண்ணாக்கு தின்னும் மாடுகளுக்கு விளங்கவேயில்லை. பொடிகள் மந்தைகளை மடையர்களாக்கிட்டோம் என்று கட்டிப்பிடிச்சு சிரித்தார்கள்.
அடுத்து சின்னப்பொடிகள் (இளையோர்) செந்தில் ரேன்ஜுக்கு சிரிக்க வைத்த புளூடா பகிடி என்ன தெரியுமா? “அடுத்த முறை நாங்கள் வரும் போது ஐநா எமக்கு பதில் சொல்ல வேணும் அல்லது எம்மிடம் ஐநா மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்பதுதான். ஐநாவுக்கு போனவர்கள் நடந்ததை பின்னோக்கிச் சென்று பாருங்கள்.ஓம்…….என்று தலையை சொறியத் தோன்றும்.
அதுக்குப் பிறகு சவால் விட்ட பொடிகள் ஐநாவுக்கு திரும்பி போகவே இல்லை. அடுத்து அவர்கள் கொலண்டில உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு போனார்கள். அங்கே என்ன சொன்னார்களோ தெரியாது. ஆனால் வீதியில் பாய்ந்து சிலர் போலீஸாரால் அடி வாங்கியதாக மட்டும் இணையத்தில் வந்தது.
இதுபோல் காலத்தை விரயமாக்கி வாழும் நாட்டையும் நாசமாக்காதீர்கள். அந்த காசை உண்டியல்ல போட்டு அந்த மக்களுக்காவது அனுப்புங்கள். இவை வேஸ்ட்டு.
SUDA
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டுச் சிரித்தேன். நண்பன் தந்ந நகைச்சுவைத் தகவல்களுக்கு நன்றி.
Rompa pala nedumarn
ஐயா சாமிகளா இனியாவது நிறுதுஙக உங்க காமடிய..
எஙகள கொன்சம் வேல செய்ய விடுஙகப்பா…பொன்டாட்டி ரொம்ப திட்டுரா சீட்டுக்காசு குடுக்க வெணும். க்ரடிட் எடுத்து தந்த கடன் வேற கட்ட வெனுமல்லோ…காணும் எல்லாம் காணும் எல்லரும் போய் வேலய பருஙக ..ஒ கே
Vannikumaran
அன்புடன் ஜெயபாலன்
புலியின் தலைவரே தன்தவறை ஏற்று தற்கொலை செய்து கொண்ட பின்பு இனி தயவு செய்து தமிழர்களின் எதிர்காலம்பற்றி புலிகளின் எச்ச சொச்ச உறுப்பினர்கள் தமிழர் விவகாரத்தில் ஈடுபடுவதோ அல்லது அதற்கான முன்னெடுப்புக்களை செய்ய விடுவதோ உலகம் பரந்த தமிழர்களை மிண்டும் வன்முறை வாழ்வை பின்பற்ற வாய்ப்பழிப்பதால் அதை தடுப்பதுடன் இறுதியாக பத்மநாதனும் மற்றும் சிலரும் உலகத் தமிழருக்கு விட்ட அறைகூவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது தலைவர் காட்டிய வழியில் போராட்டத்தை முன்னெடுப் போம் என்று. அப்படியானால் என்ன தற்கொலை செய்வதா? முதலில் அறை கூவல் விட்டவர்கள் அதை செய்யட்டும். மக்களை எப்படியாவது வாழவைப்பதே விடுதலை அன்றி சாகவைப்பது அல்ல. சுயவிமர்சனமும் அரசியல் அறிவுமற்ற இராணுவ தளத்தில் நின்ற புலிகளின் வீரம் சமாதானவாழ்வை விரும்பிய மக்களுக்கு விஷமே அன்றி விமோசனம் அல்ல. இறுதியாக புலம் பெயர் தேச விடுதலை வியாரிகளுக்கு ஓர் எச்சரிக்கை முடிந்தால் இலங்கையில் சென்று உங்கள் போராட்டங்களை முன்வையுங்கள் வெற்றிகாண முற்படுங்கள் .அதைவிட்டு உங்கள் வங்கிகளை நிரப்பும் முயற்சியில் ஈடுபட இனியும் முற்பட்டால் உங்களுக்கும் தலைவரின் நிலைதான் என்பதில் ஐயமில்லை.
தயவுசெய்து புலிகள் பற்றிய விமர்சனத்தை விட்டு அரசுடன் சேர்ந்தாவது வன்னி மக்களை காப்பாற்ற வழி தேடுவோம். முகாமில் இருக்கும் மக்களின் முன் இனி விடுதலைப் புலி என்று எவர் சென்றாலும் உயிருடன் திரும்ப முடியாது என்பதை அவர்களுடன் உரையாடியதன் மூலம் புரிந்து கொண்டேன். அவர்களே புலி வேண்டாம் என்கிறார்கள் அவர்களின் விடுதலைக்காக கதைக்கும் நாம் ஏன் அவர்கள் மீது புலிகளை மீண்டும் திணிக்க வேண்டும். உண்மையில் அவர்களுக்காக குரல் கொடுப் போமானால் யதார்த்த பூர்வமான விடயங்களை அணுகுவோமாக
நன்றி
வன்னிக் குமரன்