12

12

மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க பலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளிக்கச் சென்ற பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 1.30 மணியுடன் ஆணைக்குழுவின் அமர்வுகள் முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பலர் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் முன்னாள் பிரஜைகள் குழுத்தலைவர் கதிர் பாரதிதாசன் நல்லிணக்க ஆணைக்கழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்.

விசுவமடுவில் கடந்த யூன் மாதம் நடைபெற்ற பாலியல் வல்லுறவு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் எதிரான வழக்கு விசாரணை நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. மேல் விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 20ஆம் திகதி வழங்குவதாக கூறிய நீதவான் நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கிளிநொச்சி விசுவமடுவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சில நாட்களின் பின்னர் வீட்டில் தனியாகவிருந்த இரு பெண்கள் மீது பாலியல் வல்லறவு புரிந்ததாக நான்கு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது சகோதரன், பெண்ணின் பத்து வயது மகன் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக சாட்சியமளித்தனர்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள் கிழமை மாலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார்

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ். செயலகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமைச்சர் டகளஸ் தேவானந்தா தலைமை வகித்தார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்கள் மாவட்டங்களின் பிரச்சினைகளை விளக்கிக் கூறுவதற்கு ஒவ்வொரு அரச அதிபருக்கும் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், நாளை புதன்கிழமை வவுனியாவிற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வரவுள்ளதாகவும், அபிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.வந்துள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் தொழில் வாய்ப்பு தருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிதை நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் நேற்று திங்கள்கிழமை யாழ். போதனா வைத்திசாலைக்குச் சென்று தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளவர்களில் ஒரு குழுவினர் மல்காந்தி என்பவர் தலைமையில் யாழ். வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி அவர்களைச் சந்தித்து தங்கள் பெயர் விபரங்கள், கல்விச்சான்றிதழ்கள் என்பவற்றைக் காட்டி தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கும் பணியினை சுகாதார அமைச்சுத்தான் மேற்கொள்ளும் என வைத்தியசாலை நிர்வாகம் அவர்களுக்கு விளக்கமளித்து அனுப்பிவைத்ததாகவும் தெரியவருகின்றது.

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

Imelda_Sugumar_GA_JaffnaUoJ_Signboardயாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 11 (நேற்று) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இமெல்டா சுகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே என்றுமில்லாதவாறு இத்தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள் இப்பாரிய குற்றச்சாட்டை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டு உள்ளார்.யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான நீண்ட விவாதம் யூலை 01 2010 முதல் தேசம்நெற் இல் இடம்பெற்று வருகின்றது. இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட பல்வேறு சீரழிவுகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகி உள்ளமை தெரிந்ததே. அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் சீரழிவையும் கல்வித் தகமையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியையும் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட அங்குள்ள நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முடிவுகட்ட இவை தொடர்பான உடனடியான சுயாதீன விசாரணைக்கு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உத்தரவிட வேண்டும். இவ்வாறான ஒரு விசாரணைக்கு யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்தில் அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுமையான ஆதரவளிக்க வேண்டும். இவற்றின் மூலமாக மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சீரழிவுக்கு முடிவு கட்டுவதுடன் யாழ் பல்கலைக்கழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியும்.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் விரிவுரையாளர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர் என சுவரொட்டிகளை ஒட்டியது தெரிந்ததே. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் வெளியான சுவரொட்டி

”இறுதி எச்சரிக்கை

போரின் கோரப்பிடியில் சிக்கி தமது வாழ்வைத் தொலைத்த உறவுகள் மற்றும் சொத்துக்களை இழந்த வன்னி மக்கள் அலல்படும் வேளையில் தமது கலாச்சார விழுமியங்களை சீர்குலைக்கும் ஒரே நோக்கமாகவும் சமூக நிறுவனமான யாழ் பல்கலைக்கழகப் பெயரைக் குலைக்கும் நோக்கமாகவும் சில விரிவுரையாளர்களின் நடத்தை காணப்படுகிறது. குறிப்பாக மாணவிகளை வற்புறுத்தி தமது காம இச்சைகளை தீர்த்து வருகின்றனர். ஆலயம் போல் காணப்படும் இப்பல்கலைக்கழகத்தினதும் எமது சமூகத்தினதும் கலாச்சாரத்தினைச் சீரழிக்கும் இவ்வாறான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இவர்களது இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் சில காலப்பகுதியினுள் உங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படும். இது உங்களுக்கு நாங்கள் விடுக்கும் இறுதி எச்சரிக்கை. இதனை நீங்கள் அலச்சியப்படுத்தினால் உங்கள் மனைவிகள் விதவையாவதை யாராலும் தடுக்க முடியாது.

எனவே கீழ் குறிப்பிடப்படும் விரிவுரையாளர்கள் உடனே இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

இளங்குமரன்
விசாகரூபன்
நவரத்தினம்
அருந்தாகரன்

எச்சரிக்கைகளை அலச்சியப்படுத்தினால் தண்டனைகள் நிறைவேற்றப்படுவது தவிர்க்க முடியாதது.

மாணவர் சமூகம்
யாழ் பல்கலைக்கழகம்.”

இச்சுவரொட்டி ‘மனைவிகள் விதவையாக்கப்படுவார்கள்’ போன்ற கடுமையான தண்டனைகளைக் குறிப்பிட்டிருந்த போதும் இது மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு இந்த எச்சரிக்கையை ஒருவழிமுறையாகவே பயன்படுத்தி உள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மௌனமாக தமக்குள் அழுகின்ற பல நூற்றுக் கணக்காண மாணவிகளின் வாழ்நிலையை எதிரொலித்து உள்ளார். முன்னர் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டு இருப்பதையும் அரச அதிபர் உறுதிப்படுத்தி உள்ளார். பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர் இதனைத் தனக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரச அதிபர் குற்றம்சாட்டி உள்ளார்.
 
அண்மையில் யாழ் மாவட்ட சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே சுகாதார திணைக்களப் பெண் வைத்திய அதிகாரி இந்தத் தகவல்களை வெளியிட்டதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். அண்மைக் காலங்களில் மட்டும் 77க்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கின்றமை தொடர்பான பதிவுகள் வந்திருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் அண்மைக் காலங்களில் வேகமாக அதிகரித்து இருக்கின்றமை அதிர்ச்சியை தருவதாயும் அரச அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரச அதிபருடைய இக்குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கான காலகட்டத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிபர் குற்றம்சாட்டிய விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் போன்றோரே மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்ற உபவேந்தருக்கான பதவிகளிலும் போட்டியிடுகின்றனர். பாலியல் துஸ்பிரயோகம் அதிக அளவில் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டப்படும் கலைப்பிரிவுத் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமாரன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சத்தியசீலன், தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கு போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஸ்தாபனமயப்படுத்த காரணமாக இருந்ததுடன் இவர்களே இவ்வாறான பாலியல் மற்றும் நிர்வாகத் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

சுயாதீன விசாரணைக் குழு ஒன்றின் மூலம் யாழ் பல்கலைக்கழக பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கு இதுவே சிறந்த தருணமாக உள்ளது.

யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் பற்றி தேசம்நெற்க்கு கருத்து வெளியிட்ட யாழ் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கபொத உயர்தர மாணவிகள், ‘நாங்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கே படிக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கதைகளை மூத்த சகோதரிகள் சொல்வதை கேட்டால் பயமாக இருந்தது. அங்கு செல்வதற்கு பயந்தே இருந்தோம். அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இது வந்தது ஆறுதலாக உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு கூறுகிறது சவூதி ஆட்திரட்டல் குழு

lankan-airlines.jpgரியாத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபிய தேசிய ஆட்திரட்டல் குழுவுக்கும் (சனார்கொம்) அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புகளின் சங்கத்திற்கும் (அல்பியா) இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு கொழும்பு இணங்கும்வரை இலங்கையிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதென நேற்று முன்தினம் ஞாயிற்றுக்
கிழமை சவூதி அரேபியாவின் தேசிய ஆட்திரட்டல் குழு (சனார்கொம்) தீர்மானித்துள்ளது.

ஆட்திரட்டல் கட்டணங்களை 8500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைப்பதற்கான உடன்படிக்கையில் தமது நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பாக சனார்கொம்மின் தலைவர் சாத் அல்பத்தா விளக்கமளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பையடுத்தே அவர் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார். அல்பியாவுக்கும் சனார்கொம்முக்குமிடையில் இடம்பெற்ற இந்த உடன்படிக்கையை கௌரவிக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தடையை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைக்கிறோம். புரிந்துணர்வு உடன்படிக்கை விவகாரம்,இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தின் போக்கு மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஆரியவதிக்கு அண்மையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டு போன்ற பல்வேறு விடயங்களை கவனத்திற்கு எடுத்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறோம் என்று சார்த் அல்பத்தா கூறியுள்ளார்.
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் சவூதிஅரேபியாவுக்கு எதிராக ஆரியவதி விவகாரம் பாதிப்பான பிரபல்யத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆதாரமற்ற விதத்தில் அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் இத்தகைய சர்ச்சைகளின்போது பிரஜைகளின் உரிமைகளும் மதிப்பும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதியாக நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளூர் தொழிலாளர் ஒழுங்கு விதிகளை மீறியுள்ள ஆட்திரட்டல் முகவரமைப்புகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இலங்கை 42,906 வீட்டுப் பணியாளர்களை சவூதிக்கு அனுப்பியிருந்தது. இந்த வருடத்தின் முதல் அரையாண்டுப் பகுதியில் 19 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டிருக்கின்றனர். வீட்டுப்பணிப்பெண்கள் உட்பட சுமார் 5 இலட்சம் இலங்கைப் பணியாளர்கள் சவூதிஅரேபியாவில் பணிபுரிகின்றனர்.

இதேவேளை, சனார்கொம்முக்கும் அல்பியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் எல்.கே.ருகுணுகே கூறியுள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்றாலும் சிறையில் மடிந்தாலும் விஷமிகளின் முன்னால் ஒருபோதும் மண்டியிடமாட்டேன் – பொன்சேகா

sarath_.jpgஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றாலும் அல்லது சிறையில் இறந்தாலும் கூட தான் ஒருபோதும் விஷமிகளின் முன்னால் மண்டியிடமாட்டேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொன்சேகா இதனைத் தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தலைநகர் கொழும்பின் வீதிகளில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஊர்வலம் சென்றனர்.அவரின் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பணியாளர்களும் அவரின் மனைவி அனோமா பொன்சேகாவும் வெலிக்கடைச் சிறைச்சாலையை நோக்கிச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அவர்கள் கறுத்த ஆடைகளுடன் சென்றனர். “குரூரமான இந்தப் பழிவாங்கல்களுக்கு முடிவு கட்டுங்கள்” என்று வாசகம் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை அவர்கள் கொண்டு சென்றனர். செப்டெம்பர் 30 இல் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற பாரியதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக நேற்றைய நிகழ்வு காணப்பட்டது. எமது யுத்த கதாநாயகனுக்கு தவறாக வழங்கப்பட்ட நீதியை சீர்படுத்துவதற்கான முயற்சி இதுவென ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி. திரான் அலஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு – நிலைமையை ஆராய விஷேட குழு இன்று விஜயம்

முப்பது பேர் அடங்கிய அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது. அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவுள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (Unitetd State Trade Representative- USTR)  பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும், வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளன.

சண்டே லீடரில் வெளியான செய்திக்கு பொன்சேகா மறுப்புத் தெரிவிக்கவில்லை – பிரெட்ரிகா ஜான்ஸ்

fredericajansz.jpgவெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக, 2009 டிசம்பர் 12ம் திகதி ‘சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்திக்கு சரத் பொன்சேகா ஒரு போதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ட்ரயல் – அட்-பார் விசாரணையின் போது தெரிவித்தார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அச்சமயம் பிரதி சட்ட மா அதிபர் வசந்த நவரட்ண பண்டாரவினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் புலிகள் இயக்க தலைவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த போது கொல்லப்படவில்லை என்றும் யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறும் தெளிவான விளக்கமொன்றை 2009 டிசம்பர் 20ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் பிரசுரிக்குமாறு சரத் பொன்சேகா பின்னர் ஒரு தடவை கூறியதாகவும் மங்கள சமரவீர உள்ளிட்ட நண்பர்கள் பலருடன் கலந்துரையாடிய பின்னரே சரத் பொன்சேகா இவ்வாறு தன்னிடம் கூறியதாகவும் பிரெட்ரிகா ஜான்ஸ் குறுக்கு விசாரணையின் போது கூறினார். குறிப்பிட்ட தெளிவான விளக்கத்தை பத்திரிகையில் பிரசுரித்த பின் சரத் பொன்சேகாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியாமற் போனதாக அவர் மேலும் கூறினார். விளக்கம் பத்திரிகையில் வெளியானதை யடுத்து ஜே.வி.பி.யினர் தனக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விலைவிக்க முற்பட்டதாகவும் அவர் குறுக்கு விசாரணையின் போது குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததையடுத்து ஆயிரம் பேருக்கு மேல் அதனைப் பாராட்டியதாகவும் அது தொடர்பாக பி.பி.ஸி கூட தன்னை தொடர்பு கொண்டதாகவும் கூறிய பிரெட்ரிகா ஜான்ஸ் வெள்ளை கொடி விவகாரம் தொடர்பாக தான் எந்தவொரு ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொள்ள வில்லை என்பதுடன் அவ்விடயம் பற்றி பத்தாரிகைச் செய்தி வெளியான பின் ஒரே ஒரு முறை மாத்திரம் சரத் பொன்சேகாவிடம் தான் பேசியதாகவும் குறிப்பிட்டார். வழக்கு விசாரணை இன்று காலை 10.30க்கு தொடரும்.