04

04

கிளிநொச்சியில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து தற்போது பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழைக்காலத்தில் தாக்குப்பிடிக்கக் கூடியதான தற்காலிக கூரைத்தகடுகளுடனான வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது கூரைக் தகரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனும் தெரிவித்துள்ளார். மழையினால் பாதிக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் தற்போது உதவிகளை வழங்கி வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உட்பட வன்னியில் மீள்டியமர்ந்துள்ள மக்களின் வீடுகள் பல முற்றாக அழிந்துள்ள நிலையிலும் சேதமுற்றுள்ள நிலையிலும் தற்பொது பெய்து வரும் கடும் மழையினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால் நாம் கலந்து கொண்டிருப்போம்”: பா.அரியநேத்திரன்.

இன்று திங்கள்கிழமை நடைபெறும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு இக்கூட்டத்தில் தாங்கள் பங்கு பற்றியிருப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து ஆராயும் இக்கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் எம்மால் சுட்டிக்காட்டியிருக்க முடியும் என அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் வரை உயிரிழப்பு! வெள்ளப் பெருக்கினால் பலரைக் காணவில்லை!

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் ஐந்து பேர்வரை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியதால் இவ்வுயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய இணைப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் தொடாச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவம் இதனால், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மண்சரிவினால் மலையகத்தில் பதுளைக்கும் அப்புத்தளைக்குமிடையிலான வீதி முடப்பட்டு போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மறுப்பு.

கடந்த யூன் மாதம் கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்டு அதன் மேயராக பதவி வகித்த முகமட் உவைஸ் இம்தியாஸை மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அங்கு வசித்து வரும் இம்தியாஸ் அங்கிருந்து வெளியேறுவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை தாம் வெளியேறப் போவதில்லை என தெரிவித்திருக்கும் அவர் ஜனாதிபதியிடம் தனது வீட்டுப்பிரச்சினை குறித்து கூறியிருப்பதாகவும், வீடமைப்பு அதிகாரசபை ஊடாக விரைவில் தனக்கு வீடொன்றைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாகவும், அது வரை மேயர் இல்லத்தில் இருக்குமாறு அவர் கூறியதாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவிக்கையில், இம்தியாஸ் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மூன்று மாதங்கள் கால அவகாசம் கோரியதாகவும் அது வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மேயர் இல்லத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், இதனால், மேயர் வாசஸ்தளத்திற்கு நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்துவதை கொழும்பு மாநகரசபை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவிற்காக நூறு பிக்குகளுடன் தானும் சிறைசெல்லத் தயார் என மாதுலுவாவே தேரர் தெரிவிப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்கோவிற்கு பதிலாக தாம் சிறையிலிருக்கத் தயார் என கோட்டை நாகவிகாரையின் விகாராபதி வண. மாதுலுவாவே தேரர் தெரிவித்துள்ளார்.

போன்சேகாவிற்குப் பதிலாக நூறு பிக்குகளுடன் தானும் சிறைச்சாலையில் இருப்பதற்குத் தயாரெனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் நன்றிகெட்ட விதமாக நடந்துள்ள இந்நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு அதை ஒன்று படுத்திய பொன்சேகாவிற்காக தாம் எதனையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் மாதுலுவ தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Prof_Hooleகடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் இருந்து இலங்கைத் தமிழ் மக்கள் சுமுகமான வாழ்நிலைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் கல்விச் சமூகத்தின் கல்விநிலையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அச்சமூகத்தின் அதி உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக மோசமான சீரழிவை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்நிலையை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது. தமிழ் கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், விரைவில் இடம்பெறவுள்ள உபவேந்தருக்கான தேர்தலில் பல்கலைக்கழகத்தை இலங்கையின் தரமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றக் கூடிய தகுதியும் ஆளுமையும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த நியமனத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கூடிய சமூகப் பொறுப்பு இருப்பதால் அவரை நோக்கி இக் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களும் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இம்மடலின் இறுதியில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பில் பெயர்களைப் பதிவு செய்து இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்கவும். இம்முயற்சிக்கு உங்கள் நண்பர்கள் உறகளின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
._._._._._.

மதிப்பிற்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு,

பல்கலைக்கழகங்களே தெளிவான பார்வையையும் தலைமைத்துவத்தையும் சமூகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் தலைமைத்துவம் இல்லாததால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை புதிய திசைவழி முன்னேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என நாங்கள் நினைக்கின்றோம். மேலும் தமிழ் கல்விச் சமூகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வழங்கவும் இது வாய்ப்பாகி உள்ளது.

இதன் கீழ் கையெழுத்திட்ட எங்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களினது நல்வாழ்விலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மிகுந்த அக்கறையுண்டு. பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தேர்வில் போட்டியிட உள்ளார். நீங்கள் அவரை அப்பதவிக்கு கொண்டுவருவதற்கு வேண்டியனவற்றை செய்ய வேண்டும் என நாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வரவேண்டும் என்று கோருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இலங்கையில் கூடிய தேர்ச்சியுடைய கல்வியியலாளர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் கற்பித்த அனுபவம் உடையவர். இவரினால் உபவேந்தர் பதவி மதிப்படையும்.

2. University Grand Commissionஇல் 15 பல்கலைக்கழகங்களை நிர்வகித்தமை அவருக்கு இந்த பல்கலைக்கழகங்கள் இயக்கப்படுகின்ற முறை அதனை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் சட்டங்கள் என்பனவற்றில் மிகுந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதனால் இவரினால் உயர்ந்த அளவு தரத்தில் நிர்வாகத்தை திறம்படச் செயற்படுத்த முடியும்.

3. இவர் இலங்கையின் தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டவராதலால், பல்கலைக்கழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத்தர முடியும்.

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தை அமைக்க உள்ள நிலையில் பொறியிலாளரான இவரின் தனிப்பட்ட தொடர்புகள் பொறியியல்துறையை அமைப்பதற்கு மிக அவசியமானது. மேலும் இவர் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபம்மா ராவோ உடன் பணியாற்றியவர் என்பதால் இந்தியவில் இருந்து நிதி உதவிகளையும் இவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அமெரிக்காவில் தனக்கு இருந்த பதவியைத் துறந்து யாழ்ப்பாணம் வந்ததன் மூலம் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தியில் தனது பொறுப்புணர்வை வெறும் வார்த்தைகளில் அல்லாமல் செயலில் காட்டி உள்ளார்.

மேலுள்ள ஐந்து விடயங்களிலும் போராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு சமனான தகுதியுடைய ஒருவரை காண்பது கடினமாகவே உள்ளது. இவர் முன்னர் 2006ல் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் சில அரசியற் சக்திகளால் தனது கடமையைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். அப்போது முடியாமற் போன பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் முயற்சிக்கு இப்போது சந்தர்ப்பம் வழங்கப்படுவதே நியாயமானது.

நீங்கள் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று இதயபூர்வமாக விரும்பும் ஒருவர் என்பதாலும் அமைச்சராக இந்த விடயத்தில் உங்களுடைய வார்த்தைக்கு ஒரு இடம் இருப்பதாலும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களுக்கு வெளிப்படையான உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பு:

http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm

திரு ராரின் கொன்ஸ்ரன்ரைன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்