18

18

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதாந்தம் 10 கோடி ரூபா செலவு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதம் தோறும் 10 கோடி ருபாவை அரசாங்கம் செலவிட்டு வருவதாக இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 மே மாதம் தொடக்கம் இவ்வாறு செலவிடப்பட்டதாகவும்,  முன்னாள் போராளிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இச்செலவினம் 6 கோடி 50 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 4500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் மேலும் 1500 பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை ‘எயர்ரெல்’ நிறுவனம் வழங்குகிறது.

Jaffna_Hospitalஇன்று திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கிளையை ஆரம்பிக்கும் ‘எயர்ரெல்’ நிறுவனம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை அனபளிப்பு செய்கிறது.

யாழ். வைத்தியசாலை நிர்வாகம் யாழ். வணிகர் கழகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்தே வணிகர் கழகத்தின் முயற்சியால் இச்சக்கர கதிரைகள் வழங்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. நிகழ்வில் இதனை ‘எயர்ரெல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யாழ். வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நகை வியாபாரியைக் கடத்தி கப்பம் பெற்ற இராணுவ மேஜரும் இருவரும் பிடிபட்டனர்.

கொழும்பில் தமிழ் நகை வியாபாரி ஒருவரைக் கடத்தி 50 மில்லியன் கப்பம் பெற்றவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இராணுவ மேஜர் ஒருவரும், அவரது உதவியாளர்கள் இருவருமே இவ்வாறு பிடிபட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது – இந்த நகை வியாபாரி ஏற்கனவே இதே சந்தேக நபர்களால் கடத்தப்பட்டவர். இவர் 20 மில்லியன் ரூபாவை கப்பமாகச் செலுத்தியே விடுவிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவரது மகனை காரில் பாடசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இதே குழுவினரால் மீண்டும் கடத்தப்பட்டார். அவரது மகனான சிறுவனை விடுவித்த கடத்தல் காரர் நகைக் கடை உரிமையாளரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெருந்தொகைக் கப்பம் கேட்டுள்ளனர்.

அவ்வளவு பெரிய தொகையை செலுத்தவது சாத்தியமில்லை எனவும், கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டால் அதனைக் கொடுக்க முடியும் எனவும், அடுத்த நாளே பணத்தைக் கொடுக்க முடியும் எனவும் கடத்தப்பட்டவரின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் பொலிஸாருக்குத் தெரிய வந்தால் வர்த்தகர் கொலை செய்யப்படுவார் என்ற எச்சரிக்கையுடன் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், நகை வியாபாரி கொழும்பிலுள்ள பிரபல மருத்துவமனையொன்றிலிருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ள அங்கு வரும் படி தெரிவித்துள்ளார்.

இதே சமயம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சாதாரண உடையில் அங்கு காத்திருந்துள்ளனர். கடத்தில் குழுவைச் சேர்ந்த இராணுவ மேஜர் மருத்துவமனையின் மேல் மாடியிலிருந்த நகை வியாபாரியிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போது அவர் கைது செய்யப்பட்டாh. கீழ் மாடியில் காத்திருந்த அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனா. வெளியில் வாகனம் ஒன்றில் காத்திருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் தப்பியோடிவிட்டனர். அவ்விருவரையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

குக்குலேகம தோட்ட மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ முடியாத அச்சநிலை எற்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவிப்பு.

Sivajilingam M K Presidential Candidateஇரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல குகுலேகம தோட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அத்தோட்டத்திற்குச் சென்றுள்ள போதும், அவர்கள் தொடர்ந்தும் அத்தோட்டத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று வந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அங்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அத்தோட்டத்திலுள்ள மக்களிடம் கலந்துரையாடியதாகவும் அம்மக்கள் அத்தோட்டத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 10 குடும்பங்கள் மட்டுமே அத்தோட்ட குடியிருப்பிற்குத் திரும்பி உள்ளதாகவும், அவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாட முடியாது உள்ளதாகவும், அங்குள்ள தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் உடமைகளும் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே தம்மை வந்து பார்வையிட்டதாகவும், வேறு எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ தம்மை வந்து பார்க்கவில்லை எனவும் அம்மக்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related News and Articles:

குக்குலெகம தமிழ் குடும்பங்கள் குடியிருப்பிற்குத் திரும்பின. நட்டஈடு பெற்றுக் கொடுக்க வாசுதேவ நடவடிக்கை.

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Constantine_T_and_Minister_DDயாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் தெரிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இணைய வலையில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்  ( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன் ) பிரதிகளை ‘டயஸ்பொறா டயலக்’ அமைப்பின் சார்பில் ரி கொன்ஸ்ரன்ரைன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார். நேற்று (ஒக்ரோபர் 17 2010) கொழும்பில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாவணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலில் புலம்பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் யாழ் பல்கலைக்கழக்தின் நலன்விரும்பிகளின் நிலைப்பாட்டை தான் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர்களுடைய எண்ணப்பாடுகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யும்படி கோரும் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை எனத் தெரிவித்த ரி கொன்ஸ்ரன்ரைன் நலன்விரும்பிகள் தொடர்ந்தும் கையெழுத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm இக்கையொப்பப் போராட்டத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்காவிடம் ஒக்ரோபர் 21ல் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் அமைப்பது பற்றி வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு அமைச்சருடன் சந்திப்பு:

இந்நிகழ்வுக்கு முன்னதாக வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் (Institution of Engineers Sri Lanka – North)  குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது தொடர்பாக இக்குழு இச்சந்திப்பை மேற்கொண்டது. இச்சந்திப்பின் போது அமைச்சரின் அழைப்பில் ரி கொன்ஸ்ரன்ரைன்,  மற்றும் பேராசிரியரும் ஒக்ரோபர் 6 பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவருமான  பாலசுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழுவிற்கு இலங்கை மின்சாரத் திணைக்களத்தின் ஜிஎம் ஆர் முத்துராமநாதன் தலைமை தாங்கினார். இக்குழுவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், டொக்டர் அற்புதராஜன், டொக்டர் பிரபாகரன், தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நவரட்ணராஜா கலந்துகொள்வதாக இருந்த போதும் அவரால் இச்சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

Minister_DD_17Oct10_Colomboஇச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆலோசகர் திருமதி விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ”என்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்களை விட்டனர். எனது மகளுக்கு அவளுடைய தம்பியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டினர். மனைவியை வெள்ளைச் சேலை அணிய வேண்டி வரும் என மிரட்டினர். உங்களைப் போன்ற தைரியம் எனக்கில்லை. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.

இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு அங்கு கடமையாற்றுகின்ற பேராசிரியர்களே காரணம் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிருப்தியும் வெளிப்பட்டது.

வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு அமைச்சரின் ஒத்துழைப்பையும் கோரினர். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் பீடத்தை அமைக்க வேண்டும் என்று சில அறிக்கைகளை வெளியிட்டதற்கு அப்பால் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக கிடப்பிலேயே உள்ளது. அதனால் வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு தங்கள் ஆர்வமேலீட்டால் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டனர்.

”பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது என்பது சாதாரண விடயமல்ல” என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான திட்ட ஆவணங்களையும் திட்ட வரைபுகளையும் தயாரித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். பொறியியல் பீடத்திற்கான திட்ட ஆவணங்களும் திட்ட வரைபுகளும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் அது பற்றி கவனம் கொள்ளாததால் அமைச்சர் தன்னைச் சந்தித்த பொறியியலாளர் குழுவிடம் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கருத்து வெளியிட்ட விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், ”முறையான திட்ட ஆவணங்கதை தயாரித்து வந்தால் 2011 – 2012 நிதி ஆண்டிலேயே அந்த நிதிக் கோரிக்கையை வைக்கமுடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் பொதுத்துறைக்கான நிதியை குறைக்கின்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு இந்தியாவினதும் சர்வதேச அணுசரனையுடனும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கான உதவியைப் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”இந்தியா உதவி அளிப்பதாக செய்திகள் வந்ததைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தான் அங்குள்ள கல்வியியலாளர்களுடன் பேசும்போது அவர்கள் அவ்வாறான எவ்வித உதவியும் வழங்கப்படுவது பற்றி அறிந்திருக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.

Minister_DD_17Oct10_Colomboஇது பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ”அரசாங்கம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகள் பலனளிக்காது” எனத் தெரிவித்தார். ”இலங்கையில் இவ்வளவு மோசமான அழிவுக்கு வித்திட்டதில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டினார். ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது” எனவும் சந்திரமோகன் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கு தான் முழு முயற்சி எடுப்பேன் என உறுதியளித்த அமைச்சர் வேண்டிய அவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அமைச்சரவையில் முன்வைத்து வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்தார்.

(தகவல் ரி கொன்ஸ்ரன்ரைன்)

._._._._._.

லண்டன் குரல் (ஒக்ரோபர் 07 2010) இதழ் 36ல் வெளியான செய்தி:

தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வர வேண்டும்!

யாழ் பல்கலையின் நலன்விரும்பிகள் இணைய வலையில் கையொப்பப் போராட்டம்!!!

University_of_Jaffna”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”
எஸ் சுவர்னஜோதி, ஓடிறர் ஜென்ரல், ஓடிற் 2009 

இது மலையெனக் குவிந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சீரழிவின் ஒரு சிறு பகுதியே.

யுத்த சூழலில் இருந்து மீண்டுள்ள தமிழ்க் கல்விச் சமூகம் தமது கல்விக் கட்டமைப்புகளில் உள்ள சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளினால் அதிர்ந்து போயுள்ளனர். தமிழ் சமூகத்தினை வேரறுக்கும் அளவிற்கு கல்விக் கட்டமைப்புகளில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், மோசடி, பாலியல் பலாத்காரம் என்பன மலிந்து போயுள்ளன. யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் அர்த்தமற்றவையாகிக் கொண்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தைச் இச்சீரழிவில் இருந்து மீள்விக்க அமைச்சர் தேவானந்தாவும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நலன்விரும்பிகள் இணையப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நவம்பரில் நடைபெறவுள்ள யாழ் பல்கலையின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில் இப்பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்ததொரு பல்கலைக் கழகமாக்க கனவு கண்ட பேராசிரியர் கைலாசபதியின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே அமைச்சர் தேவானந்தாவும் கவுன்சில் உறுப்பினர்களும் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் ரரின் கொன்ஸ்ரன்ரைன்.

இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம், கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமரன், வரலாற்றுத்துறையின் தலைவர் பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் முக்கியமாகப் போட்டியிடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகம் சீரழிந்து கீழ்நிலைக்குச் சென்றதற்கு மிகமுக்கிய பொறுப்புக்களில் இருந்த இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் பல நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இவர்களே காரணமாகவும் இருந்தள்ளனர்.

அதனால் யாழ் பல்கலைக்கழகத்தை மீள்விக்க சிரழிவுக்கு வெளியே இருந்து கல்வித் தகமையும், நிர்வாகத் திறனும் உடைய ஒருவரைக் கொண்டுவருவதே பொருத்தமானது என போராட்டத்தில் இணைந்து கையொப்பம் இட்டுள்ள பலரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் உபவேந்தர் பதவிக்கு போட்டியிடுகின்ற சர்வதேச பல்கலைக்கழக அனுபவமும் தகமையும் நிர்வாகத் திறனும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களே இப்பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறார்.

Douglas_and_Studentதமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ் கல்விச் சமூகத்தை 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கட்டியெழுப்ப விரும்பினால் அமைச்சர் தேவானந்தா பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு நீண்டகாலம் தம் அரசியல் ஆதரவை வழங்கிவரும் வி சிவலிங்கம், எம் சூரியசேகரம், ராஜேஸ் பாலா உட்படப் பலர் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹூல் இலங்கையிலேயே தகமைபெற்ற ஒருவர் என்றும் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கு வாழத்துக்கள் என்றும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா ரிபிசி வானொலியில் தெரிவித்து இருந்தார்.

தமிழ் மக்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அமைச்சர், பரிசு பெறும் மாணவி தன் காலத்தில் யாழ் பல்கலையில் பாதுகாப்பாகவும் பெருமிதத்துடனும் கற்க வழிசெய்வார் என நம்புவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

பொன்சேகாவின் மேன்முறையீடு நாளை பரிசீலனைக்கு

sarath-fonseka.jpgஇரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பினை ரத்து செய்யுமாறுக் கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மேன்முறையீடு நாளைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரஞ்சித் சில்வா மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு இன்று கவனத்தில் கொள்ளப்பட்ட வேளையில் நாளை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை நாளை மேன்முறையிட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளார். எனினும் அதற்கு அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் மனுதாரர் என்ற வகையில் சரத் பொன்சேகாவை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் குழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

ranjan1.jpgநிதி மோசடியில் ஈடுபட்டார் என குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, 15 ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் எம்.பிக்கள் தூதுக்குழு இலங்கை விஜயம்

பொது நலவாய நாடுகளின் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்று நேற்று இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர். இக்காலப் பகுதியினுள் நாட்டின் முக்கிய பல தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவரெனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இத்தூதுக்குழு நாளை (19) செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மில்ரோய் இன்று யாழ் விஜயம்; ரயில் நிலையத்தில் தங்கியுள்ள குடும்பங்களுடன் சந்திப்பு

தமது பூர்வீக பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியமர்த்தக் கோரி யாழ். ரயில்வே நிலையத்தில் தங்கியிருக்கும் 100 சிங்கள குடும்பத்தவர்களையும் சந்திப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இன்று (18) யாழ்ப்பாணம் செல்கிறார்.

யாழ்ப்பாணம் அரச அதிபர் இமெல்டா சுகுமார், வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோருடன் அமைச்சர் மில்ரோய் இம்மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பாரெனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வெலிக்கடைக்குள் பொன்சேகா கைதி; நாங்கள் இலங்கைத் தீவுக்குள் அரசியல் கைதிகள் – ரணில்

ranils.jpgஎவருடைய வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்ய முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கிஸை, ஸ்ரீ ரம்ய விகாரையில் சரத் பொன்சேகாவின் விடுதலையின் நிமித்தம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற மத வழிபாடுகளின் இறுதியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “சரத் பொன்சேகா எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்றபோதும் அவர் ஆலோசனைகளை மீறியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆலோசனைகளை மீறுவதென்பது சட்டத்தை மீறுவதாகாது. அது மட்டுமல்லாது சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ணவுக்கும் ஹைகோப் நிறுவனத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லையென நிறுவனங்கள் பதிவாளர் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கிறார்.

சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நிராகரித்து படையினர் அனைவரையும் காப்பாற்ற என்னால் முடிந்திருந்தது என்றால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் பாதுகாத்துக் கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படாதது ஏன் என்பது எமது கேள்வியாக இருக்கிறது. சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி நிலை, அவரது ஓய்வூதியம் போன்றவற்றைப் பறித்து, அவரை சிறை வைத்ததன் மூலம் அரசாங்கம் படையினரைக் கணக்கில் எடுக்காமல் மதிக்குகாமலுமே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இராணுவ சட்டத்தின் கீழ் இரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு எனது கையெடுத்திட்டு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதேபோல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை வலியுறுத்தி கையெழுத்திடும் மக்கள் மனுவுக்கு நான் உட்பட பலரும் கையெழுத்திட்டோம். அப்படி என்றால் சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானவையே. உண்மையில் சரத் பொன்சேகா மட்டுமன்றி இந்த நாட்டின் சகல மக்களுமே அரசியல் கைதிகள் தான். சரத் பொன்சேகா வெலிக்கடையில் அரசியல் கைதியாக இருப்பதுடன், நாம் அனைவரும் இலங்கை எனும் தீவினுள் அரசியல் கைதிகளாக இருக்கிறோம்  என்று தெரிவித்துள்ளார்.